Published:Updated:

“பயப்படாதீங்க... இதுக்குப் பேரு கூட்டுக் கடன்!” - கலங்கவைக்கும் கடன் மோசடி

கடன் மோசடி
பிரீமியம் ஸ்டோரி
கடன் மோசடி

உங்க வீட்டுப் பத்திரத்தை பேங்க்ல அடமானம்வெச்சுருக்கோம்கறதை ரெஜிஸ்டர் செய்யணும்’னு சொல்லி, என்னை பத்திரப்பதிவு ஆபீஸுக்குக் கூப்பிட்டாரு

“பயப்படாதீங்க... இதுக்குப் பேரு கூட்டுக் கடன்!” - கலங்கவைக்கும் கடன் மோசடி

உங்க வீட்டுப் பத்திரத்தை பேங்க்ல அடமானம்வெச்சுருக்கோம்கறதை ரெஜிஸ்டர் செய்யணும்’னு சொல்லி, என்னை பத்திரப்பதிவு ஆபீஸுக்குக் கூப்பிட்டாரு

Published:Updated:
கடன் மோசடி
பிரீமியம் ஸ்டோரி
கடன் மோசடி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வடுவூரைச் சேர்ந்த விவசாயிகளின் வீடு மற்றும் நிலப் பத்திரங்களைப் பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நமக்குக் கிடைத்த முதற் கட்ட தகவலை வைத்து, ‘மோசடியில் இது புது வகை!’ என்ற தலைப்பில் கடந்த இதழ் ‘லோக்கல் போஸ்ட்’ பகுதியில் இது குறித்து எழுதியிருந்தோம். தற்போது வாங்காத கடனுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை ஜப்தி நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் விவசாயிகள் பரிதவித்துப் போயிருக்கிறார்கள்.

வடுவூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்தோம். அவர்களில் ராஜேந்திரன் என்பவர் நம்மிடம், ‘‘ராமகிருஷ்ணன் மிகவும் வசதியான நிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரோட அப்பா தட்சணாமூர்த்தி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. ராமகிருஷ்ணன் குடும்பத்துக்கு ஏகப்பட்ட நிலம் இருக்கு. கதிர் அடிக்கும் இயந்திரம், டிராக்டர்கள்னு வசதி வாய்ப்புகளோட இருக்குறதால ஊர் மக்களிடம் மதிப்பு, மரியாதை அதிகம். நாலஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி, பணக் கஷ்டத்துல இருக்குற விவசாயிகளுக்குத் தானா தேடிவந்து உதவி செஞ்சாரு.

 “பயப்படாதீங்க... இதுக்குப் பேரு கூட்டுக் கடன்!” - கலங்கவைக்கும் கடன் மோசடி

எனக்கு விவசாய மேம்பாட்டுக்காக ஆறு லட்ச ரூபா பணம் தேவைப்பட்டுச்சு. ‘நீங்க கேட்டா, எந்த பேங்க்லயும் கடன் தர மாட்டாங்க. நான் உங்களுக்கு ஜாமீன் போட்டு, தஞ்சாவூர் ஆக்சிஸ் பேங்க்ல லோன் வாங்கித் தர்றேன்’னு சொல்லி, எங்க வீட்டுப் பத்திரத்தைக் கேட்டார். நானும் நம்பிக் கொடுத்தேன். நிறைய ஆவணங்கள்ல கையெழுத்து வாங்கினாரு. ‘லோன் ரெடியாகிடுச்சு. உங்க வீட்டுப் பத்திரத்தை பேங்க்ல அடமானம்வெச்சுருக்கோம்கறதை ரெஜிஸ்டர் செய்யணும்’னு சொல்லி, என்னை பத்திரப்பதிவு ஆபீஸுக்குக் கூப்பிட்டாரு. ‘கடன் தொகை 15 லட்சம்’னு போட்டிருந்ததைப் பார்த்து நான் மிரண்டுபோயிட்டேன்.

அது பத்திக் கேட்டதுக்கு, ‘உங்க ஒருத்தருக்கு மட்டும் தனியா கடன் தர மாட்டாங்க. உதயராணிங்கிற விவசாயிக்கும் எனக்கும் சேர்த்துதான் கடன் வாங்குறேன். உங்களுக்கு ஆறு லட்சம், உதயராணிக்கு ஒன்றரை லட்சம், எனக்கு ஏழரை லட்சம். நாம மூணு பேரும் தனித்தனியா வட்டியை மட்டும் கட்டிக்கிட்டு இருப்போம். நம்மால எப்ப முடியுதோ, அப்ப அசலைக் கட்டி பத்திரத்தை மீட்டுடலாம்’னு சொன்னாரு. பேங்க் பாஸ்புக், ஏ.டி.எம் கார்டு, செக் புக் எல்லாத்தையும் அவரே வெச்சுக்கிட்டார். என்கிட்ட செக்ல கையெழுத்து வாங்கிக்கிட்டு, ஆறு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தாரு. 2018 வரைக்கும் நான் வட்டி கட்டினேன். கஜா புயலுக்குப் பிறகு வட்டி கட்ட முடியலை.

ராமகிருஷ்ணன் - ராஜேந்திரன் - விவேகானந்தன்
ராமகிருஷ்ணன் - ராஜேந்திரன் - விவேகானந்தன்

அதுக்கு அப்புறம் 15 லட்சம் அசலையும் அதுக்கான வட்டியையும் கட்டச் சொல்லி, பேங்க்ல இருந்து எனக்குத் தொடர்ச்சியா நோட்டீஸ் வந்துச்சு. ராமகிருஷ்ணன்கிட்ட இது சம்பந்தமா கேட்டப்பல்லாம், ‘ஆக்சிஸ் பேங்க்ல என்னோட பணம் பல கோடி ரூபாய், எஃப்.டி-யில இருக்கு. நோட்டீஸ் பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க’னு சொன்னாரு. ஆனா இப்ப, எங்க வீட்டை ஜப்தி பண்ணப் போறதா, நோட்டீஸ் வந்திருக்கு. முழுத் தொகையையும் நான் கட்டினாத்தான், என்னோட வீட்டைக் காப்பாத்த முடியும்’’ என்றார் கலக்கமாக.

விவசாயி விவேகானந்தன் என்பவர், ‘‘கடன் வாங்குறதுக்காக 2014 நவம்பர் மாசம் வீடு, நிலப் பத்திரத்தை ராமகிருஷ்ணன்கிட்ட கொடுத்தேன். ஆக்சிஸ் பேங்க்ல கடன் தொகை

23 லட்சம்னு இருந்தைப் பார்த்து நான் பதறினேன்... ‘இதுக்குப் பேரு கூட்டுக்கடன்... நீங்க பயப்படாதீங்க’னு சொன்னார். எனக்கு நாலரை லட்சம் ரூபாய் கொடுத்தார். சிவக்குமார் என்பவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்துட்டு, மீதித் தொகை 17 லட்சத்தை அவர் வெச்சுக்கிட்டார்.

2018-க்குப் பிறகு என்னால் வட்டி கட்ட முடியலை. அவரும் கட்டலை. பேங்க்ல இருந்து நோட்டீஸ் வர ஆரம்பிச்சுது. ராமகிருஷ்ணன்கிட்ட கேட்டதுக்கு ‘நீங்க கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்குறேன்’னு சொன்னார். 2021, ஜனவரி மாசம் எங்க வீட்டை ஜப்தி பண்ண பேங்க்குல இருந்து அதிகாரிகள் வந்தாங்க. ‘ராமகிருஷ்ணன்தான் அதிக தொகை வாங்கியிருக்காரு’னு நான் சொன்னதுக்கு, ‘டாக்குமென்ட்ல அவர் பேரே இல்லை. கடனுக்கு நீங்கதான் முழுப் பொறுப்பு’ன்னு சொல்லிட்டாங்க. கடன் சமரசத் தீர்வு மையத்துக்குப் போனேன். ஜப்தி நடவடிக்கையைத் தள்ளிவைக்க, கடன் தொகையில மூணுல ஒரு பங்கைக் கட்டச் சொன்னாங்க. சிரமப்பட்டு கட்டி முடிச்சேன்’’ என்றார் சோகமாக.

 “பயப்படாதீங்க... இதுக்குப் பேரு கூட்டுக் கடன்!” - கலங்கவைக்கும் கடன் மோசடி

இப்படி ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியல் இன்னும் நீள்கிறது. ராமகிருஷ்ணனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வடுவூரில் அவரது வீட்டின் காம்பவுண்ட் கேட் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ‘‘அவர் வீட்டுக்கே வருவதில்லை” என்றார்கள் அக்கம்பக்கத்தினர். இந்த வழக்கை விசாரித்துவரும் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சிவவடிவேலுவிடம் பேசினோம். ‘‘ஆரம்பகட்ட விசாரணை நடக்கிறது. ராமகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். அவர் மேல் ஏற்கெனவே சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு நடந்துகொண்டிருக்கிறது’’ என்றார்.

இந்த 21-ம் நூற்றாண்டிலும் இப்படி மக்களை அப்பாவியாக்கி ஏமாற்ற முடியும் என்பது அதிர்ச்சி தருகிறது. நம்மைச் சுற்றி மோசடிப் பேர்வழிகள் பல வடிவங்களில் இருக்கிறார்கள். விழிப்புடன் இருக்க இந்தச் சம்பவம் ஒரு பாடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism