தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியில் தெருக்களில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த நபர் ஒருவர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பேசியிருக்கிறார். இதையடுத்து, அந்த நபர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, அந்தப் பகுதி மக்கள் அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர்.
தகவலறிந்த தென்கரை போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது சிறுமிகளுக்குத் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படும் நபர் தேனி, அல்லிநகரத்தைச் சேர்ந்த பாண்டி (43) எனத் தெரியவந்தது. கடந்த சில நாள்களாகவே வடுகபட்டி பகுதியில் அவர் சுற்றித்திரிந்திருக்கிறார். அவரின் செல்போனில் சிறுமிகளின் புகைப்படங்கள் நிறைய இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்ததால், அவருக்கு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். ``எங்கள் பகுதியில் வேறு நபர் யார் வந்தாலும் தெரிந்துவிடும். அதனால் இவரின் நடமாட்டம் குறித்து மக்கள் பேசத் தொடங்கினர். சிலர் அந்த நபர் சிறுமிகளை போட்டோ எடுப்பதையும் பார்த்துள்ளனர். கடந்த சில நாள்களாக அவரின் நடமாட்டம் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. திருடுவதற்காக நோட்டம் பார்க்கிறாரா என்றெல்லாம் பேசிக்கொண்டனர். இந்த நிலையில், சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, அருகே உள்ள பாழடைந்த கட்டடத்துக்கு அவர் அழைத்துச் செல்வதைப் பார்த்த மக்கள், அவரைப் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கினர்'' என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸாரிடம் விசாரித்தோம். ''பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைதான். தேனி, அல்லிநகரத்தில் பலசரக்குக்கடை நடத்திவரும் பாண்டி, ஜெயமங்கலத்தில் அவர் உறவினரின் துக்க நிகழ்வுக்கு வந்திருக்கிறார். அப்போது காட்டுப்பகுதியில் தனது செல்போனில் ஆபாசப்படங்களை பார்த்திருக்கிறார். இதையடுத்துதான் அவர், சிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார்'' என்றனர்.
தற்போது அந்த நபரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.