Published:Updated:

பெரியபாளையம்: பாதையை ஆக்கிரமித்து வேலி! - தலைமைக் காவலர்மீது காவல் நிலையத்தில் புகார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவலர்மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்!
காவலர்மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்!

பொதுப் பாதையை ஆக்கிரமித்து, வேலி அமைத்து அடாவடி செய்து வருவதாக திருவாலங்காடு தலைமைக் காவலர்மீது பகுதிவாசிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை, அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் ஆக்கிரமித்து வேலி அமைத்திருப்பதாகவும், காவலர் என்பதால் ஆக்கிரமிப்பு குறித்துக் கேட்க வருபவர்களை மிரட்டல் தொனியில் எச்சரிப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் நேற்றைய தினம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

வள்ளலார் நகர்ப் பகுதி மக்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகர்ப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகிறோம். எங்கள் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், திருவாலங்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிவருகிறார். அவர் பல வருட காலமாகப் பொதுமக்கள் பயன்படுத்திவந்த பாதையை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலி அமைத்து ஆக்கிரமித்துக்கொண்டார். அதனால், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்பு குறித்து காவலர் ரமேஷிடம் கேட்டபோது, `அப்படித்தான் வேலி போடுவேன். இது என்னுடைய நிலம்' என்று அடாவடியாகக் கூறுகிறார். இது பற்றி ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகார் அளித்தோம். அவர் காவலர் ரமேஷிடம் நேரில் பேசி, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொடுத்தார்.

ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதை
ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதை

ஆனால், அடுத்த சில நாள்களிலேயே ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு மதிப்பளிக்காமல் காவலர் ரமேஷ் மீண்டும் வேலி அமைத்து, தற்போது கற்கள் பதித்து கட்டுமானப் பணிகளுக்கு பொது இடத்தை தயார்ப்படுத்திவருகிறார். காவலர் என்பதால் அவரை அணுகிப் பேச அச்சமாக இருக்கிறது. எனவே, சட்டவிரோதமாகப் பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் திருவாலங்காடு தலைமைக் காவலர் ரமேஷ் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

வள்ளலார் நகர் மக்களின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட பெரியபாளையம் போலீஸார், புகார்மீது நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருக்கின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெரியபாளையம் ஊராட்சி மன்றத் தலைவி லட்சுமி, ``பொதுப் பாதையை ஆக்கிரமித்து தலைமைக் காவலர் ரமேஷ் வேலி அமைத்துவிட்டதாக ஏற்கெனவே ஒருமுறை பகுதி மக்கள் என்னிடம் புகார் அளித்திருந்தனர். அப்போது, நானே நேரில் சென்று காவலரிடம் பேசி ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வலியுறுத்தினேன். அந்த நேரத்தில், வேலிகளை அகற்றி நிலத்தை ஒப்படைத்தார். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் வேலி அமைத்து அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார்.

ரமேஷின் இந்த ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவி என்ற முறையில் பலமுறை கேட்டும் காவலர் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது வேலி அமைத்தது மட்டுமல்லாமல், கற்கள் பதித்து வருவதாகப் பகுதி மக்கள் என்னிடம் மீண்டும் புகார் அளித்தனர். காவலர் ரமேஷ் ஏற்கெனவே அவருடைய வீட்டின் அருகேயுள்ள ஐந்து சென்ட் பொது இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறார். அதைக்கூட பகுதி மக்கள் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போது பொதுப் பாதையை ஆக்கிரமித்திருக்கிறார். அதனால், அவர்மீது பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தேன். அதன்படி, அவர்களும் புகார் அளித்திருக்கிறார்கள்" என்றார்.

வள்ளலார் பகுதி மக்கள்
வள்ளலார் பகுதி மக்கள்

புகார் தொடர்பாக பெரியபாளையம் போலீஸாரிடம் கேட்டபோது, "பொது இடத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படும் ரமேஷ் தற்போது ஊரில் இல்லை. அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் விளக்கமளிக்குமாறு கூறியிருக்கிறோம். பகுதி மக்கள் அந்த இடம் தொடர்பான ஆவணங்களின் நகல்களையும் புகார் மனுவுடன் இணைத்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு