Published:Updated:

முதலில் தத்தெடுப்பு; பின்னர் இன்ஷூரன்ஸ்!- ரூ.1.20 கோடிக்கு ஆசைப்பட்டு மகனைக் கொன்ற லண்டன் தம்பதி

அவர்கள் கோபாலை தங்களோடு அழைத்துச் செல்லவில்லை. அதற்கு காரணம், `விசா உள்ளிட்ட ஆவணங்களை ஏற்பாடு செய்து தருகிறோம்' என்று கூறிவிட்டு லண்டன் சென்றுவிட்டனர்.

தம்பதி
தம்பதி

குஜராத்தைப் பூர்வீகமாகக்கொண்ட லண்டன் தம்பதி, பணத்துக்காக தத்தெடுத்த மகனைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்தச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால், அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அரசு மறுத்து வருகிறது.

மேற்கு லண்டனில் உள்ள ஹன்வெல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்த்தி தீர் (55) மற்றும் கவல் ரய்ஜடா (30). கடந்த 2015-ம் ஆண்டு இருவரும் இந்தியா வந்துள்ளனர். குஜராத்தில் உள்ள கேஷோட் பகுதிக்கு வந்த அவர்கள், தங்களுக்குப் பொருத்தமான குழந்தை ஒன்றை தத்தெடுக்க முடிவு செய்தனர்.

கோபால்
கோபால்

இது தொடர்பாக அங்குள்ள உள்ளூர் பத்திரிகை ஒன்றில் விளம்பரமும் வெளியிட்டனர். அதில், `இந்தியாவில் தத்தெடுக்கும் குழந்தையை நாங்கள் லண்டனுக்கு அழைத்துச்செல்ல விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த விளம்பரத்தைப் பார்த்த கோபால் என்ற சிறுவனின் குடும்பத்தினர் லண்டன் தம்பதியை அணுகியுள்ளனர். 11வயதான கோபால் தன் அக்கா மற்றும் அவரின் கணவருடன் குஜராத்தில் வாழ்ந்துவந்தார். கோபாலை தத்துக் கொடுக்க அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

காரணம், இங்கிருப்பதைக்காட்டிலும், சிறப்பான வாழ்க்கை அவனுக்கு கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தில், தத்துக்கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளனர். தத்தெடுத்த சில நாள்களிலே லண்டன் தம்பதி அந்தச் சிறுவன் மீது 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றையும் எடுத்துள்ளனர். இதையடுத்து, இந்த ஜோடி லண்டனுக்கு திரும்பியுள்ளனர். ஆனால், அவர்கள் கோபாலை தங்களோடு அழைத்துச் செல்லவில்லை. அதற்கு காரணம், `விசா உள்ளிட்ட ஆவணங்களை ஏற்பாடு செய்து தருகிறோம்' என்று கூறிவிட்டு லண்டன் சென்றுவிட்டனர். இதனிடையே, 2017-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி மோட்டர் பைக்கில் வந்த இருவர், கோபாலின் அக்கா கணவர் கர்தானி என்பவரை தாக்கி சிறுவன் கோபாலைக் கடத்திச் சென்று குத்திக்கொலை செய்துள்ளனர்.

 கவல் ரய்ஜடா
கவல் ரய்ஜடா

இருவரும் மருத்துவமனையிலே உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொலையாளிகளை பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், லண்டன் தம்பதி கூறியதால் இந்தக் கொலையைச் செய்தோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தம்பதி இருவரும் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று லண்டனில் கைது செய்யப்பட்டனர். மேலும், விசாரணைக்காக இந்திய அரசு அவர்களை ஒப்படைக்க கோரிவரும்நிலையில், இங்கிலாந்து அதற்கு மறுத்து வருகிறது.

வழக்கு விசாரணையின்போது, நீதிபதி, எம்மா ஆர்புட்நாட், ``தம்பதியினர் இருவரும் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதால், இருவரையும் இந்தியா வசம் ஒப்படைக்க போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் குஜராத்தில் இரட்டைக் கொலைக்கான தண்டனை பரோல் இல்லாத சிறைவாசம் என்பதால், அவர்களை ஒப்படைப்பது இங்கிலாந்து சட்டத்தின் மனித உரிமைகளுக்கு முரணாக இருக்கிறது. அதனால் ஒப்படைக்க முடியாது” என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இந்திய அதிகாரிகள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தம்பதியர்களின் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.