Published:Updated:

`காந்தி ஜயந்தி அன்றும் களைகட்டிய மது விற்பனை!’ - ஆர்.டி.ஓ ஆய்வால் அலறி ஓடிய விற்பனையாளர்கள்

புதுக்கோட்டையில் ஆர்.டி.ஓ மேற்கொண்ட திடீர் ஆய்வால், மது விற்பனையாளர்கள் பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

அதிரடி ஆய்வு நடத்திய ஆர்.டி.ஓ
அதிரடி ஆய்வு நடத்திய ஆர்.டி.ஓ ( வெங்கடேஷ்.ஆர் )

அக்டோபர் 2 காந்தி ஜயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும். அதன்படி, புதுக்கோட்டையிலும் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டாலும், அங்குள்ள பார்களில் மது விற்பனை களைகட்டியுள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகாலை முதலே கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெற்று வந்தது.

அதிரடி ஆய்வு நடத்திய ஆர்.டி.ஓ
அதிரடி ஆய்வு நடத்திய ஆர்.டி.ஓ
வெங்கடேஷ்.ஆர்

ஹாட்டா.., பீரா... காந்தி ஜயந்தி அன்றும் கிடைக்கும் என்று கூவிக் கூவி விற்பனை செய்துள்ளனர். இந்த நிலையில்தான், மாலை பேருந்து நிலைய சாலை வழியாக வந்த புதுக்கோட்டை ஆர்.டி.ஓ தண்டாயுதபாணி டாஸ்மாக் கடை அருகே கூட்டமாக இருப்பதைக் கண்டு அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத விற்பனையாளர்கள் பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து, அலறி அடித்து ஓடிவிட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் 100 -க்கும் மேற்பட்ட மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஆர்.டி.ஓ இன்னும் சில இடங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிரடி ஆய்வு நடத்திய ஆர்.டி.ஓ
அதிரடி ஆய்வு நடத்திய ஆர்.டி.ஓ
வெங்கடேஷ்.ஆர்

இதனிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த 20 பேரைக் கைது செய்து, சுமார் 600 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி ஆர்.டி.ஓ தண்டாயுதபாணி கூறும்போது, ``அலுவலகம் செல்வதற்காக ஜீப்பில் போயிட்டு இருந்தேன். அப்பத்தான், இங்க ஒரே கூட்டமாக இருக்கிற மாதிரி தெரிஞ்சிச்சு. காந்தி ஜயந்தி அன்னைக்கு முழுமையாக லீவு விட்டாச்சு. ஆனாலும், கள்ளத்தனமாக மது விக்கிறாங்களேனு ரொம்ப கஷ்டமாகிருச்சு. உடனே, என்ன ஏதுன்னு விசாரித்தால், காலையில இருந்து கள்ளத்தனமா மது விற்கிறதாக தெரியவந்துச்சு. உடனே, எதப்பத்தியும் யோசிக்காம ரெய்டு விட்டேன்.

அதிரடி ஆய்வு நடத்திய ஆர்.டி.ஓ
அதிரடி ஆய்வு நடத்திய ஆர்.டி.ஓ
வெங்கடேஷ்.ஆர்

கொஞ்ச நேரத்துக்குள்ளே நாங்க வருவதை தெரிஞ்சிக்கிட்டு பாட்டில்கள் எல்லாத்தையும் வெளியிலேயே போட்டுட்டு ஓடிட்டாங்க. ஏற்கெனவே தினசரி கள்ள மது விற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. போலீஸாரால் அவர்கள் கைது செய்யப்படுறாங்க. ஆனாலும், தொடர்ந்து கள்ளத்தனமாக விற்பனை செய்துகொண்டுதான் இருக்கின்றனர். தொடர்ந்து, அவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.