Published:Updated:

`பெற்றோரின் திட்டம்; கொள்ளையில் மகன்!'- 28 நாள்களில் சிலை திருட்டைக் கண்டுபிடித்த கும்பகோணம் போலீஸ்

சிலைகள்
சிலைகள்

பெற்றோர் மற்றும் மகன் உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சிலை கடத்தலில் ஈடுப்பட்டது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கும்பகோணம் அருகே, பழைமையான கோயில் ஒன்றில் கடந்த மாதம் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் பெற்றோர் மற்றும் அவர்களது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக 4 பேரை கைதுசெய்த போலீஸார், கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளையும் பறிமுதல்செய்தனர். சிலை கொள்ளைபோன 28 நாள்களில், கொள்ளையர்களைக் கைதுசெய்த தனிப்படை போலீஸ் டீமை சமூக ஆர்வலர்கள் பாராட்டிவருகின்றனர்.

மீட்கப்பட்ட சிலைகள்
மீட்கப்பட்ட சிலைகள்

கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் தெற்கு வீதியில், ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்குச் சொந்தமான 200 ஆண்டுகள் பழைமையான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில், கடந்த பிரவரி மாதம் 10-ம் தேதி இரவு, மர்ம நபர்கள் சிலர் கோயில் அர்த்த மண்டபக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

இதையடுத்து, மூலவர் மண்டபம் மற்றும் பத்மாவதி தயார் ஆகிய சந்நிதிகளின் முகப்பில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த அரை அடி உயரம் கொண்ட ஸ்ரீ சீனிவாச பெருமாள் உலோகச்சிலை, ஒன்றரையடி உயரம் கொண்ட ஸ்ரீ பத்மாவதி தயார் உலோகச்சிலை, முக்கால் அடி உயரமுள்ள ஸ்ரீ விஷ்வக்‌ஷேனர் உலோகச்சிலை, தலா ஒன்று வெள்ளிச்சடாரி, வெள்ளிக்கவசம், வெள்ளித்தட்டு மற்றும் வெள்ளிக்கிரீடம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

`22 சிலைகள்; 48 நாள்கள்; பல கோடி மதிப்பு!' - கோயில் கொள்ளை வழக்கில் அதிரடி காட்டிய தஞ்சை போலீஸார்

இதற்கடுத்த நாள் மாலை, கோயில் குருக்களான பராங்குசம் என்பவர், பூஜை செய்வதற்காக கோயிலைத் திறந்திருக்கிறார். அப்போது, மற்ற பொருள்கள் சிதறிக்கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, நிர்வாகிகளுக்குத் தகவல் கூறினார். பின்னர், இதுதொடர்பாகப் பேசிய கோயில் நிர்வாகியான பாலாஜி, சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, கொள்ளையர்களைப் பிடிக்க கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை டீம் சென்னை, காஞ்சிபுரம், தேனி, கம்பம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மீட்கப்பட்ட சிலைகள்
மீட்கப்பட்ட சிலைகள்

இந்நிலையில், கும்பகோணம் கணபதி நகரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், ராமலிங்கமும் அவரது மனைவி ராசாத்தியும் சிலை கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராமலிங்கத்தின் நண்பர் தஞ்சாவூர், பொட்டுவாச்சாவடியைச் சேர்ந்த மெல்வின் சகாயராஜ் மற்றும் ராமலிங்கத்தின் மகன் கமல்ராஜ் உள்ளிட்டோர் சிலையைக் கொள்ளையடித்தது உறுதிசெய்யப்பட்டது. பெற்றோர் மற்றும் மகன் உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இதில் ஈடுப்பட்டது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

`அமாவாசை, சண்டேயில் கொள்ளை; டார்ச் லைட் வெளிச்சத்தில் மது!'- டாஸ்மாக் கொள்ளையனின் வாக்குமூலம்

பின்னர், வீட்டில் பதுங்கி இருந்த அந்த 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த மூன்று சிலைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். சிலைகள் கொள்ளைபோன 28 நாள்களில் துரிதமாகச் செயல்பட்டு, அதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ததுடன், சிலைகளையும் பறிமுதல்செய்த தனிப்படை டீமை காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் பாராட்டிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு