Published:Updated:

திண்டுக்கல்: ஆன்லைன் ரம்மியில் ரூ.50,000 வரை இழப்பு; மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

அருண்குமார்

கடந்த 2 ஆண்டுகளாக செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறார். இதில் 50,000 ரூபாய் வரை அருண்குமார் இழந்திருக்கிறார்.

திண்டுக்கல்: ஆன்லைன் ரம்மியில் ரூ.50,000 வரை இழப்பு; மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

கடந்த 2 ஆண்டுகளாக செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறார். இதில் 50,000 ரூபாய் வரை அருண்குமார் இழந்திருக்கிறார்.

Published:Updated:
அருண்குமார்

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் கருமன்கிணறு அருகே கூத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (23). பி.காம் படித்திருக்கும் இவர், கடந்த டிசம்பர் 19-ம் தேதி வீட்டைவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள பொது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அருண்குமார் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் இத்தகைய முடிவை எடுத்ததாகக் கூறுகிறார்கள்.

அருண்குமாரின் வீடு
அருண்குமாரின் வீடு

இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாரிடம் விசாரித்தோம். ``அருண்குமார்  சிறுவயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்துவிட்டார். தாய் விஜயலட்சுமிதான் மகனை கூலி வேலை செய்து வளர்த்து படிக்க வைத்திருக்கிறார். பி.காம் படித்திருக்கும் அருண்குமார், கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று வந்திருக்கிறார். 

மேலும் அருண்குமார் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி கிடந்திருக்கிறார். இதை விஜயலட்சுமி பலமுறை கண்டித்திருக்கிறார். அருண்குமார் ஊரில் உள்ள இளைஞர்கள் யாரிடமும் சகஜமாகப் பேசி பழகாமல் தனியாக இருந்துவந்திருக்கிறார். மேலும் விஜயலட்சுமியிடம் அடிக்கடி கோபப்பட்டு பேசுவது சண்டை போடுவது என இருந்திருக்கிறார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறார். இதில் 50,000 ரூபாய் வரை அருண்குமார் இழந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மனமுடைந்து காணப்பட்டு வந்திருக்கிறார்.

கள்ளிமந்தையம் காவல் நிலையம்
கள்ளிமந்தையம் காவல் நிலையம்

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 19-ம் தேதி உடல்நிலை சரியில்லாத அவரின் தாய் விஜயலட்சுமி ஒட்டன்சத்திரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இரவு 11:45 மணிக்கு வீடு திரும்பியிருக்கிறார். எப்போதும் வீட்டின் திண்ணையில் படுத்திருக்கும் அருண்குமாரைக் காணவில்லை. பிறகு வீட்டுக்குள்ளும், அக்கம் பக்கத்திலும் தேடி கிடைக்கவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அருண்குமாரைத் தேடி வந்தோம். இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிணற்றில் சடலம் கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டபோது உயிரிழந்திருப்பது அருண்குமார் எனத் தெரியவந்தது. அவர் யாரிடமும் கடன் பெற்றிருந்தாரா, வேறு வகையில் தொந்தரவு இருந்ததா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். 

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இளம் பட்டதாரி இளைஞர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.