Published:Updated:

`2 மாதங்களுக்கு முன் மாயமான தொழிலாளி!' - கொள்ளிடம் போலீஸாரை அதிரவைத்த விசாரணை

காவல் நிலையம் கொள்ளிடம்
காவல் நிலையம் கொள்ளிடம்

கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள முதலைமேடு திட்டு கிராமத்தில், 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எலும்புகள்
எலும்புகள்

கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பராயனின் மகன் செல்வராசு (45). இவருக்கு திருமணமாகவில்லை. இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி, அவருக்குச் சொந்தமான ஆடுகளை கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதியில் மேய்ப்பதற்காக ஓட்டிச்சென்றுள்ளார். ஆனால், அன்றிரவு வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து செல்வராசின் தாய் சின்னம்மாள், கடந்த டிசம்பர் மாதம் 20-ம் தேதி, கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், நேற்று மாலை முதலைமேடுதிட்டு கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில், மனித எலும்புத் துண்டுகள் சிலவும், செல்வராசு அணிந்திருந்த உடை கிழிந்த நிலையிலும் கிடந்ததை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்திருக்கின்றனர். இதுதொடர்பாக, கொள்ளிடம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கொள்ளிடம் போலீஸார், சீர்காழி அரசு மருத்துவமனை மருத்துவர் கண்ணன் ஆகியோருடன் சம்பவ இடத்திற்குச் சென்று எலும்புகளைச் சேகரித்து பரிசோதனை செய்தனர். பரிசோதனையில், அந்த எலும்புகள் செல்வராசின் எலும்புகள் எனத் தெரியவந்தது. செல்வராசின் தாய் சின்னம்மாள் மற்றும் உறவினர்கள், இறந்தது செல்வராசு என்பதை உடைகள் மூலம் உறுதிப்படுத்தினர்.

காவல் நிலையம் கொள்ளிடம்
காவல் நிலையம் கொள்ளிடம்

இறந்த செல்வராசு, அப்பகுதியில் சிலருக்குக் கடன் கொடுத்து வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள். செல்வராசுவைக் கொன்றது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு