Published:Updated:

குமரி: இரட்டைக் கொலையைத் தொடர்ந்து சூடுபிடிக்கும் கஞ்சா வேட்டை! - ஒரே மாதத்தில் 61 பேர் கைது

கன்னியாகுமரி எஸ்.பி பத்ரி நாராயணன்
கன்னியாகுமரி எஸ்.பி பத்ரி நாராயணன்

'கஞ்சா தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் 56 வழக்குகள் போட்டிருக்கிறோம். 232 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுளது' என்றார் குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா கும்பல் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கன்னியாகுமரி பகுதியில் கஞ்சா கொடுக்கல் வாங்கல் தகராற்றில் இரட்டைக்கொலை கடந்த மாதம் இறுதியில் நடந்தது. இதையடுத்து உஷாரான குமரி போலீஸார், கஞ்சா கும்பலை அதிரடியாக கைது செய்து கஞ்சாக்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 71 செல் போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், 'போதை வேண்டாமே நண்பா' என்ற விழிப்புணர்வு குறும்படத்தை எஸ்.பி பத்ரி நாராயணன் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எஸ்.பி பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஏழு லட்சம் மதிப்புள்ள 71 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் காணாமல்போன 500 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன மொபைல்களை உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி
காணாமல்போன மொபைல்களை உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி

கஞ்சா தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் 56 வழக்குகள் போட்டிருக்கிறோம். அதில் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 232 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுளது. கஞ்சா கடத்தும் நெட்வொர்க்கின் இடைப்பட்ட நபர்களைதான் கைது செய்துள்ளோம். முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு மாதத்தில் 121 ரெளடிகளிடம் நன்னடத்தை பிணையம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. 20 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது விற்பனை சம்பந்தமாக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 197 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,500 லிட்டர் மது பறிமுதல் செய்யப்படுள்ளது.

கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில் நடந்த சோதனையில் 952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 10-ம் தேதி முதல் இன்றுவரை முக கவசம் அணியாதவர்கள் மீது 30 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதன் மூலம் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்காத ஆயிரம் பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாமல், சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள், ஓவர் ஸ்பீட் ஆகியவற்றில் கடந்த 15 நாட்களில் ஐம்பதாயிரம் வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதனால் தினமும் 8, 9 விபத்துகள் நடந்துவந்த நிலையில் தற்போது ஒன்று, இரண்டுதான் நடக்கின்றன.

கஞ்சா வழக்கில் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேட்டி அளித்த எஸ்.பி
கஞ்சா வழக்கில் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேட்டி அளித்த எஸ்.பி

கஞ்சா மற்றும் ரெளடிகள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் எண்ணில் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் கேமரா அமைக்க மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். கேமரா அமைக்கும்போது எந்தெந்த வாகனங்கள் கடந்து சென்றுள்ளன என்ற விபரம் மற்றும் வாகனங்களின் எண் தெரிந்து விடும். நாகர்கோவில் நகரில் 150 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ரோட்டோரங்களில் அரசு நிதி பெற்று கேமரா வைக்கிறோம். ஒவ்வொரு காவல் நிலையத்தின் முக்கிய ஜங்சன்களும் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. தனியார் மூலம் பல பகுதிகளில் சி.சி.டி.வி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு