Election bannerElection banner
Published:Updated:

சென்னை: புகாரளிக்க வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைத் தடுக்க எல்லை மீறிய எஸ்.பி சிக்கியது எப்படி?

ஐ.பி.எஸ்
ஐ.பி.எஸ்

காவல்துறை உயரதிகாரி ஒருவர் மீது பாலியல் சீண்டல் புகாரளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைத் தடுத்த குற்றச்சாட்டில் எஸ்.பி ஒருவர் சிக்கியிருக்கிறார்.

தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றிய காவல்துறை உயரதிகாரி ஒருவர், முதல்வரின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்புப் பணிக்காகச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்குவந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான மாவட்ட எஸ்.பி-யை, பணி தொடர்பாகப் பேச வேண்டும் என்று கூறி, தன்னுடைய காரில் வரச் சொல்லியிருக்கிறார்.

காருக்குள் ஏறிய பிறகு, உயரதிகாரி பாலியல்ரீதியாக தொல்லைக் கொடுத்ததாக உள்துறை செயலாளர், டி.ஜி.பி-யிடம் புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்துவருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரி மீதும், அவருக்கு உதவிய மாவட்ட எஸ்.பி ஒருவர் மீதும் எப்ஃ.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

காவல்துறை உயரதிகாரிக்கு உதவிய எஸ்.பி சிக்கியது எப்படி என்று விசாரித்தோம். இது குறித்து நம்மிடம் பேசிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், முக்கியத் தகவல்களைத் தெரிவித்தனர். ``காவல்துறை உயரதிகாரி மீது புகாரளிக்க பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தான் பணியாற்றிய இடத்திலிருந்து காரில் சென்னை நோக்கி வந்திருக்கிறார். அப்போது புகார் தொடர்பாக ஐ.ஜி அந்தஸ்திலிருக்கும் உயரதிகாரியிடம் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தகவலை உயரதிகாரியிடம், அவருக்கு விசுவாசமான ஐ.ஜி அந்தஸ்திலிருக்கும் அதிகாரி போனிலேயே தெரியப்படுத்தியிருக்கிறார். அதன் பிறகே காவல்துறை உயரதிகாரி, பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைச் சமரசப்படுத்த பலவகையில் முயன்றிருக்கிறார். தனக்கு வேண்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு போன் செய்த காவல்துறை உயரதிகாரி விவரத்தைக் கூறி, பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைச் சமரசப்படுத்தும்படி தெரிவித்திருக்கிறார். அவர்களில் சிலர் முயன்றிருக்கிறார்கள். ஆனால் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கூறிய பதிலைக் கேட்ட அவர்கள் அமைதியாகியிருக்கின்றனர்.

டி.ஜி.பி அலுவலகம்
டி.ஜி.பி அலுவலகம்

பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் கார் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அதிரடிப்படையுடன் காவல்துறை உயரதிகாரியின் விசுவாசியான மாவட்ட எஸ்.பி அங்கு வந்திருக்கிறார். ஏதோ தீவிரவாதியைப் பிடிப்பதைப்போல நடுரோட்டிலேயே பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் காரை வழிமறித்த போலீஸ் டீம், காரிலிருந்த டிரைவரையும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பி.எஸ்.ஓ-வையும் இறங்கக் கூறியிருக்கிறது. அதற்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்தச் சமயத்தில் மாவட்ட எஸ்.பி-யுடன் வந்த இன்ஸ்பெக்டர் ஒருவர், காரிலிருந்த சாவியை எடுத்திருக்கிறார். காரில் அமர்ந்திருந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் போனைக் கொடுத்த மாவட்ட எஸ்.பி., `அய்யா லைனில் இருக்கிறார், உங்களுக்கு போன் செய்தாலும் எடுக்கவில்லையாம். பேசுங்கள்' என்று கூறியிருக்கிறார்.

`அதற்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி `நான் யாரிடமும் பேச விரும்பவில்லை. என்னை சென்னைக்குச் செல்ல அனுமதியுங்கள்' என்று கூறியிருக்கிறார்.` நீங்கள் அய்யாவிடம் போனில் பேசுங்கள்' என்று மாவட்ட எஸ்.பி கட்டாயப்படுத்திருக்கிறார். அதனால் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, வேறு வழியின்றி மாவட்ட எஸ்.பி-யின் போன் மூலம், எதிர்முனையிலிருந்த காவல்துறை உயரதிகாரியிடம் பேசியிருக்கிறார். அப்போது புகார் கொடுக்க வேண்டாம் என்று காவல்துறை உயரதிகாரி, பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் கெஞ்சியிருக்கிறார். அதற்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, `என்னை சென்னைக்குச் செல்ல அனுமதியுங்கள்’ என்று பிடிவாதமாகக் கூறியிருக்கிறார்.

ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் புகார்
ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் புகார்

மேலும், மாவட்ட எஸ்.பி-யிடம் `நீங்களும் நானும் ஒரே பதவியில்தான் இருக்கிறோம். தேவையில்லாமல் இந்தப் பிரச்னையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்’ என்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கூறியிருக்கிறார். அதற்கு காவல்துறை உயரதிகாரிக்கு விசுவாசியான அந்த மாவட்ட எஸ்.பி., இது மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று பதிலளித்திருக்கிறார். காவல்துறை உயரதிகாரியிடம் பேசிய பிறகு மாவட்ட எஸ்.பி., பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை சென்னைக்குச் செல்ல அனுமதியளித்திருக்கிறார். இந்தத் தகவலையும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தன்னுடைய புகாரில் குறிப்பிட்டதால் எஃப்.ஐ.ஆரில் மாவட்ட எஸ்.பி-யின் பெயர், சாவியை எடுத்த இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., அதிரடிப்படை போலீஸார் ஆகியோரின் விவரங்களும் இடம்பிடித்திருக்கின்றன. அதனால் சி.பி.சி.ஐ.டி போலீஸார், சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி முதல் காவலர்கள் வரை விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

புகாரளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வேண்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் நம்மிடம், ``காவல்துறையின் உயரதிகாரிகளின் உத்தரவுப்படி நடக்க வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் கடமைதான். அதற்காக ஒரே பதவியிலிருக்கும் பெண் எஸ்.பி-யிடம் இன்னொரு எஸ்.பி இதுபோல நடந்துகொண்டது தவறு. அவர் எதற்காக அப்படி நடந்துகொண்டார் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் அவர் அளிக்கும் தகவல் முக்கியமானது. ஏனெனில் காவல்துறை உயரதிகாரி, மாவட்ட எஸ்.பி-யிடம் என்ன பேசினார், அவர்கள் இருவரும் எவ்வளவு நேரம் போனில் பேசினார்கள் போன்ற விவரங்கள் இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படும். அதோடு இல்லாமல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை சென்னைக்குச் செல்லவிடாமல் தடுக்க காவல்துறை உயரதிகாரி தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளிடம் போனில் பேசியிருக்கிறார். ஆனால், அவர்கள் எல்லோரும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை தடுத்து நிறுத்தவில்லை. சென்னை அருகே பணியாற்றும் மாவட்ட எஸ்.பி மட்டும்தான் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைத் தடுத்து நிறுத்தியதோடு, காவல்துறை உயரதிகாரி சொன்னபடி செய்திருக்கிறார். அதை நீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருக்கிறது.” என்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரித்துவருகிறது. எஃப்.ஐ.ஆரிலிருக்கும் எஸ்.பி மீது இதுவரை துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு அவரின் மேலிட செல்வாக்கே காரணம். சம்பந்தப்பட்ட எஸ்.பி., இதற்கு முன் காவல்துறையில் ஆளுங்கட்சியினருக்கு தகவலைச் சொல்லக்கூடிய முக்கியப் பதவியில் இருந்தார். ஆளுங்கட்சியின் அதிகார மையத்திலிருந்தவர்கள் ஓரங்கட்டப்பட்ட பிறகும் மாவட்ட எஸ்.பி பதவி அவருக்குக் கிடைத்தது. அந்த அளவுக்கு இன்னமும் அவர் செல்வாக்குடன் இருந்துவருகிறார். அதனால்தான் மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அமைதியாக இருக்கிறது. அவர் பணியாற்றும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதூக்கியபோதும் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர் என்பதால், காவல்துறை தலைமை அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ஐ.ஜி ஒருவர் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கூறிய பாலியல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவருகிறது. அதனால் இந்த வழக்கை நீதிமன்றம் கூறியதைப்போல நேரடியாகக் கண்காணித்து, விரைவில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி-யோ தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் `உயரதிகாரியின் உத்தரவைத்தான் நான் செய்தேன். மற்றப்படி அவருக்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கும் இடையே இருந்த பிரச்னை எனக்குத் தெரியாது’ என்று கூறிப் புலம்பிவருகிறராம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு