Election bannerElection banner
Published:Updated:

சென்னை: கொலை வழக்கு; தொடரும் பழிக்குப் பழி! - சாட்சி சொல்லாத ஆத்திரத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட சுப்ரியா
கொலை செய்யப்பட்ட சுப்ரியா

`அண்ணி உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று அழைத்துச் சென்று குறுகிய சந்துக்குள்வைத்து இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, புளியந்தோப்பு குருசாமி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா. இவரின் மகள் சுப்ரியா (32). இவரின் கணவர் ரூபன். இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சுப்ரியாவும் ரூபனும் பிரிந்து வாழ்கின்றனர். அதனால் சுப்ரியா வீட்டின் அருகில் காய்கறிக்கடை நடத்திவந்தார். நேற்றிரவு கடையிலிருந்த சுப்ரியா, குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தார்.

கொலை
கொலை

அப்போது சுப்ரியாவின் உறவினர் ஒருவர் அங்கு வந்தார். அவர், `அண்ணி உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று கூறி சுப்ரியா அழைத்துக்கொண்டு அந்தப் பகுதியிலுள்ள குறுகிய சந்துக்குள் சென்றிருக்கிறார். அந்தப் பகுதிக்குள் திடீரென ஒரு கும்பல் நுழைந்து, சுப்ரியாவைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. கழுத்துப் பகுதியிலேயே வெட்டு விழுந்ததால் சுப்ரியா, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிருக்குப் போராடினார்.

சுப்ரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பின்னர் சுப்ரியாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சுப்ரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சுப்ரியாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுப்ரியாவின் குழந்தைகள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்கவைத்தது.

அரக்கோணம்: ``இரட்டைக் கொலை; அ.தி.மு.க - பா.ம.க காரணம்!" - போராட்டம் அறிவித்தார் திருமாவளவன்
கொலை
கொலை
representational image

கொலை குறித்து பேசின் பிரிட்ஜ் போலீஸார் கூறுகையில், ``ஒரு கொலை வழக்கில் சுப்ரியாவும், அவரின் சகோதரியும் சாட்சியாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால், சுப்ரியா சாட்சி சொல்லவில்லை. அது, சுப்ரியாவின் உறவினர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சுப்ரியா குடும்பத்தில் பிரச்னை இருந்துவருகிறது. அதன் காரணமாகத்தான் சுப்ரியாவை அவரின் உறவினர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துவருகிறோம். சுப்ரியாவை அழைத்துச் சென்றவர் சிக்கினால் கொலைக்கான காரணம் தெரிந்துவிடும்" என்றனர்.

சுப்ரியா, கொலை வழக்குக்கும், வடசென்னையில் நடந்த இன்னொரு கொலை வழக்குக்கும் தொடர்பு இருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதைவைத்துப் பார்க்கும்போது பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸார் கருதுகின்றனர்.

இந்தக் கொலை புளியந்தோப்பு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு