Published:Updated:

மனநலம் பாதித்தவருக்குக் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை! -சர்ச்சையில் குளித்தலை அரசு மருத்துவமனை

குளித்தலை அரசு மருத்துவனையை சேர்ந்த மருத்துவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கட்டாய கருத்தடை செய்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்யன்
சத்யன்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள நாப்பாளையத்தைச் சேர்ந்தவர், லோகாம்பாள். இவரது கணவர் கண்ணன், கடந்த 2001 -ம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு முருகேசன், சத்யன், குமரன், செந்தில் மற்றும் ஆறுமுகம் என்று ஐந்து மகன்கள் உள்ளனர். இதில் சத்யன், கடந்த இருபது வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.

 சாலை மறியல்
சாலை மறியல்

இதன் காரணமாக, 50 வயதைக் கடந்தும் இன்னும் இவருக்குத் திருமணமாகவில்லை. இந்நிலையில், குளித்தலை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஆண்களுக்கான கருத்தடை சிறப்பு முகாமுக்கு இவரை வலுக்கட்டாயமாக அழைத்துப் போய், அரசு மருத்துவர் கருத்தடை செய்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

Vikatan

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் முத்துச்செல்வன், ``நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டு வெளியே சென்ற சத்யன், மாலை ஐந்து மணிக்குதான் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அவரது கையில் குளுக்கோஸ் போட்ட ஊசியுடனும் பையில் 1,100 ரூபாய் பணத்தோடும் வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்து, அவரிடம் தாய் லோகாம்பாள் விசாரித்துள்ளார். அப்போதுதான், குளித்தலை அரசு மருத்துவனை அருகே சென்றுகொண்டிருந்தபோது, தன்னை வலுக்கட்டாயமாக மருத்துவர்கள் அழைத்துப் போய், குடும்பநல அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயும் உறவினர்களும் கோபத்தோடு போய் மருத்துவனையில் நியாயம் கேட்டிருக்கிறார்கள்.

முத்துச்செல்வன்
முத்துச்செல்வன்

அவர்கள் தகுந்த பதிலைச் சொல்லாததால், அங்கேயே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். நாங்களும் போராட்டத்தில் கலந்துகொண்டோம். அப்போது, அங்கு வந்த டி.எஸ்.பி கும்மராஜா உள்ளிட்ட போலீஸார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவர் பூமிநாதன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மருத்துவமனை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாகக் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

திருமணமே ஆகாத, அதுவும் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதருக்கு இப்படிக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்கும் மருத்துவரின் செயல், மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அந்த மருத்துவரின் உரிமத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்ய வேண்டும். அதேபோல், காவல்துறை சார்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், குளித்தலை அரசு மருத்துவமனையில் பல சம்பவங்கள் நடக்கின்றன.

சாலை மறியல்
சாலை மறியல்
நா.ராஜமுருகன்

சமீபத்தில், இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், தலைக்கேறிய போதையோடு வந்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது, மயங்கி கீழே விழுந்த சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், இப்படி மனநலம் பாதித்த ஒருவருக்குக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து, அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைத்திருக்கிறார்கள்" என்றார் கொதிப்புடன்.

இதுகுறித்து, குளித்தலை அரசு மருத்துவமனை தரப்பில் பேசினோம்.

குளித்தலை அரசு மருத்துவமனை
குளித்தலை அரசு மருத்துவமனை

``சத்யன் மனநலம் பாதிக்கப்பட்டவர், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்கிற தகவல்களெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மருத்துவமனையில் நாங்கள் நடத்திய ஆண்களுக்கான சிறப்புக் கருத்தடை முகாமுக்கு அவராகத்தான் வந்தார். அதனால், 50 வயதை கடந்த நிலையில் அவர் காணப்பட்டதால், அவருக்கு திருமணம் ஆகியிருக்கும் என்ற எண்ணத்தில் இப்படிச் செய்துவிட்டோம். அவருக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்கின்றனர்.