Published:Updated:

`அதிகாலை விசாரணை; சம்பவ இடத்தில் நடந்தது என்ன?' -என்கவுன்டரை விவரித்த சஜ்ஜனார் ஐ.பி.எஸ் #DishaCase

காவல் ஆணையர் சஜ்ஜனார்
காவல் ஆணையர் சஜ்ஜனார் ( ANI )

தெலங்கானா மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் கடந்த நவம்பர் 27-ம் தேதி பணிமுடிந்து திரும்பியபோது அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக அந்த மருத்துவர் தன் சகோதரிக்கு போன் செய்து டோல்கேட் பகுதியில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து டோல்கேட்டில் அமைந்திருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் நாராயன்பேட்டை மாவட்ட ஜக்லரைச் சேர்ந்த லாரி டிரைவர் முகமது பாஷா, நவீன், க்ளீனர்கள் கேசவலு, சிவா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

தெலங்கானா போலீஸார்
தெலங்கானா போலீஸார்

கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 7 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதுமிருந்து குரல்கள் எழுந்தன. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மக்களிடம் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. என்கவுன்டர் ஒரு தீர்வாகாது எனவும், இதுபோன்ற கோரச் செயல்களுக்கு இதுவே சரியான தண்டனை எனவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

தெலங்கானா மக்கள் போலீஸாருக்கு ராக்கி கட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். என்கவுன்டர் செய்த போலீஸாருக்கு மரியாதை செலுத்தும்விதமாக ரோஜா பூக்களைத் தூவினர். பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனாருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானா என்கவுன்டர்
தெலங்கானா என்கவுன்டர்

இந்நிலையில் இந்த என்கவுன்டர் தொடர்பாக சைபராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசியவர், ``பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் நான்கு பேரை கைது செய்தோம். டிசம்பர் 4-ம் தேதி நான்கு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து இரண்டு நாள்களாக விசாரணை நடத்தினோம். மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறினார்கள்.

அதன் காரணமாகவே விடியற்காலையில் விசாரணைக்காக இங்கு அழைத்து வந்தோம். நான்கு பேரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்ததால் அதிகாலையில் அழைத்து வந்தோம். நான்கு பேரையும் அழைத்து வரும்போது பத்துக்கும் மேற்பட்ட போலீஸாரைப் பாதுகாப்புக்காக அழைத்து வந்தோம்.

`என்ன செய்யணுமோ செய்யுங்கள்!’- கமிஷனருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த சந்திரசேகர ராவ் #DishaCase

திடீரென கற்கள், குச்சிகள் எனக் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு நால்வரும் தாக்குதல் நடத்தினர். சென்ன கேசவலு, முகமது ஆரிஃப் ஆகிய இருவரும் காவலர்கள் வைத்திருந்த துப்பாக்கியைப் பறித்தனர். துப்பாக்கிகளைக் காட்டி எங்களை மிரட்டினர். மற்ற இருவரும் கற்கள், குச்சிகளைக் கொண்டு தாக்கினர். அவர்கள் தாக்குதல் நடத்தியபோதும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். சரணடையுமாறு நால்வருக்கும் எச்சரிக்கை விடுத்தோம். நாங்கள் கூறுவதை அவர்கள் கேட்பதாக இல்லை. தொடர்ந்து எங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர், துப்பாக்கிகளால் சுடவும் செய்தனர்.

தெலங்கானா என்கவுன்டர்
தெலங்கானா என்கவுன்டர்

இதையடுத்து தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தினோம். இதில் நான்கு பேரும் உயிரிழந்தனர். இதில் இரண்டு காவலர்களுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்டதில் அவர்களுக்குக் காயம் ஏற்படவில்லை. கற்கள் மற்றும் குச்சிகளைக் கொண்டு தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் வெங்கடேஷலு, காவலர் அரவிந்த் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

`அதே இடம்; 4 பேரும் 4 திசை!- பெண் மருத்துவர் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

கடந்த நான்கு நாள்களாக குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டினோம். டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளோம். அறிவியல்பூர்வமான ஆதாரங்களை இந்த நான்கு பேருக்கு எதிராகச் சேகரித்தோம். தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மாநிலத்தில் இதுபோன்று பெண்கள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கின் விவரங்களையும் சேகரித்தோம். இவர்களுக்கு அதில் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வந்தோம்.

காவல் ஆணையர் சஜ்ஜனார்
காவல் ஆணையர் சஜ்ஜனார்

இந்த வழக்கில் உயிரிழந்த மருத்துவரின் பெயரையும் அவரது குடும்பத்தினரின் பெயரையும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அதைத்தான் என்னால் கூற முடியும். இந்தச் சம்பவம் காலை 5.45 முதல் 6.15 மணிக்கு இடையே நடந்தது. அங்கிருந்து செல்போன், வாட்ச், பவர் பேங்க் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றியுள்ளோம். என்கவுன்டர் குறித்து மாநில அரசுக்கும், மனித உரிமைகள் ஆணையத்துக்கும் விளக்கம் தரப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு