நீலகிரி மாவட்டம் ஊட்டி, மாந்தாடா பகுதியிலுள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சென்று பார்த்தபோது சிறுத்தை ஒன்று சுருக்கு வலைக் கம்பியில் சிக்கி உயிரிழந்திருப்பதை உறுதிசெய்தனர்.
அதையடுத்து உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். சிறுத்தை இறந்து கிடந்த இடத்துக்கு அருகிலேயே மானின் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். இந்த வனக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், ``விளைநிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புவேலி அருகிலேயே சட்ட விரோதமாக சுருக்கு வலைக் கம்பிகளை வைத்திருக்கின்றனர். இதில் சிக்கிய சுமார் 7 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்திருக்கிறது. அதன் அருகிலேயே மானின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டிருக்கிறது. மானையும் இதே போன்று சுருக்கு வைத்துக் கொன்று புதைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. உடற்கூறாய்வுக்கான மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். தோட்ட உரிமையாளர் மற்றும் உள்ளூர் மக்கள் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம். குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
