Election bannerElection banner
Published:Updated:

கும்பகோணம்: பத்திரிகை கொடுப்பதுபோல் வந்து எண்ணெய் வியாபாரி கொலை - 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ( ம.அரவிந்த் )

கும்பகோணத்தில் மர்மாக இருந்த எண்ணெய் வியாபாரியின் கொலை வழக்கில் ஐந்து பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த எண்ணெய் வியாபாரி ஒருவரின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டைனையுடன், தலா 10 ஆண்டுகள் கூடுதல் சிறைத் தண்டனையும் விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

கொலைசெய்யப்பட்ட ராமநாதன்
கொலைசெய்யப்பட்ட ராமநாதன்

கும்பகோணம், மேலக்காவிரி பகுதியைச் சேர்ந்தவர் எண்ணெய் வியாபாரி ராமநாதன்(63). இவர் 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் தனது மனைவி விஜயாவுடன் வீட்டில் இருந்தபோது, திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் வந்த மர்ம நபர்கள் ராமநாதனின் மனைவி விஜயாவை தனி அறையில்வைத்துப் பூட்டிவிட்டு, ராமநாதனைக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தக் கொலைச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியது. கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதைய கும்பகோணம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக, இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரை நியமித்து தனிக்கவனம் செலுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் தனிப்படை எஸ்.ஐ கண்ணன், கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸ் படையினர் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலை
கொலை

ஆனால் கொலைக்கான எந்தத் தடயமும் சிக்கவில்லை. அந்தப் பகுதியில் செல்போன் டவரில் பதிவான செல் நம்பர்களை ஆராய்ந்து பார்த்ததிலும் போலீஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து குற்றவாளிகள் கொள்ளையடிப்பதற்காக ராமநாதன் வீட்டை நோட்டமிட்டு, அதன் பிறகு திட்டமிட்டு இதில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை மேற்கொணடனர்.

இதையடுத்து கும்பகோணம் ஆல்வான்கோயில் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான தங்கபாண்டியன் மீது போலீஸாருக்குச் சந்தேகம் வந்தது. பின்னர் தங்கபாண்டியன் செல் நம்பருக்கு வந்த அழைப்புகள் எவை என்பதைக் கண்டறிந்தனர். அடிக்கடி நான்கு நம்பர்களிடமிருந்து அவருக்கு போன் வந்ததையும் கண்டுபிடித்தனர். இந்தத் தகவல்களைவைத்து விசாரணையைத் துரிதப்படுத்தியதில், தங்கபாண்டியன், மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சன், வினோத், பாலாஜி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக போலீஸார் உறுதி செய்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு, ஜூலை மாதம் 20-ம் தேதி குற்றவாளிகள் ஐந்து பேரையும் போலீசார் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

கொலை குற்றவாளிகள்
கொலை குற்றவாளிகள்

ரஞ்சன் செல்போன் டவர் கம்பெனி ஒன்றில் வேலை செய்தவர் என்பதால், அது குறித்து விவரங்கள் தெரிந்து வைத்திருந்திருக்கிறார். அதன்படி கொலை செய்யும்போதும், அதற்காக நோட்டமிடும்போதும் செல்போன் ஆன் செய்திருந்தால் போலீஸ் விசாரணையில் மாட்டிக்கொள்வோம் என்பதால், கொலை செய்வதற்கு ஏழு மணி நேரத்துக்கு முன்பே ஐந்து பேரும் ஒரே நேரத்தில் சொல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக, கொலை செய்யப்பட்ட ராமநாதனின் உறவினர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசுத் தரப்பு சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாரிடம் சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நீதிபதி பெஞ்சமின் ஜோசப் விசாரணை மேற்கொண்டார். இதில் குற்றவாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், கொலைக்கான காரணம், கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க மேற்கொண்ட யுக்திகள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தவிதம் உள்ளிட்டவை குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நீதிபதியிடம் விரிவாக ஆதாரங்களுடன் சாட்சியளித்தார்.

சென்னை: திருமண இணையதளம் மூலம் வந்த வரன்! - ஆசிரியையை ஏமாற்றிய 3 குழந்தைகளின் தந்தை

இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி பெஞ்சமின் ஜோசப் கொலையாளிகளின் குற்றம் சந்தேகத்துக்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதையடுத்து தீர்ப்பு வழங்கினார். இதில் கொலைக் குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆண்டுகள் கூடுதல் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதாகவும், இந்த தண்டனைகளை குற்றவாளிகள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தீர்ப்பின்போது நீதிமன்றம் வளாகம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. குற்றவாளிகளின் உறவினர் சுமார் 50 பேர் வரை நீதிமன்றத்தில் திரண்டிருந்தனர். தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, குற்றவாளிகளின் உறவினர்கள் கதறி அழுதனர். இந்தக் கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்ட ராமேஷ்குமார் உள்ளிட்ட போலீஸ் டீமைச் சேர்ந்தவர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு