Published:Updated:

காஞ்சிபுரம்: `பயமா இருக்குடா...' இருட்டில் பேராசிரியை கொலை! - காட்டிக்கொடுத்த டி ஷர்ட் பாக்கெட்

கொலை
News
கொலை ( representational image )

காஞ்சிபுரத்தில் பேராசிரியை அனிதா மர்ம நபரால் இரவில் கொலை செய்யப்பட்டார். அப்போது கொலையாளியுடன் அனிதா போராடியபோது டி ஷர்ட்டின் பாக்கெட் துணி அனிதாவின் கையில் சிக்கியது. அதன் மூலம் கொலையாளியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கை, அங்காள பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (55). இவர் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி சண்முகக்கனி. இவர், ஈஞ்சம்பாக்கம் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இந்தத் தம்பதியருக்கு ராகுல் வர்னன் என்ற மகன் இருக்கிறான். அவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறான். சண்முகக்கனியின் தங்கை அனிதா (45). இவருக்கு திருமணமாகவில்லை. ஏனாத்தூரிலுள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றிவந்தார்.

கொலை செய்யப்பட்ட அனிதா
கொலை செய்யப்பட்ட அனிதா

கடந்த 2002-ம் ஆண்டு முதல் வெள்ளைச்சாமி வீட்டிலுள்ள மாடியில் தனியறையில் தங்கியிருந்தார். கடந்த 9.7.2021-ம் தேதி இரவு 9:30 மணியளவில் அனிதா தங்கியிருந்த அறையிலிருந்து சத்தம் கேட்டது. அப்போது டி.வி பார்த்துக்கொண்டிருந்த வெள்ளைச்சாமி, மனைவி சண்முகக்கனியிடமும் மகன் ராகுல் வர்னனிடமும் மாடியில் சத்தம் கேட்பது தொடர்பாகக் கூறினார். இதையடுத்து மூன்று பேரும் மாடிக்குச் சென்றபோது அங்குள்ள கதவு உட்பக்கமாக பூட்டியிருந்தது. உடனே ராகுல் வர்னன், சித்தி அனிதாவுக்கு போன் செய்தான். போனை எடுத்த அனிதா `ஐயய்யோ பயமா இருக்குதுடா’ என்று சொல்லி போனைத் துண்டித்துவிட்டாராம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பக்கத்து வீட்டின் மாடி வழியாக அனிதா தங்கியிருந்த அறைக்குச் சென்றனர். கதவு உட்பக்கமாகப் பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தனர். அறை முழுவதும் இருட்டாக இருந்தது. அதனால் செல்போன் டார்ச் லைட்டை அறைக்குள் அடித்தபோது படுக்கையில் அனிதா படுத்திருந்தார். சத்தம் போட்டு அவரைக் கூப்பிட்டும் பதில் இல்லை. இதையடுத்து வெள்ளைச்சாமி, பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அனிதா படுத்திருந்த பெட்டில் ரத்தம் இருந்தது. மேலும், அவரின் இடது பக்க தாடையில் கூர்மையான காயமும், வலது பக்க மார்பின் மேல் பகுதியில் சிறிய காயமும் இருந்தது.

கொலை
கொலை

இதையடுத்து அனிதாவுக்கு சண்முகக்கனி முதலுதவி அளித்தார். அப்போது அனிதாவுக்கு உயிர் இருப்பது தெரிந்தது. உடனே அவரை தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அனிதாவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் கூறினர். இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அனிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனிதாவின் மரணத்துக்கு என்ன காரணம் என விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் விசாரித்தபோது அனிதா அணிந்திருந்த ஆறு சவரன் தங்க செயின் மாயமாகியிருந்தது. அதனால் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். இந்தநிலையில்தான் அனிதாவின் அறையில் டி ஷர்ட்டின் பாக்கெட் துணி ஒன்று கிடந்தது. அந்த ஆதாரத்தை சேகரித்த போலீஸார் அது யாருடையது என விசாரித்தபோது அனிதாவைக் கொலை செய்தது உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் எனத் தெரியவந்தது. இதையடுத்து சுதாகரைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சுதாகர்
சுதாகர்

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பேராசிரியை அனிதா, கல்லூரியில் பணியாற்றுவதற்கு முன்பு பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றியிருக்கிறார். அப்போது அந்தப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநராக சுதாகர் என்பவர் பணியாற்றியுள்ளார். ஒரே பள்ளியில் பணியாற்றியதால் அனிதாவும் சுதாகரும் பழகியிருக்கின்றனர். திருமணமான சுதாகர், கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்துவருகிறார். தற்போது அனிதாவும் சுதாகரும் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அதனால் தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ளும்படி சுதாகரிடம் அனிதா வற்புறுத்தியிருக்கிறார். அதனால் ஏற்பட்ட தகராறில் சம்பவத்தன்று அனிதாவைச் சந்திக்க சுதாகர் வந்திருக்கிறார். அப்போதும் திருமணம் தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த சுதாகர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனிதாவைக் குத்தியிருக்கிறார். பிறகு, நகைக்காக இந்தக் கொலை நடந்ததுபோல சித்திரிக்க அனிதா அணிந்திருந்த தங்க செயினையும் எடுத்துக்கொண்டு சுதாகர் தப்பிச் சென்றிருக்கிறார். அனிதாவுக்கும் சுதாகருக்கும் இடையே நடந்த தகராறில் சுதாகர் அணிந்திருந்த டி ஷர்ட்டின் பாக்கெட் அனிதாவின் கையில் சிக்கியிருக்கிறது. அதை கவனிக்காததால் சுதாகர் வசமாக சிக்கிக்கொண்டார். மேலும், அனிதாவின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் சுதாகருடன் பேசிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து சுதாகரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றார். இந்தச் சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.