Published:Updated:

திருவள்ளூர்: `நான் காரில்தான் செல்வேன், கன்ட்ரோலாகத்தான் இருக்கேன்' - போதையில் அடம்பிடித்த இளம்பெண்

போலீஸாரிடம் ரகளையில் ஈடுபடும் இளம்பெண்
போலீஸாரிடம் ரகளையில் ஈடுபடும் இளம்பெண்

`நான் கன்ட்ரோலாகத்தான் இருக்கேன். அதனால் காரில்தான் செல்வேன்' என திருவள்ளூர் மாவட்ட போலீஸாரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ரகளை செய்திருக்கிறார்.

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றிவந்தார். ஓராண்டாகப் பணியாற்றிய அந்தப் பெண், தன் நண்பர்களுக்கு விருந்தளிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக மணவாள நகர் பகுதியிலுள்ள ஹோட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விருந்தில் பங்கேற்றவர்களுடன் சேர்ந்து இளம்பெண்ணும் மது அருந்தியிருக்கிறார். விருந்து முடிந்ததும், காரில் அவர் ஓரகடத்துக்குச் சென்றுகொண்டிருந்தார்.

வடமாநில இளம்பெண்
வடமாநில இளம்பெண்

போதையில் காரை ஓட்டிய அந்தப் பெண், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். உடனே அந்த வாகனத்தின் உரிமையாளரிடம், `சாரி பிரதர், டேமேஜுக்குரிய பணத்தைத் தந்துவிடுகிறேன்’ எனப் பேசி, பணத்தைக் கொடுத்துவிட்டு காரில் மீண்டும் புறப்பட்டிருக்கிறார். அதன் பிறகும் இன்னொரு வாகனத்தில் அந்தப் பெண் மோதியிருக்கிறார். அந்த வாகன டிரைவரிடமும் பணத்தைக் கொடுத்துவிட்டு காரில் சென்றிருக்கிறார். அந்தப் பெண், இப்படி ஒவ்வொரு வாகனமாக மோதுவதையும் பணத்தைக் கொடுப்பதையும் பார்த்த பொதுமக்கள், திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்ததும், திருவள்ளூர் மாவட்ட போலீஸார் அங்கு வந்தனர். போதையிலிருந்த அந்தப் பெண்ணின் காரை மடக்கி அவரைக் கீழே இறக்கினர். பின்னர் காரைப் பறிமுதல் செய்த போலீஸார் அவரை அங்கிருந்து செல்லும்படிக் கூறினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பெண், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். `நான் காரில்தான் செல்வேன்; கன்ட்ரோலாகத்தான் இருக்கேன்' என்று போதையில் புலம்பியிருக்கிறார். அதைக் கேட்ட போலீஸார் அந்தப் பெண்ணைச் சமதானப்படுத்தியும் அவர் தொடர்ந்து பிரச்னை செய்துகொண்டே இருந்திருக்கிறார். அதனால் டி.எஸ்.பி துரைபாண்டியனுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவரும் சம்பவ இடத்துக்கு வந்து அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீஸாரிடமே அந்தப் பெண் சட்டம் பேசியிருக்கிறார். இதையடுத்து அவரின் செல்போனிலிருந்த நண்பர்களின் நம்பருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

சென்னை: போதையில் காரை ஓட்டிய மருத்துவர்; பழிவாங்க ரோந்து வாகனம் கடத்தல்! - போலீஸார் அதிர்ச்சி
போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் இளம்பெண்
போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் இளம்பெண்

இது குறித்து மணவாளநகர் போலீஸார் விசாரித்துவருகின்றனர். நேற்றிரவு 7:30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பிரச்னை இரவு 9 மணி வரை நீடித்திருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``அந்தப் பெண்ணின் சொந்த மாநிலம் ஹரியானா. இன்ஜினீயரிங் படித்திருக்கும் அவர், பயிற்சிக்காக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவருகிறார். போதையில் இருந்ததால் அவரிடம் முழுமையாக விசாரிக்க முடியவில்லை. அவர் ஓட்டி வந்த ஜீப்பை மட்டும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு