Published:Updated:

வேலையில் சேர்ந்த 25 நாள்களுக்குள் லட்சாதிபதியாக ஆசைப்பட்ட இளம்பெண்!- மேலாளருடன் சிக்கிய பின்னணி

எஸ்.மகேஷ்

வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில், அம்பிகா கண்ட நிகழ்வுகள் அவரின் மனதை மாற்றியுள்ளது. அதன்பிறகுதான் அவர், தன்னுடைய ஆண் நண்பர் மூலம் அன்விகாவை கடத்த மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

அம்பிகா
அம்பிகா

சென்னை செனாய் நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இவரின் மனைவி நந்தினி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றிவருகிறார். இவர்களது மகள் அன்விகா, முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்துவருகிறார். இவர்களது வீட்டில் விராலிமலையைச் சேர்ந்த அம்பிகா என்பவர் வீட்டு வேலைகளைச் செய்துவந்தார்.

கடத்தப்பட்ட குழந்தை குடும்பத்தினருடன்
கடத்தப்பட்ட குழந்தை குடும்பத்தினருடன்

பள்ளி முடிந்து அன்விகா நேற்று பிற்பகல் வீடு திரும்பினார். இந்தச் சமயத்தில், டாக்டர் வீட்டின் முன் மின்னல்வேகத்தில் வந்த கார் நிறுத்தப்பட்டது. வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த குழந்தை அன்விகா மற்றும் வேலைக்காரப்பெண் அம்பிகா ஆகியோர் காரில் கடத்தப்பட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தினி, போனில் கணவர் அருள்ராஜுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இருவரும் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சட்டசபை நடந்துவரும் நேரத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் என்ற தகவல் காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கடத்தப்பட்ட குழந்தையை உடனடியாகக் கண்டுப்பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், காவல்துறை உயரதிகாரிகள் நாலாபுறமும் குழந்தையைத் தேடினர்.

இந்த நிலையில் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பெருந்துறை முருகன், ராஜேஷ் கண்ணா ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, காரின் நம்பர் மற்றும் குழந்தை, அம்பிகா ஆகியோர் காருக்குள் ஏறும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

குழந்தை அன்விகா
குழந்தை அன்விகா

இந்தச் சமயத்தில், அருள்ராஜிக்கு அம்பிகாவின் செல்போன் நம்பரிலிருந்து அழைப்புவந்தது. அதைஎடுத்த அருள்ராஜ், பதற்றத்துடன் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். எதிர்முனையில் பேசியது ஓர் ஆணின் குரல், `உன் மகளையும் வேலைக்காரியையும் கடத்திவிட்டோம். அவர்களை உயிரோடு விட வேண்டும் என்றால் 60 லட்சம் ரூபாயை நான் சொல்லும் இடத்துக்கு தனியாகக் கொண்டுவர வேண்டும். காவல்துறைக்கு தகவல் கொடுத்தால், உன் மகளை உயிரோடு பார்க்க முடியாது' என்று கூறி இணைப்பைத் துண்டித்தார். இதனால், அருள்ராஜும் நந்தினியும் பதற்றமடைந்தனர்.

இந்தத் தகவலையும் தனிப்படை போலீஸாருக்கு உடனடியாக தெரிவித்தார் அருள்ராஜ். அந்த செல்போன் நம்பரின் சிக்னலை போலீஸார் ஆய்வுசெய்தபோது, அது கிழக்குக் கடற்கரைச்சாலை, கோவளத்தில் உள்ள விடுதிப் பகுதியைக் காட்டியது. இதனால், ஒரு தனிப்படை போலீஸ் டீம் கோவளத்துக்கு விரைந்தது. அதற்குள் கோவளம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விடுதியைத் தேடினர்.

குழந்தை அன்விகா
குழந்தை அன்விகா

தொடர்ந்து செல்போன் சிக்னலை போலீஸார் கண்காணித்தபோது, கோவளத்திலிருந்து புழல் நோக்கி வருவதை போலீஸார் கண்டறிந்தனர். புழல் பகுதியில் செல்போன் சிக்னல் காட்டியதால், அங்கும் ஒரு தனிப்படை போலீஸ் டீம் சென்றது. செல்போன் சிக்னல் அடிப்படையில் வாலிபர் ஒருவரை போலீஸார் மடக்கினர். ஆனால், அவர் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடினார். அவர், கீழே விழுந்ததில் கை, காலில் காயம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் போலீஸார் அந்த வாலிபரைப் பிடித்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, அன்விகா கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது வேலைக்காரப் பெண் அம்பிகா என்பது தெரிந்தது. இதனால் போலீஸாரும் குழந்தையின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பிடிபட்ட நபர் புழல் பகுதியைச் சேர்ந்த முகமது கலிபுல்லா சேட் என்பது தெரிந்தது. முகமது கலிபுல்லா சேட் கொடுத்த தகவலின் அடிப்படையில், விடுதியில் இருந்த குழந்தை அன்விகாவை போலீஸார் மீட்டனர். அம்பிகாவை அமைந்தகரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

முகமது கலிபுல்லா சேட்
முகமது கலிபுல்லா சேட்

குழந்தையைப் பார்த்த அருள்ராஜ்-நந்தினி, ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர். அம்மாவையும் அப்பாவையும் கட்டிப்பிடித்துக் கொண்டார் அன்விகா. காவல் நிலையத்தில் நடந்த இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களையும் கண்கலங்கவைத்தது. குழந்தையை மீட்டுக்கொடுத்த போலீஸாருக்கு அருள்ராஜ்- நந்தினி நன்றி தெரிவித்தனர்.

இதற்கிடையில், போலீஸார் பிடிக்க முயன்றபோது முகமது கலிபுல்லா சேட் கீழே விழுந்ததால் அவருக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது. அதற்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் அம்பிகா, முகமது கலிபுல்லாசேட் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி நம்மிடம், ``அம்பிகா, இணையதளத்தில் வீட்டு வேலைக்காகப் பதிவுசெய்துள்ளார். அதைப்பார்த்துதான் அருள்ராஜ், அவரை கடந்த 25 நாள்களுக்கு முன் வீட்டு வேலைக்குச் சேர்த்துள்ளார். வீட்டிலேயே தங்கியிருந்த அம்பிகா, அருள்ராஜ்-நந்தினி சொகுசாக வாழ்வதைப் பார்த்து வாயடைத்துப் போயிருந்தவர், தன்னுடைய ஆண் நண்பர் முகமது கலிபுல்லா சேட்டிடம் இந்தத் தகவலைத் தெரிவித்ததோடு, அன்விகாவைக் கடத்த ஐடியா கொடுத்துள்ளார். அதன்பேரில்தான் அன்விகாவைக் கடத்த முகமது கலிபுல்லா சேட்டுக்கு அம்பிகா உறுதுணையாக இருந்துள்ளார். குழந்தையின் அப்பாவிடம் 60 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, இருவரும் ஜாலியாக வாழ திட்டமிட்டுள்ளனர். ஆனால், குழந்தை கடத்தப்பட்ட 10 மணி நேரத்துக்குள் அம்பிகாவையும் முகமது கலிபுல்லா சேட்டையும் பிடித்து குழந்தையை மீட்டுவிட்டோம்" என்றார்.

குழந்தை கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது வேலைக்காரப் பெண் அம்பிகா என்பதும் தெரிந்தது. இதனால் போலீஸாரும் குழந்தையின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணை அதிகாரி

தனிப்படை போலீஸார் கூறுகையில், ``முகப்பேரில் உள்ள தனியார் உணவகத்தில் அம்பிகா சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்துள்ளார். அப்போதுதான் அங்கு வேலைபார்த்த முகமது கலிபுல்லா சேட்டுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது முகமது கலிபுல்லா சேட், புழல் பகுதியில் உள்ள உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.

அம்பிகாவும் முகமது கலிபுல்லா சேட்டும் ஆடம்பரமாக வாழ்வது குறித்து அடிக்கடி ஆலோசிப்பதுண்டு. இந்தச் சமயத்தில்தான் அன்விகாவைக் கடத்தினால் விரும்பிய வாழ்க்கையை இருவரும் வாழலாம் என்று அம்பிகா கூறியதும் முகமது கலிபுல்லா சேட்டும் கடத்தலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்" என்றனர்.

வேலைக்குச் சேர்ந்த 25 நாள்களுக்குள் லட்சாதிபதியாக ஆசைப்பட்ட அம்பிகா மற்றும் அவரின் ஆண் நண்பர் முகமது கலிபுல்லா சேட் ஆகியோர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், அம்பிகாவின் வாழ்க்கையில் நடந்த சோகக் கதையைக் கூறியுள்ளார்.