Published:Updated:

`தனி அறைகள்; உணவு எடுத்துக்கொள்ளவில்லை!’- நிர்பயா குற்றவாளிகளின் கடைசி நிமிடங்கள்

நிர்பயா வழக்கு - திகார் சிறை
நிர்பயா வழக்கு - திகார் சிறை

டெல்லி மாணவி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் அதிகாலை 5.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டனர்.

மருத்துவ மாணவி டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ராம் சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், 18 வயதுக்குட்பட்ட ஒருவர் மூன்றாண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

நிர்பயா வழக்கு
நிர்பயா வழக்கு

அக்‌ஷய் தாக்குர் (31), பவன் குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் முகேஷ் சிங் (32) ஆகிய நால்வருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

`7 வருடங்கள்; மேல்முறையீடு நிராகரிப்பு!’ -நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

இரண்டு முறைக்கு மேல் தூக்குத்தண்டனை தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்தும் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றம் சென்றனர். டெல்லி நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என இந்தத் தண்டனையைத் தடுத்து நிறுத்தக் கோரி குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் நேற்று இரவு முறையிட்டார். அதிகாலை 3.30 மணி வரை நீடித்த வாதங்களின் முடிவில் உச்ச நீதிமன்றம், தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து அவர்கள் மனுவைத் தள்ளுபடி செய்தது.

திகார் சிறை
திகார் சிறை
`அதிகாலை 3.30 மணி வரை நீடித்த வாதங்கள்!’ - நிர்பயா வழக்கில் நள்ளிரவில் நடந்தது என்ன?

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சூழலில் திகார் சிறையில் நேற்று முதலே கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலமடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. கடைசி சில மணி நேரங்கள் குற்றவாளிகள் நால்வரும் தனித் தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள் சிறை அதிகாரிகள். சிறை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட உணவு எதையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள்.

கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகார் சிறை அதிகாரிகள் தயாராகினர். ஆசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலையான திகாரில் அடைக்கப்பட்டிருந்த பெரும்பாலான மற்ற கைதிகளும் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்ததாகவும் அதிகாரிகள் சொல்கிறார்கள். நீதிமன்றங்களில் முறையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் குற்றவாளிகள் நால்வரும் எழுப்பப்பட்டனர்.

கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், சிறைக் கண்காணிப்பாளர், மாஜிஸ்திரேட், மருத்துவர் முன்னிலையில் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இறப்பை மருத்துவர் உறுதி செய்த பின்னர், அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

நிர்பயாவின் தாய் ஆஷா தேவி
நிர்பயாவின் தாய் ஆஷா தேவி

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்ததும் திகார் சிறை வாயிலில், ``என் மகளுக்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. என் மகளின் புகைப்படத்தைக் கட்டி அணைத்துக்கொண்டேன். எனது நாடு நீதியைப் பெற்றுத்தந்துள்ளது’’ என்று கலங்கினார் இந்த வழக்கில் 7 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய நிர்பயாவின் தாய்.

அடுத்த கட்டுரைக்கு