Published:Updated:

ஹைதராபாத்: பின்தொடர்ந்து வந்த கொலையாளிகள்... நடுரோட்டில் வழக்கறிஞர் தம்பதியர் படுகொலை!-என்ன நடந்தது?

வழக்கறிஞர் தம்பதியர் வெட்டிப் படுகொலை
வழக்கறிஞர் தம்பதியர் வெட்டிப் படுகொலை

ஹைதராபாத்தில் வழக்கறிஞர் தம்பதியர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தம்பதியரான கட்டு வாமன் ராவ் (Gattu Vaman Rao), நாகமணி (Nagamani) இருவரும் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை தொடர்புடைய மூவரை நேற்று தெலங்கானா காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர் தம்பதி கட்டு வாமன் ராவ், நாகமணி
வழக்கறிஞர் தம்பதி கட்டு வாமன் ராவ், நாகமணி
Twitter

தெலங்கானா மாநிலம், உயர் நீதிமன்ற வழக்கறிஞரான கட்டு வாமன் ராவும் அவரின் மனைவி நாகமணியும், கடந்த புதன்கிழமை தங்களின் சொந்த ஊரான மந்தானிக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். மாலை 3 மணி அளவில் பெடபள்ளி (Pedapalli) பகுதியிலுள்ள கல்வாசார்லா நெடுஞ்சாலையில் வாகனம் சென்றுகொண்டிருந்ததது. அப்போது காரை வழிமறித்த ஒரு மர்மக் கும்பல் வாகனத்துக்குள் இருந்த வழக்கறிஞர் தம்பதியரின் மீதி கொலைவெறித் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் நாகமணி சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களோடு நடுரோட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கட்டு வாமன் ராவ்-ஐ மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். செல்லும் வழியில், ``குண்டா சீனிவாசன் என்பவர்தான் எங்களைக் கொல்ல ஆட்களை அனுப்பியிருக்கிறார்" என்று அவர் கூறினார். பின்னர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பட்டப்பகலில் வழக்கறிஞர் தம்பதியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொலையாளிகளைக் கைதுசெய்யக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் போராட்டம்
Twitter

இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக பெடபள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வழக்கறிஞர் குறிப்பிட்ட குண்டா சீனிவாசன் என்பவர் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர். அவருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு எதுவும் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

பாதுகாப்பு கோரிய வழக்கறிஞர் தம்பதியர்:

கடந்த ஆண்டு தெலங்கானா கரீம்நகரை சேர்ந்த ஜீலம் ரங்கையா என்பவரைக் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் மர்மமான நிலையில் உயிரிழந்திருந்தார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்தக் கோரியும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நாகமணி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கறிஞர் தம்பதி
வழக்கறிஞர் தம்பதி
Twitter

இந்த வழக்கைத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளிலிருந்து அவர்களுக்கு மிரட்டல் வருவதாகவும், தங்களின் மீது பொய் வழக்குகளைத் தொடர முயற்சி நடப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், தனக்கும் தன் கணவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கும்படி கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

வழக்கறிஞர் குறிப்பிட்ட குண்டா சீனிவாசன் என்பவருக்கும் கட்டு வாமன் ராவுக்கும், அவர்கள் கிராமத்தில் கோயில் கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையில் முன்விரோதம் இருந்தது தெரியவந்திருக்கிறது. இந்தநிலையில், அகபாகா குமார், வசந்தா ராவ், குண்டா சீனிவாஸ் மூவரும் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்கள். இவர்கள் மூவருமே வழக்கறிஞர் கட்டு வாமன் ராவ்-ன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

காவல்துறை அதிகாரி
காவல்துறை அதிகாரி
Twitter

இது தொடர்பாகப் பேசிய காவல்துறையினர், ``கொலை செய்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பிருந்தே வழக்கறிஞர் தம்பதியரை அவர்கள் பின்தொடர்ந்திருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட படுகொலை. கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கொலையாளிகள் பொய்யான பதிவு எண்கொண்ட வாகனத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவர்களின் தொலைப்பேசி உரையாடலைவைத்து கைதுசெய்திருக்கிறோம்" என்று கூறினார்.

சமூக ஆர்வலர்களான இந்த வழக்கறிஞர் தம்பதியர், தங்களின் வாழ்நாள் முழுவதும் பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து மக்களின் நலனுக்காக, பல்வேறு எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டு போராடியவர்கள். பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடிவந்தவர்கள். தெலங்கானா மாநில உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இந்தக் கொலை வழக்கைப் பதிந்து, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

கடலூர்: துண்டிக்கப்பட்ட தலை;  பழிக்குப் பழி கொலை; போலீஸ் என்கவுன்ட்டர்! - என்ன நடந்தது?
அடுத்த கட்டுரைக்கு