Published:Updated:

`எலியைக் கொல்லத்தான் சயனைடு கொடுத்தேன்; ஜோலியிடம் கொடுத்தது மேத்யூ!'- நண்பர் அதிர்ச்சி வாக்குமூலம்

கேரளா ஜோலி வழக்கு விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் அம்மாநில போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஜோலி
ஜோலி ( Manorama )

கேரளாவை அதிரவைத்த கூடத்தாயி பகுதி தொடர் கொலையில் தினமும் பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் முக்கியக் குற்றவாளியான ஜோலி ஜோசப் கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. காவலர்களின் விசாரணையை எதிர்கொள்ள அனைத்து விதத்திலும் ஜோலி தயாராக இருந்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேத்யூ - ப்ரஜிகுமார்
மேத்யூ - ப்ரஜிகுமார்
Manorama

இந்த வழக்கில் ஆறு பேரை கொலை செய்த ஜோலி ஜோசப், அவருக்கு உதவியாக இருந்து சயனைடு வாங்கிக் கொடுத்த மேத்யூ மற்றும் சயனைடு விற்ற ப்ரஜிகுமார் ஆகிய மூவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது ஜோலியின் இரண்டாவது கணவர் சாஜுவும் காவலர்களின் விசாரணை வளையத்தில் உள்ளார்.

குடும்பத்தில் திடீர் மரணங்கள்!- 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவை பதறவைத்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

இந்நிலையில் சயனைடு எப்படி ஜோலியின் கையிக்குச் சென்றது என்பது பற்றிக் காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் ப்ரஜிகுமார். ``நான் நகைக்கடையில் வேலை செய்கிறேன். எனக்கு மேத்யூ நல்ல பழக்கம். அவரது வீட்டில் உள்ள எலிகளைக் கொள்வதற்காக சயனைடு வேண்டும் எனக் கேட்டு வாங்கிச் சென்றார். அப்போது எதுவும் கேட்காமல் நானும் கொடுத்துவிட்டேன்.

கொல்லப்பட்டவர்கள்
கொல்லப்பட்டவர்கள்
Manorama

பின்னர் மீண்டும் இன்னொரு பாட்டில் கேட்டார். அப்போது நான் அவருக்குக் கொடுக்க தயங்கினேன். இருந்தும் என்னிடம் பேசி அவர் வாங்கிச் சென்றுவிட்டார். ஒரு பாட்டில் ஐந்தாயிரம் என இரண்டு பாட்டில் சயனைடை மேத்யூ வாங்கிச் சென்றார். அவர்தான் அதை ஜோலிக்குக் கொடுத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு! -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்

``தான் மேத்யூவிடமிருந்துதான் இரண்டு பாட்டில் சயனைடு வாங்கினேன்'' என முன்னதாக ஜோலியும் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் மேத்யூவுக்கும், ஜோலிக்கும் என்ன தொடர்பு என்பது பற்றித் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்த மொத்தச் சம்பவங்களும் வெளியில் வரக் காரணமாக இருந்த அதாவது வழக்குப் பதிவு செய்த ராய் தாமஸின் சகோதரர் ரோஜோ தாமஸ் அமெரிக்காவிலிருந்து இன்று காலை கேரளாவுக்கு வந்துள்ளார்.

கேரளா கொலை
கேரளா கொலை
Manorama

இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு போலீஸ் குழுவின் அறிவுரைப்படி ரோஜோ கேரளாவுக்கு வந்துள்ளார். அடுத்த சில நாள்களுக்கு ரோஜோவிடமும் விசாரணை நடைபெறவுள்ளது. மேலும், ஜோலியுடன் தொடர்பில் இருந்தது அம்மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. நேற்று அவரின் வீட்டிலும், அவர் மகனுக்குச் சொந்தமான கடைகளிலும் நடந்த சோதனையில் அங்கிருந்து ஜோலியின் ரேஷன் கார்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

News & Image Credits : Manorama