Published:Updated:

`கேரம்போர்டு விளையாட்டால் ஏற்பட்ட மோதல்!' -சண்டையை விலக்கச் சென்ற வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்

பன்னீர்
பன்னீர்

கும்பகோணம் அருகே கேரம்போர்டு விளையாட்டால் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற காய்கறி வியாபாரியை வெட்டிக் கொலை செய்த சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், பன்னீர். வயது 55. இவர், காய்கறி வியாபாரம் செய்துவந்தார். பன்னீரின் உறவினரான ரகுபதியின் மாமன் மகன் மற்றும் அவரது நண்பர்கள், அப்பகுதியில் உள்ள பொதுஇடத்தில் கடந்த 17-ம் தேதி இரவு கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

சடலமாக பன்னீர்
சடலமாக பன்னீர்

அப்போது, மது போதையில் வந்த அதேபகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர், கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களிடம், `இந்த நேரத்தில் இங்கு என்ன விளையாட்டு?' எனத் தகராறில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதை அந்த இளைஞர்கள் ரகுபதியிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, நேற்றிரவு ரகுபதி, அவரது அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர் அருண் ஆகிய மூன்று பேரும் சௌந்தரராஜனிடம் சென்று, `கேரம்போர்டு விளையாடியவர்களிடம் எதற்காக வம்பு செய்தாய்?' எனக் கேட்டுள்ளனர். அப்போது சௌந்தராஜனின் மகன் அருண், அவரது நண்பர்களான பாலாஜி, சுரேஷ் ஆகியோரும் சேர்ந்துகொண்டு ரகுபதி தரப்பினரைத் திட்டியதோடு, தாக்கத் தொடங்கியுள்ளனர்.

புது அவதாரம் எடுக்கக் காத்திருக்கும் டாஸ்மாக் மாஃபியாக்கள்!

இதைக் கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர், `பெரியவங்களை ஏன் மரியாதை இல்லாம கெட்ட வார்த்தையால் திட்டி அடிக்கறீங்க' எனக் கேட்டு சண்டையை விலக்கி சமாதானம் செய்துள்ளார். ஆனால், இதைக் கேட்காத சௌந்தராஜன் தரப்பினர், ரகுபதியையும் அவரது உறவினர்களையும் தொடர்ந்து தாக்கியுள்ளனர். செளந்தரராஜனின் மகன் அருண், கையில் வைத்திருந்த அரிவாளால் சண்டையை விலக்கச் சென்ற பன்னீரின் கழுத்தில் வெட்டியுள்ளார்.

இதை எதிர்பாராத அருகில் இருந்தவர்கள், அதிர்ச்சியடைந்ததுடன் பலத்த காயமடைந்த பன்னீரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பன்னீர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி, அருண் ஆகிய மூன்று பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் டாஸ்மாக் செல்பவர்களால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம்? #VikatanPollResults

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், பன்னீர் கொலைக்குக் காரணமான சௌந்தரராஜன், அவரது மகன் அருண் மற்றும் அவர்களது நண்பர்களான பாலாஜி, சுரேஷ் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ``மதுக்கடைகள் மூடியிருந்தவரை எங்கள் பகுதியில் சண்டைகள் இல்லாமல் இருந்தது. கடைகள் திறந்த உடனேயே குடிபோதையால் சண்டைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. தற்போது, கொலை நடக்கும் அளவுக்குக் கொண்டுசென்றுவிட்டது" என்கின்றனர் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு