திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகிலுள்ள விக்கிரபாண்டியம் ஊராட்சி அருவி விழிமங்கலத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் குமார், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.
நடப்பு ஆண்டு, விக்கிரபாண்டியம் ஊராட்சியில் 17 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஊரக வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் விக்கிரபாண்டியம் ஆற்றங்கரைத் தெருவில் வசித்துவரும் குமார் என்பவர், தன் மனைவி ஜேஸ்லிமேரி பெயரில் விண்ணப்பித்திருந்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பணி ஆணை, ஊராட்சி செயலாளர் குமாரிடம் இருந்திருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையைப் பெறுவதற்காக, ஜேஸ்லிமேரியின் கணவர் குமார், விக்கிரபாண்டியம் ஊராட்சி செயலாளர் குமாரைப் பலமுறை அணுகியிருக்கிறார். ஆனால், அவர் இதை வழங்காமல் அலைக்கழித்திருக்கிறார். பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் பணி ஆணை வழங்க முடியும் என ஜேஸ்லிமேரியின் கணவர் குமாரிடம், ஊராட்சி செயலாளர் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அவரிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லாததாலும், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததாலும் ஜேஸ்லிமேரியின் கணவர் குமார், இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்.

ஊராட்சி செயலாளர் குமாரைக் கையும் களவுமாகப் பிடிக்க துணை கண்காணிப்பாளர் நந்தகோபால், ரசாயனப் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜேஸ்லிமேரியின் கணவர் குமாரிடம் கொடுத்து அந்தப் பணத்தை ஊராட்சி செயலாளர் குமாரிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார்.
அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற குமார், அந்த பணத்தை, ஊராட்சி செயலாளர் குமாரிடம் கொடுத்திருக்கிறார். அதை அவர் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் நந்தகோபால், ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா ஆகியோர் ஊராட்சி செயலாளர் குமாரைக் கையும், களவுமாகப் பிடித்து கைதுசெய்திருக்கிறார்கள். ஊராட்சி செயலாளர் குமார் தொடர்ச்சியாகப் பல லஞ்ச முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிவந்த நிலையில், தற்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கான பணி ஆணை வழங்க, பயனாளியிடம் லஞ்சம் கேட்டு சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.