Published:Updated:

சீவலப்பேரி பாண்டி முதல் மணிகண்டன் வரை... தமிழகத்தில் நடைபெற்ற என்கவுன்டர்கள்! #VikatanInfographics

தமிழகத்தில் 1979 முதல் 2019 வரை என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரம்.

Encounter
Encounter

``உன்ன என்கவுன்டரில் போட்டுத் தள்ளிடுவேன்" என்னும் வசனங்களைப் பல்வேறு திரைப்படங்களில் நாம் கேட்டிருப்போம். அந்தளவுக்கு என்கவுன்டரில் ஒருவரைச் சுட்டுக் கொல்வதென்பது சர்வ சாதாரணமானதா என்ன..?

தமிழகத்தில் இதுவரை என்கவுன்டரில் 80-க்கும் அதிகமானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

போலீஸார் தங்கள் பணியை மேற்கொள்ளும்போது, எதிர்பாராதவிதமாக, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் பதிலடித் தாக்குதல்தான் என்கவுன்டர். இதில், இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

1980-களில் நடந்த என்கவுன்டர் தொடங்கி, அண்மையில் சென்னையில் நடந்த என்கவுன்டர்வரை, பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், பெரும்பாலும் போலீஸார் தரப்பில் சொல்லப்படுவது, 'குற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் குற்றவாளி நடத்திய தாக்குதலில் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள நாங்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினோம்' என்பதாகத்தான் இருக்கும்.

தமிழகத்தில் நடந்த என்கவுன்டர்கள் ஒரு பார்வை:

தமிழகத்தில் என்கவுன்டர் என்பது 1970-களின் இறுதியில்தான் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் அதிகமாக ஊடுருவியிருந்த நக்சலைட்களை ஒழிப்பதற்காக, போலீஸ் உயர் அதிகாரியான தேவாரம், தீவிர நடவடிக்கையை மேற்கொண்டார். அந்தத் துப்பாக்கிகள் பிற்காலத்தில் அப்படியே ரவுடிகளின் பக்கம் திரும்பியது. நாளுக்குநாள் அதிகரித்துவந்த ரவுடியிசத்தை ஒழிக்க, என்கவுன்டர்கள் நடத்தப்படுகின்றன.

List of encounters in Tamil nadu.
List of encounters in Tamil nadu.

கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் புரிந்த சீவலப்பேரி பாண்டி, 1984-ம் ஆண்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின் 1996-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, லயோலா கல்லூரி அருகே நடுவீட்டில் நடந்த மோதலில் பிரபல ரவுடி ஆசைத்தம்பி, அவரின் கூட்டாளிகளான குணா, மனோ ஆகியோர் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகினர். அதே ஆண்டு 'ஜிம் பாடி' கபிலன் என்கிற தாதா அடையாறு அருகே நடந்த மோதலின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

2002-ம் ஆண்டு இமாம் அலி உட்பட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2003-ம் ஆண்டு செப்டம்பர் 26, தூத்துக்குடியில் வேங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த அயோத்திக்குப்பம் வீரமணி, அதே ஆண்டில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Veerappan
Veerappan

2004-ம் ஆண்டு அக்டோபர் 18, சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா, சேது மணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2006-ம் ஆண்டு டிசம்பர் 12, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 'பங்க்' குமார் (எ) கொத்தவால் சாவடி குமார், திருநீர்மலை பகுதியில் போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2007-ம் ஆண்டு ஆகஸ்டு 1, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்படப் பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த வெள்ளை ரவி மற்றும் அவரின் கூட்டாளி குணா, ஓசூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். 2008-ம் ஆண்டு ஜூலை 11, கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற 28 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பாபா சுரேஷ், காசிமேடு பகுதியில் போலீஸாரால் கொல்லப்பட்டார்.

2010-ம் ஆண்டு பிப்ரவரி 16, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் பாண்டி மற்றும் கூடுவாஞ்சேரி வேலி இருவரும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டில் சாத்தூர் - கோவில்பட்டி சாலை பகுதியில் பதுங்கியிருந்த சாத்தூர் குமாரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். மேலும், நவம்பர் 10, கோவையில் 10 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைசெய்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் மோகன் ராஜ், என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

2006 - 2010 காலகட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 29 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2012-ம் ஆண்டு சிவகங்கை காவலர் சால்பின் சுதனைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான பிரபு, பாரதி இருவரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2012-ம் ஆண்டு பிப்ரவரி, பல்வேறு வங்கிக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட, பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரை, சென்னை வேளச்சேரியில் போலீஸார் என்கவுன்டரில் கொன்றனர். 2018-ம் ஆண்டு மார்ச் 1, மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி ஆகியோர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே ஆண்டு, ஜூலை மாதம் ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன், தரமணியில் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

2019-ம் ஆண்டு மே 2, சேலம் காரிப்பட்டி பகுதியில் கதிர்வேல் என்ற ரவுடி போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Vikatan

அதேபோல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் நாள், சென்னை மாதவரம் பகுதியில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இவர் மீது கொலை, கொள்ளை போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

செப்டம்பர் 24-ம் தேதி, விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் கொரட்டூரில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது எட்டு கொலை வழக்கு உட்படக் கொள்ளை, ஆள்கடத்தல் என பல்வேறு பிரிவுகளில் 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2018-ம் ஆண்டு பிணையில் வெளிவந்தவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

'நாங்கள் திருந்த விரும்புகிறோம்' என்று சொன்ன ரவுடிகள் மற்றும் தாதாக்கள் சிலரும், சரணடைந்த ரவுடிகள் சிலரும் எப்படி என்கவுன்டரில் இறந்தார்கள் என்பது இன்றும், தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.

'என்கவுன்டரில் சுட்டுக்கொலை' என்னும் செய்திகள் தொடர்கதையாகிக்கொண்டுதான் இருக்கின்றன. மனித உரிமைகள் அமைப்புகளும், இதுபோன்ற என்கவுன்டர்களைத் தொடர்ந்து கண்டித்து வந்தபோதிலும், அத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. என்கவுன்டர் என்பது ஒரு பிரச்னைக்குத் தீர்வாக காவல்துறை நினைக்கக் கூடாது. திரைப்படங்களிலும் என்கவுன்டரை ‘ரொமாண்டிசைஸ்’ செய்யும் காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நீதி என்ற அமைப்பின்மீதான நம்பிக்கை வலுவிழந்து போகும் வாய்ப்புகள் உண்டு.

காதல் மனைவியின் கட்டளை; மிரட்டிய கொலை, கொள்ளை வழக்குகள்! - ரவுடி மணிகண்டன் `என்கவுன்டர்' பின்னணி