Published:Updated:

சென்னை: திருமணத்தின் பெயரில் லட்சக்கணக்கில் கடன் - மோசடி வழக்கில் கைதான தாய், மகள்!

கைதான தாய், மகள்

மகளின் திருமணத்துக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தாய், மகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை: திருமணத்தின் பெயரில் லட்சக்கணக்கில் கடன் - மோசடி வழக்கில் கைதான தாய், மகள்!

மகளின் திருமணத்துக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தாய், மகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published:Updated:
கைதான தாய், மகள்

சென்னை மப்பேடு பதுவஞ்சேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சையத் கலீல் அகமத். இவர் சேலையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். சேலையூர், இந்திராநகர், லட்சுமி அவென்யூ பகுதியைச் சேர்ந்த ரெஜிகுமார் எனக்கு தெரிந்தவர். அவரின் மகள் ஜூலிக்கு கடந்த 22.11.2021-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்காக அவர் என்னிடம் கேட்டு கொண்டதன் பெயரில் பணமாகவும் சீர்வரிசைப் பொருளாகவும் திருமணத்துக்கான கேட்டரிங் வேலை என மொத்தம் ரூ. 4,60,000 வரை செலவு செய்தேன். அந்தப் பணத்தை பல முறை ரெஜிகுமாரிடம் நான் கேட்டும் அவர் தராதததால் நானும் எனது மனைவி கௌர் பேகம் ஆகியோரும் 22.9.2022-ம் தேதி மதியம் அவரின் வீட்டுக்குச் சென்றோம். அப்போது ரெஜி என்னை அசிங்கமாக திட்டியதோடு கையால் என்னை அடித்து விட்டார்.

ரெஜிகுமார்
ரெஜிகுமார்

மேலும் எங்கள் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் ரெஜி, தன்னுடைய மகள் திருமணத்துக்காக கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் 5 லட்சம் ரூபாயை அவர் கடனாகக் கொடுத்தார். மேற்படி பணத்தை மோகன் திருப்பிக் கேட்டதற்கு ரெஜி, 5 லட்சத்துக்கு காசோலையை கொடுத்தார். அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணமில்லை என்று திரும்பவந்துவிட்டது. மேலும் எங்கள் பகுதியில் வசிக்கும் பிரேமா என்பவரிடம் ரெஜி, தன்னுடைய மகளின் திருமணத்துக்காக 1,44,000 ரூபாயை வாங்கியிருந்தார். அதோடு அப்துல் ரகுமான் என்பவரிடம் இருந்து ரெஜி தன்னுடைய மகளின் திருமணத்துக்காக 80,000 ரூபயை வாங்கியிருந்தார். இதைப் போல ஜீவரத்தினம் உள்பட சிலரிடம் ரெஜி கடன் வாங்கியிருந்தார்.

இந்தநிலையில் பணத்தை திரும்ப கேட்ட ஜீவரத்தினம், மோகன், அவரின் மனைவி கவிதா ஆகியோர் மீது ரெஜி கொடுத்த புகாரில் சேலையூர் போலீஸார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அதனால் நாங்கள் அனைவரும் பணத்தை திரும்ப கேட்க பயந்து அமைதியாக இருந்தோம். இந்தநிலையில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணத்தைத் திரும்ப கேட்டபோது எங்களை அவதூறாக ரெஜி பேசிதோடு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே சம்பந்தப்பட்ட ரெஜி, அவரின் மகள் ஜூலி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ரெஜிகுமார், ஜூலி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

கைது
கைது

இதுகுறித்து சேலையூர் போலீஸார் கூறுகையில், ரெஜிக்கு கடன் கொடுத்த ஜீவரத்தினம் உள்ளிட்ட சிலர், ரெஜியை மோசடி கும்பல் என்று போட்டோ போட்டு நோட்டீஸ் ஓட்டினர். அதனால், மனமுடைந்த ரெஜி, நோட்டீஸ் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தார். அதன்பேரில்தான் ஜீவரத்தினம் உள்ளிட்ட சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தோம். தற்போது ரெஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரெஜி, அவரின் மகளைக் கைது செய்திருக்கிறோம். ரெஜியின் மகள் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.