Published:Updated:

கேரளா: தரக்குறைவான வீடியோ... யூடியூப் சேனல் நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய பெண்கள்!

யூடியூப் சேனல் நிர்வாகியைத் தாக்கும் பெண்கள்
யூடியூப் சேனல் நிர்வாகியைத் தாக்கும் பெண்கள்

பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் அங்கு சென்று விஜய் நாயரைத் தாக்கும் காட்சியை, அவர்களே முகநூலில் நேரலை செய்திருக்கிறார்கள்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் யூடியூப் சேனல் நடத்திவருகிறார். அவர் தனது யூடியூப் இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் பெண்களை தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பிரபல திரைப்பட டப்பிங் கலைஞர் பாக்கிய லக்ஷ்மி மற்றும் பெண்ணிய சமூகச் செயற்பாட்டாளர்கள் தியா ஸனா, ஸ்ரீலட்சுமி ஆகியோர் திருவனந்தபுரத்திலுள்ள விஜய் நாயரின் வீட்டுக்குச் சென்று அவரை சரமாரியாகத் தாக்கி, கரி ஆயில் (வாகனங்களில் பயன்படுத்திய பழைய ஆயில்) ஊற்றிவிட்டுச் சென்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களையும் அழிக்கவைத்திருக்கிறார்கள்.

பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் அங்கு சென்று விஜய் நாயரைத் தாக்கும் காட்சியை அவர்களே முகநூலில் நேரலை செய்திருக்கிறார்கள். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தாக்கிவிட்டு ஆவேசமாகப் பேசும் பெண்கள்
தாக்கிவிட்டு ஆவேசமாகப் பேசும் பெண்கள்

பாக்ய லக்ஷ்மி குழுவினர் கூட்டாகச் சேர்ந்து தாக்கும்போது விஜய் நாயர், "நீங்கள் மட்டும்தான் பெண்களா... வேறு யாரும் பெண்கள் இல்லையா" எனக் கேட்கிறார். அதற்கும் பெண்கள் ஆவேசமாக தாக்குகிறார்கள். அதைத் தொடர்ந்து மன்னிப்புக் கேட்கும்படி பெண்கள் அமைப்பினர் கூறுகிறார்கள். உடனே விஜய் நாயர், ``கேரளத்திலுள்ள பெண்களை, அறிந்தோ அறியாமலோ வேதனைப்படுத்தியிருந்தால் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்’’ என்றார்.

அதன் பின்னரும் விடாத பெண்கள் அவரது மொபைல்போனை எடுத்துக் கொடுத்து, யூடியூப்பிருந்த வீடியோக்களை அகற்றும்படி கூறினர். உடனே விஜய் நாயர் தனது மொபைல் லாக்கை அகற்றுகிறார். அந்த மொபைலைப் பறித்த பெண்கள் அமைப்பினர் யூடியூபிலிருந்து வீடியோவை அகற்றினர். சுமார் 11 நிமிடம் ஓடுகிறது அந்த வீடியோ. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனக் கூறி யூடியூப் தளத்தில் விஜய் நாயர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அவர்மீது பெண்கள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

யூடியூப் சேனல் நிர்வாகி விஜய் நாயர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்ய லக்ஷ்மி
யூடியூப் சேனல் நிர்வாகி விஜய் நாயர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்ய லக்ஷ்மி

இது குறித்து தம்பானூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளை முயற்சி, அத்துமீறி நுழைதல், கூட்டமாகச் சேர்ந்து தாக்குதல் உள்ளிட்ட ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் பாக்ய லஷ்மியும் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் விஜய் நாயர் மீதும் ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு