Published:Updated:

சென்னை: அக்காவைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை! - சிக்கியது எப்படி?

கொலை
கொலை ( Representational Image )

சென்னை மாங்காடு பகுதியில் அக்காவைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கையை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னையை அடுத்த மாங்காடு, சந்திரசேகர் நகரைச் சேர்ந்தவர் தெய்வானை (40). இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தெய்வானையின் மகன் இறந்துவிட்டார். அதனால் தெய்வானை, வீட்டில் தனியாக வசித்துவந்தார். இவரின் தங்கை லட்சுமி. அக்காள் வீட்டுக்கு இன்று அதிகாலை லட்சுமி வந்தார். அப்போது வீட்டுக்குள் தெய்வானை கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக லட்சுமி சத்தம் போட்டார். அதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் தெய்வானை கொலை செய்யப்பட்ட தகவல் மாங்காடு காவல் நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட தெய்வானை
கொலை செய்யப்பட்ட தெய்வானை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தெய்வானையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தெய்வானையைக் கொலை செய்தது யாரென்று போலீஸார் விசாரித்தனர். இந்தக் கொலை தொடர்பாக தெய்வானையின் தங்கை லட்சுமியிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை: மூத்த மகள் கொலை; கடன் தொல்லையால் பேராசிரியை தற்கொலை! 2-வது மகளுடன் எஸ்கேப்பான கணவர் கைது

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தெய்வானையும் அவரின் கணவரும் துபாயில் வேலை பார்த்தனர். இவர்களின் மகன் சென்னையிலுள்ள தெய்வானையின் தங்கை லட்சுமி வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெய்வானையின் மகன் இறந்துவிட்டார். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு தெய்வானை துபாயிலிருந்து சென்னை திரும்பினார். வெளிநாட்டிலிருக்கும்போது தங்கையின் குடும்பச் செலவுக்கு தெய்வானை பணம் அனுப்பிவந்திருக்கிறார். சென்னை திரும்பிய பிறகும் தங்கையின் குடும்பத்தை தெய்வானை கவனித்துவந்தார். ஆனால் தங்கை லட்சுமியின் கணவர் ரமேஷ், வேலைக்கு எங்கும் செல்லாமல் குடித்துவிட்டு தெய்வானையுடன் தகராறில் ஈடுபட்டுவந்திருக்கிறார். அதனால் தங்கையையும், அவரின் கணவரையும் வீட்டைவிட்டு வெளியில் செல்லும்படி தெய்வானை கூறியதோடு, சொத்தையும் தரமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் லட்சுமியும், அவரின் கணவர் ரமேஷும் தெய்வானையுடன் வாக்குவாதம் செய்திருக்கின்றனர்.

சடலம்
சடலம்

இதில் ஆத்திரமடைந்த லட்சுமியும் அவரின் கணவர் ரமேஷும் சேர்ந்து தெய்வானையைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். அதற்காக வீட்டின் பின்பக்கச் சுவர் வழியாக ஏறிக் குதித்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் தெய்வானை தூங்கிக்கொண்டிருந்தார். அவரின் வாயை லட்சுமி பொத்திக்கொண்டார். அப்போது ரமேஷ், கத்தியால் தெய்வானையைக் குத்தியிருக்கிறார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலையை மறைக்க லட்சுமி நாடகமாடுவதற்காக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் குடும்பத்தோடு தூங்கிக்கொண்டிருந்தபோது தன்னுடைய வாயில் மதுபானத்தை மர்ம நபர்கள் ஊற்றி கொலைக் செய்ய முயறதாகக் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய அக்காள் தெய்வானை மீது சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் லட்சுமி தெரிவித்திருந்தார். தெய்வானை கொலை செய்யப்பட்டதும் லட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோதுதான் தெய்வானையைக் கொலை செய்தது தெரியவந்தது. அதனால் லட்சுமியைக் கைதுசெய்திருக்கிறோம். அவரின் கணவர் ரமேஷைத் தேடிவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு