Published:Updated:

குமரி: கேரளாவுக்குக் கனிமவளம் கடத்திய 11 லாரிகள் பறிமுதல்! - இரு மடங்கு பாரம்; அதிகாரிகள் அதிர்ச்சி

கனிமவளம் கடத்தியதாக பறிமுதல்செய்யப்பட்ட லாரிகள்
கனிமவளம் கடத்தியதாக பறிமுதல்செய்யப்பட்ட லாரிகள்

தமிழக - கேரள எல்லைப் பகுதியான நெட்டா, களியக்காவிளை போன்ற சோதனைச்சாவடிகள் வழியாக டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமான பாரத்துடன் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன.

கட்டுமானப் பணிகளுக்காக பாறைகளை உடைத்துப் பெறப்படும் கற்கள், ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் எனப் பல்வேறுவிதங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மலைகளை உடைத்து கேரளாவுக்கு எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி எனப் பலவிதங்களில் கேரளாவுக்குக் கடத்திவருகின்றனர்.

கேரளாவில் நடக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், நான்கு வழிச்சாலை, விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளுக்காக என தினந்தோறும் 50 டிப்பர் லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் போன்றவற்றுக்க்கு அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால், தினமும் 700 லாரிகளுக்கும் மேல் கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்பட்டுவருகின்றன என்கிறார்கள் விவரமறிந்த சிலர். தமிழக - கேரள எல்லைப் பகுதியான நெட்டா, களியக்காவிளை போன்ற சோதனைச்சாவடிகள் வழியாக டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமான பாரத்துடன் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன.

தோட்டியோடு பகுதியில் அழிக்கப்படும் மலைகள்
தோட்டியோடு பகுதியில் அழிக்கப்படும் மலைகள்

இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தொடர் புகார்கள் சென்றன. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களில் அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக இரண்டாயிரம் டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 40 லட்சம் ரூபாய் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சில அதிகாரிகளின் ஆசியோடு லாரிகளில் அனுமதியில்லாமல் கனிமவளங்களைக் கேரளாவுக்குக் கடத்துவது அதிக அளவில் நடந்துவருகிறது. அபராதம் விதிப்பது கண்துடைப்புக்காக எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

`ஆன் டூட்டி, ரயில்வே; லாரியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்!'- கனிமவள அதிகாரிகளைப் பதறவைத்த கும்பல்

மேலும் தமிழக மலைகளை உடைத்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக அதிக அளவு கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், இது தொடர்ந்தால் கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் விரைவில் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கனிமவளக் கடத்தலுக்கு எதிராகச் சில அரசியல் கட்சியினர் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் கேரள எல்லையோரப் பகுதிகளில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்

அதில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், முறையான அனுமதியில்லாமலும், அதிக பாரத்தோடு சென்ற 11 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், அதிகாரிகள் தொடர்ச்சியாகச் சோதனை நடத்திவருகின்றனர். இந்தச் சோதனையில் 15 டன் ஏற்றவேண்டிய டிப்பர் லாரிகளில் 30 டன் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்தன. 25 டன் ஏற்றவேண்டிய டிப்பர் லாரியில் 50 டன் ஏற்றி செல்வதும் தெரியவந்துள்ளது. லாரிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட இரு மடங்கு அதிக பாரம் ஏற்றிச் செல்வதைக் கண்ட அதிகாரிகளே அதிர்ந்துபோயினர்.

அடுத்த கட்டுரைக்கு