Published:Updated:

`ஸ்கெட்ச் போட்டிருக்காங்க... போலீஸ் என்ன செஞ்சீங்க?'-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்த ஐஜி

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

ரவுடிகளுக்கு ஆதரவாக குளித்தலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் இருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்தது.

பாஸ்கர் (சஸ்பெண்டு ஆன ஆய்வாளர்)
பாஸ்கர் (சஸ்பெண்டு ஆன ஆய்வாளர்) ( நா.ராஜமுருகன் )

இரட்டைக் கொலைவழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடியை கோட்டைவிட்ட குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'சமூக ஆர்வலரையும், அவரின் மகனையும் பட்டப்பகலில் வெட்டிக்கொன்ற கும்பலின் தலைவனை கைது செய்யாமல் அசட்டையாக இருந்தது ஏன், இவ்வளவு பெரிய கும்பலை கண்காணிக்காமல் குளித்தலை காவல்நிலைய போலீஸார் என்ன செய்தார்கள்?' என்று நீதிமன்றமும் கண்டித்திருப்பதால், மேற்படி விவகாரம் விறுவிறுப்பாகியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட முதலைப்பட்டி ஏரி
ஆக்கிரமிக்கப்பட்ட முதலைப்பட்டி ஏரி
நா.ராஜமுருகன்

திருச்சி மாவட்டம், இனாம்புலியூரைச் சேர்ந்தவர் வீரமலை. விவசாயியான இவரது மகன் நல்லதம்பி. வீரமலைக்கு கரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் பூக்கள் சாகுபடி செய்து வந்துள்ளார். அதோடு, வீரமலை முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்துவந்துள்ளார்.

`40 ஏக்கர் ஏரியை மீட்டெடுக்க வழக்கு போட்டார்!' - குளித்தலையில் சமூக ஆர்வலர், மகனுக்கு நடந்த பயங்கரம்

அந்தக் கோயிலையொட்டி 198 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி முழுவதும் நூற்றுக்கணக்கானவர்களால், ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. 1990 களில் இருந்தே ஏரியை ஆரம்பித்து, இப்போது முற்றிலும் ஏரி இருந்த சுவடே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து, விவசாய நிலங்களாக மாற்றிவிட்டதாகவும் தெரிகிறது.

கொலைசெய்யப்பட்ட நல்லதம்பி
கொலைசெய்யப்பட்ட நல்லதம்பி
நா.ராஜமுருகன்

இந்நிலையில், 198 ஏக்கர் ஏரியையையும் மீட்க, வீரமலை மனச்சநல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கின் தீர்ப்பில், நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை மீட்க உத்தரவிட்டது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து, முதலைப்பட்டி ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 40 ஏக்கர் இடத்தை மட்டும் முதலில் அளந்து, கல் நட்டிருக்கிறார்கள்.

அப்போது, அதிகாரிகளுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை வீரமலையும், அவரின் மகன் நல்லதம்பியும் சுட்டிக்காட்டியதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை பட்டப்பகலில் நடுரோட்டில் நல்லதம்பியை ஆறுபேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது. பேரனை பள்ளிக்கு அனுப்ப அமர்ந்திருந்த வீரமலையையும் அந்தக் கும்பல் கொடூரமாக படுகொலை செய்தது. இந்தக் கொலையை அதே பகுதிகளைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜெயகாந்தன் தலைமையிலான கும்பல் செய்ததாகச் சொல்லப்பட்டது. முதல்கட்டமாக குளித்தலை காவல்நிலையத்தில் ஜெயகாந்தன், பெருமாள், சசிகுமார் என்ற மூவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கொலைசெய்யப்பட்ட வீரமலை
கொலைசெய்யப்பட்ட வீரமலை
நா.ராஜமுருகன்

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்தக் கொலை சம்பந்தமாக பெருமாள், சண்முகம், பிரபாகரன், ஸ்டாலின், கவியரசன் மற்றும் சசிகுமார் என்ற ஆறு பேர் சரணடைந்தனர். இந்நிலையில், நேற்று இந்த இரட்டைக்கொலை தொடர்பாக போலீஸாரால் தேடப்படும் கூலிப்படைத் தலைவன் ஜெயகாந்தன் மதுரை கோர்ட்டில் சரணடைய சென்றார்.

ஆனால், ஒரிஜினல் சான்றிதழ் இல்லை என கோர்ட் ஊழியர்கள் கூறியதால், அவர் தனது சகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், ஏற்கெனவே இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய ஜெயகாத்தன் பிரபல ரவுடியாவார். அவர் வீரமலைக்கு பலமுறை கொலைமிரட்டல் விடுத்துள்ளார். வீரமலை புகார் கொடுத்தும், அதை குளித்தலை காவல்நிலைய போலீஸார் அசட்டையாக இருந்தார்களாம். இதனால், 'ஜெயகாந்தன் விஷயத்தில் ஏன் குளித்தலை போலீஸார் அலட்சியமாக இருக்கின்றனர்' என்கிற சந்தேகமும் எழுந்தது.

சஸ்பெண்டு ஆர்டர்
சஸ்பெண்டு ஆர்டர்
நா.ராஜமுருகன்

ரவுடிகளுக்கு ஆதரவாக குளித்தலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் இருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில், குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரை சஸ்பெண்டு செய்து மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜூ உத்தரவிட்டுள்ளார். அதோடு, "சமூக ஆர்வலர்களை கொலை செய்ய ஜெயகாந்தன் தலைமையிலான டீம் ஸ்கெட்ச் போட்டிருக்கு. அதைக் கண்காணிக்காமல் குளித்தலை காவல்நிலைய போலீஸார் என்ன செய்தார்கள்?. கொலை நடந்தபிறகும் ஜெயகாந்தனை கைது செய்யாமல் இவ்வளவு அலட்சியம் காட்டவேண்டிய அவசியம் என்ன. இது கண்டிக்கவேண்டிய விசயம்" என்று கண்டித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.