Published:Updated:

50 போலீஸார், குண்டு துளைக்காத கார்கள், 12 வாகனங்கள்... பஞ்சாப் அழைத்து வரப்படும் லாரன்ஸ் பிஸ்னோய்!

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் லாரன்ஸ்

பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் பலத்த பாதுகாப்புடன் டெல்லியிலிருந்து பஞ்சாப்புக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

50 போலீஸார், குண்டு துளைக்காத கார்கள், 12 வாகனங்கள்... பஞ்சாப் அழைத்து வரப்படும் லாரன்ஸ் பிஸ்னோய்!

பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் பலத்த பாதுகாப்புடன் டெல்லியிலிருந்து பஞ்சாப்புக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

Published:Updated:
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் லாரன்ஸ்

பஞ்சாப்பில் கடந்த மாதம் 29-ம் தேதி பாடகர் சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கேங் வாரில் இந்த படுகொலை நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தக் கொலைக்கு டெல்லி திகார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய், கனடாவில் இருக்கும் கோல்டி பிரார் ஆகியோரின் கூட்டாளிகள்தான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. லாரன்ஸிடம் டெல்லி போலீஸார் விசாரித்தபோது இந்த உண்மை தெரியவந்தது. பஞ்சாப்பில் ஒரு முறை கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அதிலிருந்து பஞ்சாப்பைச் சேர்ந்த முக்கியமான குற்றவாளிகள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுவருகின்றனர்.

லாரன்ஸ், பாடகர் கொலையில் தொடர்புகொண்டிருப்பதால் அவனிடம் விசாரணை நடத்த பஞ்சாப் போலீஸார் முடிவு செய்துள்ளனர். லாரன்ஸ் பிஸ்னோயை டெல்லி போலீஸார் விசாரணைக்காக எடுத்திருந்தனர். அவரின் போலீஸ் காவல் நேற்றோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து லாரன்ஸ் டெல்லி பாடியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பஞ்சாப் போலீஸார் இரண்டு மனுக்களை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். ஒரு மனு லாரன்ஸை கைதுசெய்யவும், மற்றொரு மனு லாரன்ஸை டெல்லி போலீஸார் தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி நீதிமன்றம் லாரன்ஸைக் கைதுசெய்ய அனுமதித்தது. பஞ்சாப் அரசு வழக்கறிஞர் அன்மோல் ரதன் சித்து ஆஜராகி, ``பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் லாரன்ஸ் முக்கியக் குற்றவாளியாக இருக்கிறார். எனவே, அவரின் பாதுகாப்புக்கு பஞ்சாப் அரசு முழு உத்தரவாதம் எடுத்துக்கொள்ளும். அவரை பஞ்சாப் போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சித்து மூஸ்வாலா
சித்து மூஸ்வாலா

லாரன்ஸ் பிஸ்னோயை பஞ்சாப்புக்கு அழைத்துச் செல்லும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இரண்டு குண்டு துளைக்காத கார்கள், 12 பாதுகாப்பு வாகனங்கள், 50 போலீஸார் பாதுகாப்புக்குச் செல்வார்கள். 12 பாதுகாப்பு வாகனங்கள் முன்னால் சென்று வழித்தடத்தை ஒழுங்குபடுத்தும். பிஸ்னோய் அழைத்து செல்லப்படும் வழித்தடம் வீடியோ எடுக்கப்படும். இது போன்ற வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும். டெல்லி போலீஸார் லாரன்ஸிடம் விசாரித்ததில் சித்து மூஸ்வாலா படுகொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

லாரன்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஷால் சோப்ரா பஞ்சாப் போலீஸாரிடம் லாரன்ஸை ஒப்படைக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். பஞ்சாப் போலீஸாரிடம் ஒப்படைத்தால் லாரன்ஸை அவரது எதிரிகள் கொலை செய்துவிடுவர். லாரன்ஸிடம் வீடியோ கால் முறையில் விசாரிக்கலாம். சித்து மூஸ்வாலா கொலையில் பஞ்சாப் போலீஸார் லாரன்ஸைக் கைதுசெய்யலாம். ஆனால் பஞ்சாப் போலீஸாரிடம் ஒப்படைக்கக் கூடாது. டெல்லியில்தான் லாரன்ஸ் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் லாரன்ஸை டெல்லி போலீஸார் பஞ்சாப் போலீஸாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து லாரன்ஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லியிலிருந்து பஞ்சாப்புக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறார். டெல்லி போலீஸாரிடமிருந்து தங்களது காவலில் எடுக்கும் லாரன்ஸை 24 மணி நேரத்தில் பஞ்சாப்பின் மன்சா கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று டெல்லி கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. பஞ்சாப்பில் லாரன்ஸ் அடைக்கப்படவிருக்கும் சிறையிலும் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். கனடா கும்பல் சிறைக்குள் புகுந்து லாரன்ஸை அழைத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism