Published:Updated:

கொடநாடு வழக்கு : கால அவகாசம் கேட்ட விசாரணைக்குழு; ரமேஷை 5 நாள் கஸ்டடியில் எடுத்த போலீஸார்!

கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையைத் தொடர இன்னும் கால அவகாசம் வேண்டும் என காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்டத் தீர்ப்பு வழங்கும் நிலைக்கு எட்டியிருக்கிறது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு. தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்பு தலைகீழான காட்சி மாற்றம் ஏற்பட்டு, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 17-ம் சயானின் 2 மணி நேர ரகசிய வாக்குமூலத்துடன் தொடங்கிய கூடுதல் விசாரணை 2 மாதங்களுக்கு மேலாகப் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கொடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரருக்கு 5 நாள் போலீஸ் காவல்... ஊட்டி நீதிமன்றத்தில் நடந்தது என்ன?!
Kodanad case enquiry
Kodanad case enquiry

கூடுதல் புலன் விசாரணையில் தற்போது வரை 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், தற்கொலை செய்துகொண்ட கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமாரின் வழக்கிலும், இந்த வழக்கிலும் முதன்மை குற்றவாளியாகக் காவல்துறையால் கனகராஜ் என்பவர் சேர்க்கப்பட்டார். ஆனால், வாகன விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்ததால், அந்த விபத்து வழக்குடன் சேர்த்து மொத்தம் இரண்டு கிளை வழக்குகளுக்கும் மறு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக போலீஸார் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய இருவரையும் சில தினங்களுக்கு முன்பு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரில் போலீஸார், தனபாலை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Kodanad case enquiry
Kodanad case enquiry

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது. எதிர்த்தரப்பில் சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய மூவர் மட்டுமே ஆஜராகி இருந்தனர். அப்போது, கூடுதல் விசாரணையைத் தொடர இன்னும் கால அவகாசம் வேண்டும் என காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி சஞ்சய்பாபா, கிட்டத்தட்ட ஒரு மாத கால அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற நவம்பர் மாதம் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனகராஜின் சகோதரர் தனபாலை போலீஸார் கஸ்டடியில் எடுத்த விசாரித்து வரும் நிலையில், கனகராஜின் உறவினர் ரமேஷையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. ரமேஷை போலீஸ் கஸ்டடியில் எடுக்க ரமேஷ் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, சில நிபந்தனைகளுடன் ரமேஷை 5 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

Kodanad case enquiry
Kodanad case enquiry

இந்த வழக்கு விசாரணை குறித்து நம்மிடம் பேசிய அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான்,"இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த இன்னும் அதிகமாகக் கால அவகாசம் தேவைப்படுகிறது. நாங்கள் நபர்களை முடிவு செய்துவிட்டு ஆதாரங்களைத் தேடவில்லை. ஆதாரங்களை முழுமையாகத் திரட்டிவிட்டு, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளைத் தொடர்வோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு