Published:Updated:

சாத்தான்குளம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

காவல்துறையும் குற்றவியல் நீதித்துறை நடுவரும், கடந்த 2014 -ல் உச்ச நீதிமன்றம் அர்நேஷ் குமார் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால், தந்தை - மகன் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

சாத்தான்குளம் தந்தை - மகன் இறப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத குற்றவியல் நடுவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.

ராம. சேயோன்
ராம. சேயோன்

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோனிடம் பேசினோம். ``தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையின் தாக்குதல் காரணமாக, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்துவிட்டார்கள். அவர்களுடைய இறப்புக்கு தூத்துக்குடி காவல்துறையின் மனித உரிமை மீறலும், அதற்குத் துணை போன சம்பந்தப்பட்ட நீதித்துறை குற்றவியல் நடுவரும் காரணம். தூத்துக்குடி காவல்துறையும் குற்றவியல் நீதித்துறை நடுவரும், கடந்த 2014 -ல் உச்ச நீதிமன்றம் அர்நேஷ் குமார் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றியிருந்தால், தந்தை - மகன் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

உச்ச நீதிமன்றம், 2014 -ல் அர்நேஷ் குமார் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில், நீதியரசர்கள் சந்திரமௌலி பிரசாத் மற்றும் பினாகி சந்திர போஸ் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், காவல்துறைக்கும் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கினார்கள். குறிப்பாக 7 ஆண்டுகளோ அல்லது 7 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனையுள்ள குற்றங்களில் தேவையில்லாமல் கைது நடவடிக்கை செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். அதுபோல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்படும்போது, தேவையில்லாமல் எந்திரத்தனமாக அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக்கூடாது எனவும் அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 ஜெயராஜ் மற்றும் பென்னீஸ்
ஜெயராஜ் மற்றும் பென்னீஸ்

மேலும், தேவையில்லாமல் ஒருவரைக் கைது செய்தால், அதற்காக கைதுசெய்த காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையால் ஆஜர்படுத்தும்போது, அவரை நீதிமன்றக் காவலுக்கு ஏன் உட்படுத்தப்படுகிறார் என்பதற்குரிய விளக்கத்தை குற்றவியல் நீதித்துறை நடுவர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் எந்திரத்தனமாக செயல்பட்டால், அவர்மீது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றம் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. . இந்த உத்தரவுகளை சாத்தான்குளம் காவல் நிலையமும், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவரும் பின்பற்றி இருந்தால் இன்றைக்கு தந்தை - மகன் என்ற இரு உயிர்கள் பிரிவதற்கு வாய்ப்பில்லை.

எனவே, உச்ச நீதிமன்றம் அர்நேஷ் குமார் வழக்கில் பிறப்பித்த உத்தரவை மீறிய சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மீதும், மாநில அரசும் உயர் நீதிமன்றமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தேவையில்லாத மரணங்கள் நிகழும் என்பதை முன்கூட்டியே கணித்துதான் உச்ச நீதிமன்றம் அதைத் தடுக்கும் பொருட்டு அர்நேஷ் குமார் வழக்கில் வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியது.

ஆனால், தீர்ப்பு வழங்கி 6 ஆண்டுகளாகியும் காவல்துறையும் நீதித்துறையும் அந்த தீர்ப்புக்குத் தலைவணங்கியதாகத் தெரியவில்லை. ஆகையினால் சென்னை உயர் நீதிமன்றமும், தமிழக காவல் துறையின் தலைவரும் உடனடியாக நீதித் துறைக்கும் காவல்துறைக்கும் அர்நேஷ் குமார் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட வேண்டும். தவறும் அதிகாரிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணமடைந்த தந்தை-மகன் குடும்பத்தாருக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு