Published:Updated:

`பணத்தைக் கேட்டேன் கொடுக்கல; கட்டையால அடிச்சுட்டேன்!' - கோவில்பட்டியில் சித்தியைக் கொன்ற மகன்

கோவில்பட்டியில் உயிரிழந்த தந்தையின் பணிக்கொடைப் பணத்தினை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் சித்தியை, மகனே மரக்கட்டையால் அடித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கோகிலா - மணிகண்டன்
கோகிலா - மணிகண்டன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற பாண்டி. நியாயவிலைக்கடையில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி, கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட, மகேஷ்வரியின் சகோதரி, கோகிலாவை பாண்டி, 2வதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு கவிதா, மணிகண்டன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2வது மனைவி கோகிலாவிற்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகேந்திரன் என்ற மகனும் உள்ளனர்.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

இதில், கவிதாவிற்கு திருமணமாகிவிட்டது. மணிகண்டன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்து சிறைக்குச் செல்வாராம். இவர் மீது கோவில்பட்டி காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் பாண்டியின் இறப்பிற்காக பணிக்கொடைப் பணம் ரூ.2 லட்சம் அரசிடமிருந்து சமீபத்தில் கோகிலாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தினை பங்கீட்டுக் கொள்வதில் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டு பிரச்னை எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் சிறை சென்ற மணிகண்டன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

 `குடிக்க பணம் தரல; வழக்கம் போலதான் அடித்தேன்' - 80 வயது அப்பாவைக் கொலை செய்த மகன்

வெளியே வந்ததும் தனது சித்தியிடம் அப்பாவின் பணிக்கொடைப் பணத்தினைக் கேட்டு தகராறு செய்தாராம். இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோகிலாவின் மகன் மகேந்திரன், பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளான். இன்று காலையில் சுற்றுலா சென்றுவிட்டு மகேந்திரன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டுருந்தது. கதவைப் பலமுறை தட்டியும் சத்தம் இல்லாததால், வீட்டின் பின்புறம் பார்த்த போது, பின்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. சிறுவன் மகேந்திரன் உள்ளே சென்று பார்த்த போது, தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்தததைக் கண்டு அலறி சத்தம்போட்டு அழுதுள்ளார்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளனர். இத்தகவல் அறிந்து, கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸார், கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கோகிலாவின் உடல் அருகில் ரத்தக்கறை படிந்த சட்டை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மணிகண்டன்தான் கோகிலாவைக் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. மணிகண்டனைப் போலீஸார் கைது செய்தனர்.

மாமனார், கொழுந்தன் கொலை; கணவர் மாயம்!- மாமியார் கடத்தலால் சென்னைப் போலீஸை மிரளவைத்த மேனகா

``என் அப்பாவின் பணிக்கொடைப் பணத்தை பிரித்துக் கொடுக்கும்படி சித்தியிடம் கேட்டேன். இன்று, நாளை.. எனக் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், `பணத்தை தர முடியாது' என்றார். நேற்று இரவும் பணத்தைக் கேட்டேன். `தர முடியாது' என்றே சொன்னார். இதில் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

வீட்டிலிருந்த மரச்சேரை தூக்கி எறிந்தேன். அதிலுள்ள மரக்கட்டையால் அடித்தேன். இதில் சித்தி உயிரிழந்தது தெரிந்ததும் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு வேறு சட்டையை மாற்றிக் கொண்டு அங்கிருந்து போய்விட்டேன்" என போலீஸாரிடம் கூறியுள்ளார். பணத்திற்காக சித்தியை மகனே கொலை செய்த சம்பவம், கோவில்பட்டியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.