கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் 2018-2019-ம் ஆண்டுகளில், `வி.ஜி.எம் டூர்ஸ் & டிராவல்ஸ்’ என்ற நிறுவனம் இயங்கிவந்தது. நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அதன் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

தங்கள் நிறுவனத்தில் பொதுமக்கள் அவர்களின் காரைக் கொடுத்தால், மாதம் ரூ.10,000 பணம் கொடுப்பதாகவும், புதிய கார்களுக்கான தவணைகள் செலுத்தவேண்டியிருந்தால் தங்கள் நிறுவனமே அதைக் கட்டிக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்கள்.
ஒப்பந்த முறையில் கார்களைத் தாங்களே நிர்வாகம் செய்துகொள்வதாகவும் விளம்பரம் செய்திருக்கின்றனர். மக்களிடமிருந்து பெறும் காரை, டிராவல்ஸ் பிஸினஸுக்குப் பயன்படுத்திக்கொள்வதாகவும, அதற்குக் குறிப்பிட்ட தொகை கொடுப்பதாகவும் ஆசைவார்த்தை கூறியிருக்கின்றனர்.

இதைப் பார்த்து திருப்பூர் பூலுவபட்டியைச் சேர்ந்த சசிகலா ராணி என்பவர் தன் காரைக் கொடுத்திருக்கிறார். அவரைப்போலவே பலரும் வி.ஜி.எம் நிறுவனத்திடம் காரை கொடுத்திருக்கின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள், பொதுமக்களிடம் தொடர்புகொண்டு பேசிவந்திருக்கின்றனர்.
சுமார் 30 புதிய, பழைய கார்களைப் பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம், சில தவணைகள் பணத்தைச் சரியாகவும் வழங்கியிருக்கிறது. பிறகு பணம், கார் எதையும் கொடுக்காமல் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேசனைக் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள எட்டு கார்கள், ரூ.8,00,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
தன்னுடைய மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும், வெங்கடேஷ் வடமாநிலத்தில் இட்லி கடை போட்டு நடத்திவந்திருக்கிறார். தற்போதுவரை அந்தக் கும்பலிடம் 19 கார்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 11 கார் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மக்களிடமிருந்து பெறும் கார்களை வெங்கடேஷ் போலியாகப் புத்தகம் தயாரித்து, பிறருக்கு விற்பனை செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சில கார்களை பழைய மார்க்கெட்டில் கொடுத்து, உருக்குலைத்து விற்றதும் தெரியவந்திருக்கிறது. அதன் பின்னணி குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது தொடர்பாக மேலும் சில கைது நடவடிக்கைகள் தொடரும் என்கிறார்கள் போலீஸார்.