Published:Updated:

`அப்பா... ரொம்ப தண்ணி தாகம் எடுக்குதுப்பா!' -கலங்கவைக்கும் விழுப்புரம் சிறுமியின் கடைசி நிமிடங்கள்

விழுப்புரம் சிறுமியின் வீடு
விழுப்புரம் சிறுமியின் வீடு

சமுக வலைதளங்களில் உலாவரும் விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயின் இறுதி நிமிடங்கள் பார்ப்பவர்களைக் கண்கலங்க வைக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால், ராஜி தம்பதியரின் மூத்த மகளான சிறுமி ஜெயஸ்ரீ (15) எரிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப் போட்டிருக்கிறது. கவுன்சிலர் முருகன் மற்றும் கலியப்பெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு பெட்ரோல் வைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு நேற்று காலை உயிரிழந்தார், சிறுமி ஜெயஸ்ரீ.

ஆம்புலன்ஸில் எடுத்து வரப்படும் சிறுமி ஜெயஸ்ரீயின் உடல்
ஆம்புலன்ஸில் எடுத்து வரப்படும் சிறுமி ஜெயஸ்ரீயின் உடல்

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டது காவல்துறை. இதற்கிடையில் சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் எதிரொலித்ததால், தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த தேசிய குழந்தைகள் ஆணையம், ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய விழுப்புரம் ஆட்சியருக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கிடையில் சமூக வலைதளத்தில் வெளியான சிறுமி ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது அளித்த மரண வாக்குமூலத்தின் வீடியோ காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கின்றன .

ஜெயஸ்ரீ பேசும் வீடியோ காட்சியில்,

வீடியோ எடுப்பவர் : உன் பேரு என்னம்மா?

சிறுமி ஜெயஸ்ரீ : அண்ணா.. தண்ணி குடுங்கண்ணா...

வீடியோ எடுப்பவர் : தண்ணி குடுப்பாங்க.. உனக்கு எப்படி ஆச்சு இப்படி?

கதறி அழும் சிறுமி ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால்
கதறி அழும் சிறுமி ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால்

சிறுமி ஜெயஸ்ரீ : அப்பா… அப்பாவ்.. அந்த யாசகனும் அந்த முருகனும் கொளுத்திட்டாங்கப்பா..

வீடியோ எடுப்பவர் : சரி.

சிறுமி ஜெயஸ்ரீ : தண்ணி தாயேன்பா..

வீடியோ எடுப்பவர்: எதுக்கு உன்னை இப்படி செய்தார்கள். எப்படி எரிச்சிக்கிட்ட?

சிறுமி ஜெயஸ்ரீ : கையெல்லாம் கட்டிப் போட்டுட்டாங்கப்பா..

வீடியோ எடுப்பவர் : என்ன ஊர்ல.

சிறுமி ஜெயஸ்ரீ : எங்க ஊர்ல..

வீடியோ எடுப்பவர் : எதுக்குக் கையைக் கட்டிப் போட்டாங்க?

சிறுமி ஜெயஸ்ரீ : அய்யோ.. தண்ணி தாங்க.. (அழுதுகொண்டே இருமுகிறார்)

வீடியோ எடுப்பவர் : தண்ணி குடுப்பாங்கம்மா.. எப்படி கட்டிப் போட்டாங்க..

சிறுமி ஜெயஸ்ரீ : அப்பா.. தொண்டைலாம் வறண்டு போச்சுப்பா

ஒரு வாரத்தில் அறிக்கை; தாமாக முன்வந்து வழக்கு பதிவு -விழுப்புரம் சிறுமி விவகாரத்தில் கொதித்த ஆணையம்

வீடியோ எடுப்பவர் : எதுக்கு உன்னைக் கட்டிப்போட்டாங்க?

சிறுமி ஜெயஸ்ரீ : ”தண்ணி தந்தாதானே பேச முடியும்.. எப்பாவ் கொஞ்சூண்டு தாங்களேன்.

வீடியோ எடுப்பவர் ஒரு மூடியில் தண்ணீர் கொடுங்கள் என்று அங்கிருந்த செவிலியர்களிடம் கூறும்போது, ``நிறைய தண்ணி தாங்க” என்று மெல்லிய குரலில் கேட்கிறார் சிறுமி ஜெயஸ்ரீ.

சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு
சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு

சிறுமி ஜெயஸ்ரீ : “இன்னும் ரொவ்வோண்டு தாங்க… இன்னும் ரொவ்வோண்டு”

வீடியோ எடுப்பவர் : ”எதற்கு கட்டிப் போட்டார்கள்”

சிறுமி ஜெயஸ்ரீ : ஏற்கெனவே சண்டை. எங்க அப்பாவுக்கும், அவங்களுக்கும்”

வீடியோ எடுப்பவர் : ``அதற்கு நீ ஏன் கொளுத்திக்கிட்ட”

சிறுமி ஜெயஸ்ரீ : “நான் இல்லை. அந்த முருகனும், யாசகனும்தான் என்னைக் கொளுத்துனாங்க. பெட்ரோலை எடுத்து ஊத்திட்டாங்க.

அப்பா ரொம்ப தண்ணி தாகம் எடுக்குதுப்பா” என்ற வார்த்தையுடன் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டாள் அந்த மாணவி.

அடுத்த கட்டுரைக்கு