Published:Updated:

சென்னை: முதலில் பாசம்; அடுத்து கைவரிசை - வேலை செய்யும் வீட்டில் திருடிய பெண் சிக்கியது எப்படி?!

திருட்டு வழக்கில் கைதான விஜயலட்சுமி

சர்க்கரை நோயாளியான மூதாட்டிக்கு அதிகளவில் மாத்திரைகளைக் கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

சென்னை: முதலில் பாசம்; அடுத்து கைவரிசை - வேலை செய்யும் வீட்டில் திருடிய பெண் சிக்கியது எப்படி?!

சர்க்கரை நோயாளியான மூதாட்டிக்கு அதிகளவில் மாத்திரைகளைக் கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

Published:Updated:
திருட்டு வழக்கில் கைதான விஜயலட்சுமி

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டிலிருக்கும் தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுசேரியில் உள்ள குடியிருப்பில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மாமியார் ராஜலட்சுமி (62). இவருக்கு உதவி செய்ய பெண் கவனிப்பாளரை திருமூர்த்தி தேடிவந்தார். அப்போது சென்னை முகப்பேரில் உள்ள ஏஜென்ட் ஒருவர் மூலம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் 24 மணி நேரமும் ராஜலட்சுமியை கவனித்துக் கொள்ள பணியமர்த்தப்பட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமூர்த்தி தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஆந்திராவுக்குச் சென்றார். அப்போது சிறுசேரி வீட்டில் ராஜலட்சுமியும் விஜயலட்சுமியும் இருந்தனர்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

இந்தநிலையில் ஊருக்குச் சென்று விட்டு திருமூர்த்தி குடும்பத்தினருடன் வீடு திரும்பிய போது ராஜலட்சுமி சுயநினைவில்லாமல் இருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்து ராஜலட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைக் கவனித்துக் கொள்ள பணியமர்த்தப்பட்ட விஜயலட்சுமி மாயமாகியிருந்தார். இதையடுத்து வீட்டில் உள்ள தங்க நகைகளை திருமூர்த்தி சரிபார்த்தபோது எட்டு சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்தன. அதனால் தாழம்பூர் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். அதன்பேரில் துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் சுதர்சனம், காசிமுருகன், சம்பத், காவலர்கள் மாரிமுத்து, மலர்விழி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் விசாரித்து கொள்ளைச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் விஜயலட்சுமியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்டிருக்கும் விஜயலட்சுமி, கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அதனால், வயதானவர்களைக் கவனிப்பதாகக் கூறி அங்கேயே தங்கியிருந்து வேலைப்பார்த்து வந்திருக்கிறார். சென்னையில் வசிக்கும் விஜயலட்சுமி நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வேலைக்காக சென்றிருக்கிறார். இவர் வேலைப்பார்க்கும் இடங்களில் மிகவும் பாசமாக பழகுவார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்க நகைகள், பணத்தைக் கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஆனால் இவர் மீது யாரும் காவல் நிலையங்களில் புகாரளிக்கவில்லை. தற்போதுதான் தாழம்பூர் காவல் நிலையத்தில் திருமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு அவர் பயன்படுத்தி வரும் செல்போன், சிம் கார்டை தூக்கி எறிந்து விட்டு புதிய நம்பரை விஜயலட்சுமி பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தத் தடவையும் புதிய சிம் கார்டை விஜயலட்சுமி பயன்படுத்தி வந்தாலும் அவர் எங்களிடம் சிக்கிக் கொண்டார். அவரிடமிருந்து தங்க நகைகளைப் பறிமுதல் செய்ததோடு விஜயலட்சுமியை சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

கைது
கைது

இந்த வழக்கை துரிதமாக துப்பு துலக்கிய தனிப்படை போலீஸ் உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸ் டீமை தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டியிருக்கிறார். மேலும், பொதுமக்கள் தனியாக தங்கள் வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு கவனிப்பாளர்களை ஏற்பாடு செய்யும் முன் சில தகவல்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்கள் மீது ஏற்கெனவே காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதா, யார் மூலம் நியமிக்கிறோம், கவனிப்பாளராக நியமிக்கப்படுவோரின் குடும்ப பின்னணி உள்ளிட்ட தகவல்களை சேகரித்த பிறகு நியமித்தால் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க முடியும். அதோடு கவனிப்பார்கள் குறித்த தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையங்களிலும் தெரிவிப்பது காலச்சிறந்தது என்று தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.