Published:Updated:

`யூடியூப்... ரேடார் கருவி!’ - கும்பகோணம் அருகே கோயிலில் தங்கப் புதையல் எடுக்க முயன்ற இருவர்

புதையல் எடுக்க பயன்படுத்தபட்ட கருவி
புதையல் எடுக்க பயன்படுத்தபட்ட கருவி

இதற்காக ஆன்லைன் ஷாப்பிங்கில் தரைப் பகுதிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை சோதனை செய்து காண்பிக்கும் ரேடார் கருவியை புக் செய்து ஹைதராபாத்திலிருந்து வரவழைத்தோம்.

கும்பகோணம் அருகே 1,000 ஆண்டு பழைமையான காக்லேஸ்வரர் கோயிலில், தங்கப் புதையல் எடுப்பதற்காக ரேடார் கருவி மூலம் கோயில் வளாகத்தை ஆய்வு செய்து, பள்ளம் தோண்டிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யூடியூபில் இந்தி, ஆங்கிலம் என இது தொடர்பான காட்சிகளைப் பார்த்து திட்டமிட்டதாக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருவி
கருவி

கும்பகோணம் அடுத்த பாகவதபுரத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையான காக்லேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளே புகுந்த இரண்டு நபர்கள், கோயில் வளாகத்தில் திடீரென நவீன கருவிகளைக் கொண்டு பள்ளம் தோண்டியதுடன் ரேடார் கருவி மூலம் கோயில் வளாகத்தில் பூமிக்கடியில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் குருக்கள் மற்றும் அப்பகுதியினர் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கோயிலுக்கு வந்த திருவிடைமருதுார் போலீஸார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இன்ஸ்பெக்டர் விஜயா அந்த இரண்டு பேரிடமும் விசாரணை செய்தார். இதில் அவர்கள் சோழபுரம் உப்புகாரத் தெருவை சேர்ந்த இப்னுகாலிப், பீர்முகமது என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

இதுகுறித்து போலீஸ் விசாரணையில், `மிகவும் பழைமையான கோயில்களில் பூமிக்கடியில் புதையல் இருக்கும். அதில் தங்கம், வைரம், பழங்கால காசுகள் உள்ளிட்டவை கிடைக்கும் எனக் கேள்விப்பட்டோம். மேலும், இதைப் பற்றித் தெரிந்துகொள்ள யூடியூபில் இந்தி, ஆங்கிலம் போன்ற வீடியோக்களைப் பார்த்தோம். அதன் பிறகு, தமிழில் இருந்த வீடியோ ஒன்றில் ஒருவர் கோயிலில் இருந்து பழங்கால கரண்டி ஒன்றை எடுத்துச் செல்வதுபோல் காட்சிகள் இருந்தன.

அதன் பின்னர் நாங்களும் பழைமையான கோயிலில் புதையல் எடுக்கலாம் என நினைத்தோம். இதற்காக ஆன்லைன் ஷாப்பிங்கில் தரைப் பகுதிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை சோதனை செய்து காண்பிக்கும் ரேடார் கருவியை புக் செய்து ஹைதராபாத்திலிருந்து வரவழைத்தோம். அதன் பிறகு நாங்கள் பகல் நேரத்தில் கோயிலை நோட்டமிட்டோம். சில நாள்கள் இதுபோன்று நோட்டமிட்டபடியே புதையல் எடுப்பதற்கான திட்டத்தைத் தீட்டினோம். அதன் பின்னர் நேற்று இரவு புதையல் எடுப்பதற்கான பணியைத் தொடங்கினோம்’’ எனக் கூறியதாகத் தெரிகிறது.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

இதையடுத்து அவர்களிடமிருந்து ரேடார் கருவி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிறப்புப் புலனாய்வு போலீஸாரிடம், இப்னுகாலிட் ரேடார் கருவியை இயக்கிக் காண்பித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக போலீஸார், உண்மையிலேயே அவர்கள் கோயில் வளாகத்தில் தங்கப் புதையல்தான் தேடினார்களா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்கிற கோணத்தில் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு