Published:Updated:

`கொரோனாவால் சென்னைக் காவல் நிலையங்களில் நோ கேஸ்; காவல்துறை உங்களைக் கண்காணிக்கும்!'- வைரலாகும் ஆடியோ

கொரோனா விழிப்புணர்வு பணியில் போலீஸ்
கொரோனா விழிப்புணர்வு பணியில் போலீஸ்

வீட்டில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு இளைஞர்கள் டூவீலரில் வெளியில் வரக்கூடாது. வந்தால் உடனடி நடவடிக்கை பாயும் ஜாக்கிரதை என எச்சரிக்கிறது, காவல்துறை என்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடந்த 22-ம் தேதி மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதற்கு நாடுமுழுவதும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடி மக்களிடையே உரையாற்றுகிறார். அதில் கொரோனா தொடர்பாக முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள்!’ - `உள்ளே நுழையாதே’ ஸ்டிக்கர் ஒட்டும் மாநகராட்சி
கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

இந்தநிலையில் தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளதால் நேற்று முதல் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பலர் செல்ல கோயம்பேடு, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் குவிந்தனர். அரசின் கணக்குப்படி 2 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படாததால் கோயம்பேடு பஸ் நிலையத்திலும் தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் கடும் மக்கள் கூட்டம் அலைமோதின.

கடந்த 22-ம் தேதி நடந்த மக்கள் ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் ஒரு வழக்குகள்கூட பதிவாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த 22-ம் தேதி நடந்த மக்கள் ஊரடங்கு காரணமாக சென்னையில் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. அதனால் வழக்கமாக காவல் நிலையங்களில் பதிவாகும் செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு, திருட்டு, பிக்பாக்கெட் , கொள்ளை ஆகியவை தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகவில்லை.

``முதல்ல கைகளைக் கழுவுங்க; அதுக்குப் பிறகு புகார் கொடுங்க!" -கொரோனாவால் மாறிய காவல்நிலையங்கள்
கொரோனா விழிப்புணர்வில் போலீஸ்
கொரோனா விழிப்புணர்வில் போலீஸ்

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் குடிமகன்கள் தொல்லைகளால் எந்தப் பிரச்னைகளும் ஏற்படவில்லை. காவல் நிலையங்களில் தினமும் பதிவாகும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அடிதடி, மிஸ்ஸிங் வழக்குகள்கூட அன்றைய தினம் பதிவாகவில்லை. அதனால் சென்னையில் உள்ள 134 காவல் நிலையங்களில் ஒரு சில காவல்நிலையங்களில்தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மற்ற காவல் நிலையங்களில் ஒரு வழக்குகள்கூட பதிவாகவில்லை. ஊரடங்கையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதுவும் வழக்குகள் பதிவாகாததற்கு முக்கிய காரணம்'’ என்றார்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், ``கொரோனா வைரஸ் குறித்த தகவல் காரணமாக காவல் நிலைய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் இதர பிரிவு போலீஸார் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நடமாட்டமும் குறைவானதால் குற்றச் சம்பவங்களும் குறைந்துள்ளன. அதனால்தான் கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் பெரியளவில் எந்தவித குற்றச் சம்பவங்கள் தொடர்பாகவும் வழக்குகள் பதிவாகவில்லை" என்றார்.

கொரோனா விழிப்புணர்வில் அம்பத்தூர் இன்ஸ்பெக்டர்
கொரோனா விழிப்புணர்வில் அம்பத்தூர் இன்ஸ்பெக்டர்

மக்கள் ஊரடங்கை அடுத்து 144 தடை உத்தரவு காரணமாக சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்கள் கைகளைக் கழுவ அறிவுறுத்தப்படுகின்றனர். அதன்பிறகே காவல் நிலையங்களில் புகார் வாங்கப்படுகின்றன. அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் மற்றும் போலீஸார் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

இதற்கிடையில் 144 தடை உத்தரவு தொடர்பாகக் காவல் துறையின் முக்கிய அறிவிப்பு என்று கூறி ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் கிருமியை ஒழிக்க அரசு எடுத்துள்ள முயற்சிக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்கவும் டூவீலரில் மூன்று பேர் வருவது, சுற்றுவது தெரிந்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும். வீட்டு தேவைக்கு மளிகை, காய்கறிகள், பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அவசியம் வாங்க வேண்டும் என்பவர்கள் ஒருவரோ இருவரோ வந்து வாங்கிச் செல்லுங்கள்.

வெறிச்சோடிய கோயம்பேடு பஸ் நிலையம்
வெறிச்சோடிய கோயம்பேடு பஸ் நிலையம்

மாவட்டம் முழுவதும் காவல்துறை உங்களைக் கண்காணிக்கிறது. கூடிய வரை வீட்டிலேயே இருங்கள். அரசு உத்தரவுக்கு மதிப்பளியுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். காவல்துறை மீறி 4 ,5 பேர் வெளியில் சுற்றுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். சட்டம் தன் கடமையைச் செய்யும் சுகாரத்துறை அறிவுறுத்தியபடி சுத்தமாக இருங்கள். உங்கள் வீடுகள் அருகில் யாராவது கொரோனா பாதிப்பிலிருந்தால் உடனே தகவல் தரவும். காவல்துறையின் எச்சரிக்கையை மதியுங்கள். வீட்டில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு இளைஞர்கள் டூவீலரில் வெளியில் வரக்கூடாது. வந்தால் உடனடி நடவடிக்கை பாயும். ஜாக்கிரதை என எச்சரிக்கிறது காவல்துறை என்பதோடு ஆடியோ முடிவடைகிறது.

இந்த ஆடியோ குறித்து சென்னை போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டபோது, ``காவல்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. யார் இப்படியொரு தகவலை சமூக வலைதளங்களில் பதிவு செய்தது என்று விசாரித்து வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு