Published:Updated:

நீலகிரி: ஆன்லைன் சூதாட்டம்; பறிபோன‌ பணம்! - விபரீத முடிவெடுத்த கொடநாடு இளைஞர்

சசிக்குமார்
சசிக்குமார்

ஆன்லைன் சூதாட்டத்தில் அளவுக்கு அதிகமாகப் பணத்தை இழந்த கோத்தகிரியைச்‌ சேர்ந்த இளைஞர் ஒருவர் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கைகாட்டி கூடஹல்லா கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் மன்னனின் மகன் சசிக்குமார். 24 வயதான இவரின் மனைவி கீதா. இவருக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் உண்டு. இவர், கொடநாடு பகுதியிலுள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் சமையலராகப் பணியாற்றி வந்தார். நண்பர்களால் அறிமுகமான ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்த இவர், ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்திருக்கிறார். இதை அறிந்த சசிக்குமாரின் மனைவி, அவ்வப்போது கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அப்போதும் ஆன்லைன் சூதாட்டத்தை விட முடியாமல் தொடர்ந்து ஈடுபட்டுவந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சசிக்குமார்
சசிக்குமார்

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில், கொடநாடு செல்லும் சாலையோரத்திலுள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக அவர் உடலை மீட்டனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, உடலைக் கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த விவகாரம் குறித்துப் பேசிய கோத்தகிரி போலீஸார், ``ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இப்படிச் செய்திருக்கிறார். எந்த வகையான சூதாட்டம் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கிறோம். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோரை தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு