Published:Updated:

`கேட்டேன்... தரல... கொன்னுட்டேன்' - அக்காவைக் கொன்ற தம்பி அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை புழல் புதிய லட்சுமிபுரத்தில் அக்காவைக் கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மல்லிகா
மல்லிகா

சென்னை புழல், புதிய லட்சுமிபுரம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (53). இவரின் கணவர் ஜெயராமன். மல்லிகாவுக்கு 3 சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். இவர்களின் பூர்வீகச் சொத்துகள் புழல் பகுதியில் உள்ளன. குடும்பத்தில் மூத்தவரான மல்லிகா, திருவள்ளூரில் உள்ள மகள் வீட்டில் குடியிருந்துவந்தார். மல்லிகாவின் மகன் சங்கர் புழலில் குடியிருக்கிறார்.

Representational image
Representational image

இந்தநிலையில், மகனைப் பார்க்க மல்லிகா, புழலுக்கு வந்தார். அப்போது அவரிடம் மல்லிகாவின் சகோதரர் நந்தகுமார், தகராறு செய்துள்ளார். இதனால் திருவள்ளூருக்குச் செல்ல மல்லிகா, பஸ் நிலையத்துக்கு நடந்துச் சென்றார். அப்போது பின்னால் வந்த நந்தகுமார், சிறிய மண்வெட்டியால் மல்லிகாவின் பின்னந்தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலயே இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த புழல் போலீஸார் மல்லிகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லிகாவை கொலை செய்த குற்றத்துக்காக நந்தக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது கொலைக்கான காரணம் தெரியவந்தது.

நந்தக்குமார்
நந்தக்குமார்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``மல்லிகாவுக்கு ஜெயா, லட்சுமி, சாந்தி என மூன்று தங்கைகளும் நந்தக்குமார் என்ற தம்பியும் உள்ளனர். குடும்பத்தில் மூத்தவரான மல்லிகாவுக்கும் அவரின் தம்பி நந்தக்குமாருக்கும் இடையே சொத்து தகராறு நீண்ட காலமாக இருந்துவந்துள்ளது. மல்லிகாவைத் தவிர மற்ற சகோதரிகளிடமும் நந்தக்குமார் சொத்துகாகச் சண்டை போட்டு வந்துள்ளார்.

வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டு வாடகை பணத்தில் நந்தக்குமார் வாழ்ந்துவந்தார். மேலும், அவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது. இந்தநிலையில், புழல் பகுதியில் உள்ள வீட்டை விற்று அதில் தன்னுடைய பங்கை தரும்படி சகோதரிகளிடம் நந்தக்குமார் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் மகனைப் பார்க்க மல்லிகா, நேற்று புழலுக்கு வந்தார். இதனால் மல்லிகாவிடம் சொத்தைப் பிரித்துத் தரும்படி கேட்டுள்ளார் நந்தக்குமார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தில் மூத்தவரான மல்லிகாவுக்கும் அவரின் தம்பி நந்தக்குமாருக்கும் இடையே சொத்து தகராறு நீண்ட காலமாக இருந்துவந்துள்ளது. மல்லிகாவைத் தவிர மற்ற சகோதரிகளிடமும் நந்தக்குமார் சொத்துகாகச் சண்டை போட்டு வந்துள்ளார்.
போலீஸ் விசாரணை அதிகாரி

இதனால் நேற்றிரவு திருவள்ளூருக்குச் செல்ல மல்லிகா தனியாக பஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அக்கா மீது ஆத்திரத்தில் இருந்த நந்தக்குமார், `கௌபார்' என்று அழைக்கப்படும் சிறிய மண்வெட்டியால் மல்லிகாவின் பின்னந்தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் மல்லிகாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வெளியேறி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதனால் பயந்துபோன நந்தக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.

நந்தக்குமார், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ``வீட்டை விற்று தன்னுடைய பங்கைத் தரும்படி கேட்டுவந்தேன். ஆனால், என்னுடைய சகோதரிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. என் பங்கைத் தராமல் இழுத்தடித்ததால் கொலை செய்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

சொத்துகாக அக்காளை கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்த சம்பவம் புழல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.