சாத்தான்குளம்: `ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸா... கொரோனா தன்னார்வலர்களா?’ - புதிய சர்ச்சை

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸாருடன் இணைந்து தந்தை, மகனை தாக்கியதாகக் கூறப்படும் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இளைஞர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் இருவரையும் போலீஸார் தாக்கியபோது போலீஸார் லத்தியால் அடிக்கும்போது அவர்கள் கை, கால்களைப் பிடித்தும், ஒரு கட்டத்தில் அவர்களே லத்தியால் இருவரையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இருவரது உயிரிழப்பு குறித்த வழக்கு விசாரணையைத் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீஸார் துவக்கியுள்ளனர். ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இளைஞர்களை விசாரணைக்குக்கூட அழைக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், தந்தை, மகனைத் தாக்கியது ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸே இல்லை அவர்கள் கொரோனா தன்னார்வலர்கள் என அதிர்ச்சியைக் கிளப்புகிறார் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வேணுகோபால்.
இதுகுறித்து அவரிடம் பேசினோம், ``போலீஸாருக்கு உதவியாக இருப்பவர்கள் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனப்படும் காவல்துறை நண்பர்கள். ஆனால், இவர்களை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை தங்களது சொந்தப் பணிகள் வரை பல வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர, போலீஸாருக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுப்பவர்களாகவும், மாமூல் பெற்றுத் தருபவர்களாகவும்கூட செயல்படுகிறார்கள்.

இவற்றின் மூலம் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களிடம் நன்றாகப் பழகிவிடுவதால் போலீஸார் பெரைச் சொல்லி தங்களின் தேவையையும் பூர்த்தி செய்துகொள்கின்றனர். அதேசமயம் தங்களது சொந்தப் பகையையும் தீர்த்துக்கொள்கின்றனர். இதன் தாக்கதில் தலையில் போலீஸ் கட்டிங் வெட்டிக் கொண்டும், கையில் சில்வர் காப்பு போட்டுக்கொண்டும், கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டு மீசையையும் திருக்கி விட்டுக்கொண்டு போலீஸார் போலவே ஊருக்குள் வலம் வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் லத்தியை பைக்கில் வைத்துக் கொண்டு சுற்றும் அளவுக்கு இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்கள் போலீஸார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருவர் கையில் பிஸ்டலைத் தூக்கிக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோ ஒன்று கடந்த ஆண்டு சமூக வளைதளங்களில் வைரலாகி பின்னர் எஸ்.பியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். காவலர் முதல் ஆய்வாளர் வரை அதிகமாக சர்ச்சையில் சிக்குவதற்கு முக்கியக் காரணமே இந்த ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்கள்தான்.

சம்பந்தப்பட்ட போலீஸாரின் அந்தரங்கமும் இவர்களிடம் சிக்கிவிடுவதால் அமைதியாகிவிடுகிறார்கள். சமீப காலங்களில் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்களின் ஆதிக்கங்கள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சாத்தான்குளம் காவல்நிலையத்தைப் பொறுத்தவரையிலும் காவலர் முதல் ஆய்வாளர் வரை அனைவருக்கும் இவர்களே எடுபிடிகளாகச் செயல்பட்டு வந்தனர். எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் விசாரணை செய்யும் போதெல்லாம் இந்த ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்களும் உடன் இருப்பார்களாம்.
தந்தை, மகன் தாக்கப்பட்டபோது போலீஸாருடன் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்களும் சேர்ந்துதான் தாக்கினார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸே அல்ல. கொரோனா ஊரடங்கு காலத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களைப் பாதுகாப்பாக ஸ்டேஷன் வளாகத்திற்குள் கொண்டு வருதல் போன்ற சாதாரணப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்களை கொரோனா தன்னார்வலர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவர்களை ஆய்வாளர் ஸ்ரீதரும் உதவி ஆய்வாளர்களும்தான் தேர்வு செய்தனர். சாத்தான்குளத்தைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்கு எஸ்.ஐ பாலகிருஷ்ணன்தான் மஞ்சள் நிற டீ-சர்ட் பனியன் வாங்கிக் கொடுத்தார். தந்தை, மகன் தாக்கப்பட்டபோது இந்த கொரோனா தன்னார்வலர்களும் சேர்ந்துதான் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இத்தன்னார்வலர்களைப் பொறுத்தவரையில் காவல்நிலையத்தின் வளாகத்துடனே இவர்களது பணி முடிந்தது. ஆனால், அதையும் மீறி காவல்நிலையத்திற்குள் அனுமதித்தது சட்டப்படி தவறு.
அப்படியே தாக்கியிருந்தாலும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களின் தூண்டுதலின்படியே நடந்திருக்க வேண்டும். இச்சம்பவத்திற்குப் பிறகு அந்த இளைஞர்கள், தவறு செய்துவிட்டோம் என உணர்ந்து பயந்தநிலையிலேயே உள்ளதாகச் சொல்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினரும் வருத்தத்தில்தான் உள்ளனர். போலீஸாரின் கட்டாயத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது” என்றார் கவலையுடன். தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல ஐ.ஜி முருகன், ``ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்பது போலீஸ்களுக்கு உதவி செய்யும் ஒரு அமைப்பு.

அவர்களுக்கு போலீஸ்துறையில் உள்ள எந்த அதிகாரமும் கிடையாது. இவர்கள் அத்துமீறி செயல்படுவது தெரிய வந்தால் நிறுத்தப்படுவர். சாத்தான்குளம் சம்பவத்தில் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்களின் தலையீடு இருப்பதாக புகார்கள் வருகின்றன. இதன் மீது விசாரணை செய்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கரும், ``சாத்தான்குளம் சம்பவத்தில் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்களுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுகுறித்தும் விசாரணை செய்யப்படும். நிரூபணமானால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.