Published:Updated:

கொடநாடு: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் குடும்பத்தினரிடம் 2-வது நாளாகத் தொடரும் விசாரணை!

கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றி சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் தினேஷ்குமாரின் பெற்றோர், சகோதரியிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொடநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று சிசிடிவி கேமராக்கள் ஏன் இயங்கவில்லை என்பது இன்றளவும் விலகாத மர்மமாகவே இருந்துவருகிறது. கொடநாடு பங்களாவுக்குள் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து தற்போதைய கூடுதல் விசாரணையில் தனிப்படை போலீஸார் தூசுதட்டி விசாரித்துவருகின்றனர்.

தினேஷ் குடும்பம்
தினேஷ் குடும்பம்
கொடநாடு:`புலன் விசாரணையை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்'-எதிர்த்தரப்பு கேட்பதன் பின்னணி?!

கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிவந்த தினேஷ்குமார் என்ற இளைஞர், கொடநாடு சம்பவம் நடந்த இரண்டு மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, அவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், இது சாதாரண தற்கொலை வழக்காகவே சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டது.

தற்போது நடைபெற்றுவரும் கூடுதல் விசாரணையில், தினேஷ்குமார் தற்கொலை வழக்கை மறு விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். இது குறித்து கோத்தகிரி தாசில்தாரிடம் அனுமதி கேட்டு தனிப்படை போலீஸார் மனு அளித்திருந்தனர். இதற்கிடையில் நேற்று மாலை தினேஷ்குமாரின் தந்தை போஜனிடம் அவரது வீட்டில்வைத்தே சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவரும் தினேஷ்குமாரின் சகோதரி ராதிகாவையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், ``இவர்கள் இருவரும் பல்வேறு தகவல்களை அளித்துள்ளனர். கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பதன் மூலம் வழக்கில் முக்கியத் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கனகராஜின் விபத்து வழக்கையும் மறு விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்"என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு