Published:Updated:

`ராயப்பேட்டையில் கொலை; மதுராந்தகம் கிணற்றில் சடலம்' - 'கந்துவட்டி' அல்போன்ஸை தீர்த்துக்கட்டியது எப்படி?

அல்போன்ஸ்மேரி
அல்போன்ஸ்மேரி

'வட்டிப்பணம் தருகிறோம்' என்று கூறி வீட்டுக்கு வரவழைத்த பெண் வியாபாரியைக் கொடூரமாகக் கொலை செய்து, நகைகளைப் பறித்த கும்பல் போலீஸிடம் சிக்கியுள்ளது.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர், இருதயநாதன். இவரின் மனைவி அல்போன்ஸ் மேரி (42). இவர், அந்தப் பகுதியில் இட்லி மாவு வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு குழந்தை இல்லை. இவர், வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். கடந்த 15-ம் தேதி, மெரினாவுக்குச் சென்று மீன் வாங்கிவருவதாகக் கூறிவிட்டுச் சென்ற அல்போன்ஸ் மேரி, வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் கணவர் இருதயநாதன், மனைவியைக் காணவில்லை என ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பால் ஸ்டீபன் விசாரணை நடத்தினார். அல்போன்ஸ் மேரியை ஐஸ்ஹவுஸ் போலீஸார் தேடிவந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது.

 கொலை வழக்கில் கைதான தேவி
கொலை வழக்கில் கைதான தேவி

அல்போன்ஸ் மேரியின் சடலம், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒரு கிணற்றில் மிதப்பதாக ஐஸ்ஹவுஸ் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனால் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி நம்மிடம் கூறுகையில், ``அல்போன்ஸ் மேரியின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது, ராயப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரிடம் பேசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் பெண் குறித்து விசாரித்தபோது, அவர் அல்போன்ஸ் மேரியிடம் வட்டிக்கு பணம் வாங்கிய தகவல் கிடைத்தது. இதனால், அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தோம். அப்போது அவர், `அல்போன்ஸ் மேரியிடம் வட்டிக்குப் பணம் வாங்கியது உண்மைதான்.

அல்போன்ஸ்மேரி கொலை வழக்கில் கைதானவர்
அல்போன்ஸ்மேரி கொலை வழக்கில் கைதானவர்

வட்டிக்காக என் நகைகளைக்கூட விற்று அல்போன்ஸ் மேரிக்கு பணம் கொடுத்துள்ளேன்' என்று கண்ணீர் மல்க கூறினார். அதோடு, அல்போன்ஸ் மேரியைக் காணவில்லையா என்று ஆச்சர்யமாகக் கேட்டார். அந்தப் பெண்ணின் பேச்சுக்கும் அவரின் நடவடிக்கைகளுக்கும் முரண்பாடு இருந்தது. மேலும், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அந்தப் பெண் கூறினார்.

இதனால், அந்தப் பெண்மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை ரகசியமாகக் கண்காணித்தபோது, அந்தப் பெண்தான் அல்போன்ஸ் மேரியைக் கொலை செய்தது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களுடன் விசாரித்தபோது, அல்போன்ஸ் மேரியை அந்தப் பெண் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் வள்ளி, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

கொலை வழக்கில் கைதானவர்
கொலை வழக்கில் கைதானவர்

வள்ளியுடன் சேர்ந்து, ராயப்பேட்டையைச் சேர்ந்த மணி, அவரின் மனைவி தேவி, மணியின் சகோதரர் சுரேஷ் ஆகியோருக்கும் அல்போன்ஸ் மேரி கொலையில் தொடர்பு இருக்கும் தகவல் விசாரணையில் தெரிந்தது. இதனால் வள்ளி, மணி, தேவி, சுரேஷ் ஆகிய 4 பேரைக் கைதுசெய்துள்ளோம். அல்போன்ஸ் மேரியை கொலை செய்த இவர்கள், சடலத்தை ஆட்டோவில் ஏற்றி மதுராந்தகம் அருகே உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். அல்போன்ஸ் மேரி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்யுள்ளோம்" என்றார்.

போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று அல்போன்ஸ் மேரியை போனில் அழைத்து, வள்ளியின் வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். அங்கு, வட்டிப்பணம் தொடர்பாக அல்போன்ஸ் மேரிக்கும் வள்ளி மற்றும் சுரேஷ், மணி, தேவி ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, `நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வட்டிக்கே கொடுத்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். வாங்கிய பணத்தைவிட வட்டி கொடுத்துவிட்டோம்' என்று ஆவேசமாகக் கூறியுள்ளனர்.

அல்போன்ஸ் மேரியிடம் வட்டிக்குப் பணம் வாங்கியது உண்மைதான். வட்டிக்காக என் நகைகளைக்கூட விற்று அல்போன்ஸ்மேரிக்குப் பணம் கொடுத்துள்ளேன்.
வள்ளி

அதைக் கேட்ட அல்போன்ஸ் மேரி, ''பணம் வாங்கும்போது சந்தோஷமாக இருந்தது. அதைத் திரும்பக் கொடுக்க கஷ்டமாக இருக்கிறதா'' என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அல்போன்ஸ் மேரி உயிரோடு இருந்தால்தானே பணம் கொடுக்க வேண்டும் என ஆத்திரப்பட்டு அவரைக் கொலை செய்துள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்றிய இந்தக் கும்பல், அதை அடகுவைத்து பணத்தை பங்கு பிரித்துள்ளது. அந்த நகைகளையும் பறிமுதல்செய்துள்ளோம். கைதான 4 பேரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

ஐஸ்ஹவுஸ் பகுதியில் கொலை செய்யப்பட்ட அல்போன்ஸ் மேரியைப் போல, கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, பெருங்குடியைச் சேர்ந்த கீதா என்பவர் கடனாகக் கொடுத்த பணத்தை வாங்க கிண்டி சென்றார். அதன்பிறகு, அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி, கீதா கொலை செய்யப்பட்டு சடலமாக திருவேற்காடு பகுதியில் உள்ள மைதானத்தில் மீட்கப்பட்டார். இதுகுறித்து திருவேற்காடு போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை இந்த வழக்கில் துப்பு துலக்கப்படவில்லை.

அல்போன்ஸ்மேரியை கொலை செய்த வழக்கில் கைதான வள்ளி
அல்போன்ஸ்மேரியை கொலை செய்த வழக்கில் கைதான வள்ளி

கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்படுபவர்கள், காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஆத்திரத்தில் சிலர் தண்டல் கொடுப்பவர்களைக் கொலை செய்துவிடுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடுகிறது. அல்போன்ஸ்மேரி கொலை வழக்கில் சிக்கியவர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். அல்போன்ஸ்மேரியை எப்படிக் கொலை செய்தோம்? என கைதானவர்கள் போலீஸாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.

வட்டிக்குப் பணம் கொடுத்த பெண் வியாபாரி அல்போன்ஸ் மேரி, வட்டிக்குப் பணம் வாங்கியவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு