Published:Updated:

`போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவல்’-வெளிநாட்டுக்குக் கடத்தவிருந்த கோடியக்கரை கோயில் சிலைகள் மீட்பு!

மு.இராகவன்

நாகை மாவட்டம், கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள் மீட்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Statues
Statues ( prasanna venkatesh )

நாகை மாவட்டம், கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள் மீட்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

Mens Arrested in Statue theft case
Mens Arrested in Statue theft case
prasanna venkatesh

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோயிலிலிருந்த முருகன், வள்ளி , தெய்வானை, மாரியம்மன் ஆகிய நான்கு சிலைகள் கடந்த 16 - ம் தேதி இரவு மர்ம நபர்களால் களவாடப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே உள்ளூர் பெண் சாமியாடி ஒருவர், ``களவுபோன சிலைகள் இந்த எல்லைக்குள் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன" என்று அருள்வாக்கு கூறியதை நம்பி நான்கு நாள்களாக கிராமத்தினர் வேலைக்கும் போகாமல் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கோடியக்கரை காட்டில் களவுபோன சிலைகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள் திருக்குவளை அருகே உள்ள ராமன்கோட்டகம் என்ற கிராமத்தில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முந்தினம்(ஆகஸ்ட் 21) அதிகாலை அங்கு சென்ற தனிப்படை போலீஸார் ராமன் கோட்டகம் காலனி தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் வீட்டைச் சுற்றிவளைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சாக்குமூட்டையில் மூன்று சிலைகள் இருப்பதைக் கண்ட போலீஸார் உடனடியாக அதைக் கைப்பற்றினர். இதையடுத்து சிலைகளை பதுக்கி வைத்திருந்த வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரைச் சேர்ந்த சுப்பையன் மகன் லோகேஸ்வரன், சக்திவேல் மகன் உதயராஜன், சின்னத்தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.

Statues
Statues
`கொள்ளைபோன ஐம்பொன் சிலைகள்; அருள்வாக்கு சொன்ன பெண்!’ - கோடியக்கரை காட்டில் தேடும் கிராமத்தினர்

அவர்களிடமிருந்து வள்ளி, தெய்வானை சிலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய இண்டிகோ காரையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளை போன மற்ற சிலைகள் குறித்தும்,கொள்ளையில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் பல லட்ச ரூபாய் மதிப்புடையது எனவும், இந்தச் சிலைகள் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையிடப்பட்ட ஐம்பொன் சிலைகளை ஐந்நே நாள்களில் கண்டறிந்த தனிப்படை போலீஸாரை நாகை எஸ்.பி.ராஜசேகரன் வெகுவாகப் பாராட்டினார்.