Published:Updated:

ஆசையைத் தூண்டு; லட்சங்களை அள்ளு - ஒரு நம்பர் லாட்டரியின் பின்னணி! #Endcorruption #stingoperation

நமது நிருபர்

ஆளுங்கட்சியினர், காவல் துறையினர் ஆசியோடு ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. இதன் ஆசையால் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது.

ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு
ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு

தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வெளிப்படையாக ஒரு நம்பர், இரண்டு நம்பர், மூன்று நம்பர், நான்கு நம்பர் லாட்டரி விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. குறிப்பாக சென்னை அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, கோயம்பேடு, கிண்டி, போயஸ்கார்டன் என முக்கியப் பகுதிகளில் `காட்டன்' என்ற பெயரில் லாட்டரி விற்பனை நடந்துவருகிறது. ஒரு மணிநேர இடைவெளியில், லாட்டரி ரிசல்ட் வாட்ஸ்அப் மூலம் வெளியிடப்படுகிறது. இதனால் ஆசையில், ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களை வாங்கி தினமும் பணத்தை பலர் இழந்துவருகின்றனர்.

ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு
ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பூந்தமல்லி வரதராஜபுரம், அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் பகுதி, ஆவடி ஆகிய பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது, வரதராஜபுரம் பகுதியில் நடந்த லாட்டரி விற்பனையை ரகசியமாக வீடியோ எடுத்தோம். அங்கு, கூலித் தொழிலாளிகள், ஆட்டோ டிரைவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்ளை வாங்குவதற்கு காலை முதல் வரிசையில் முண்டியடித்தபடி நின்றனர். லாட்டரிச் சீட்டு வாங்கியது தொடர்பாக துண்டுச் சீட்டில் அதன் நம்பர்கள் எழுதிக் கொடுக்கப்படுகிறது.

அதை சந்தோஷத்துடன் வாங்கிச் செல்பவர்கள் தங்களின் வாட்ஸ் அப் எண்களை லாட்டரிச் சீட்டு விற்பனை செய்பவர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை துண்டுச் சீட்டுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. துண்டுச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு அன்றாட வேலைகளுக்குச் செல்பவர்களின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பரிசு குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த அதிர்ஷ்ட மெசேஜ்க்காக லாட்டரிச் சீட்டுக்களை வாங்கியவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மெசேஜ் வந்ததும் பலர் அதிர்ச்சியடைவதும், விரல்விட்டு எண்ணும் நபர்கள் மகிழ்ச்சியடைவதும் தினமும் நடக்கும் வாடிக்கையாக உள்ளது.

"இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிந்தும் ஆளுங்கட்சியினரின் ஆசியோடுதான் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடக்கிறது. இதற்காகத் தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட தொகை மாமூலாகக் கொடுக்கப்படுகிறது. இதுதொடர்பாகச் செய்திகள் வெளியாகும்போது, பெயரளவில் மட்டும் சிலரைக் காவல் துறையினர் கைதுசெய்வதைக் கடமையாக வைத்துள்ளனர்" என்கின்றனர், லாட்டரிச் சீட்டு வாங்குபவர்கள்.

லாட்டரிச் சீட்டு விற்பனை
லாட்டரிச் சீட்டு விற்பனை

இதுகுறித்து மேலும் விஷயமறிய லாட்டரி வாங்கிய சிலரிடம் பேசினோம். (தங்களின் விவரங்கள் வெளியில் தெரியவேண்டாம் என்ற நிபந்தனையோடு நம்மிடம் அவர்கள் பேசினர்.) தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், "தினமும் லாட்டரிச் சீட்டு வாங்குவேன். என்றாவது ஒருநாள் பம்பர் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை எனக்குப் பரிசு கிடைத்துள்ளது. லாட்டரிச் சீட்டுகளை வாங்க தினமும் ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துவருகிறேன்" என்றார்

ஆட்டோ டிரைவர் ஒருவர், "நான் இங்கு தினமும் டீ குடிக்க வரும்போது குறிப்பிட்ட நம்பர்களைச் சொல்லி லாட்டரிச் சீட்டு கேட்பேன். அதை, துண்டுச் சீட்டிலும் எழுதிவாங்குவேன். பரிசுத் தொகைக்கு ஏற்ப நம்பர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, 15 ஆயிரம் ரூபாய் பம்பர் பரிசு என்றால் ஒரு நம்பருக்கு 10 ரூபாய் என்று வசூலிப்பார்கள். பம்பர் பரிசு 50 ஆயிரம் என்றால் ஒரு நம்பருக்கு 50 ரூபாய் வரை வசூலிப்பார்கள். ஒரு லட்சம் ரூபாய் பம்பர் பரிசு என்றால் ஒரு நம்பருக்கு 100 ரூபாய் கட்டணம். எத்தனை நம்பர்களை நாம் சொல்கிறோமோ அதற்கேற்ப பணம் கொடுக்க வேண்டும். அந்த நம்பர்களைத் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பார்கள். நாம் கூறிய நம்பர்களுக்குப் பரிசு விழுந்தால் அந்தத் தொகையை மாலைக்குள் கொடுத்துவிடுவார்கள். இதுவரை எனக்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை. ஆனால், நம்பிக்கையோடு லாட்டரிச் சீட்டுக்களைத் தொடர்ந்து வாங்கிவருகிறேன்" என்றார்.

லாட்டரிச் சீட்டு விற்பனை
லாட்டரிச் சீட்டு விற்பனை

வெளிமாநிலத் தொழிலாளி ஒருவர், "பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டுத்தான் லாட்டரிச் சீட்டுகளைத் தினமும் வாங்கிவருகிறேன். என்கூட வேலைபார்ப்பவர்கள் பலர் இங்கு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிவருகின்றனர். என் ஜாதகத்தில் எனக்கு லாட்டரியில் பணம் விழும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறினார். அந்த நம்பிக்கையில்தான் மூன்று வருடங்களாகத் தொடர்ந்து லாட்டரிச் சீட்டுகளை வாங்கிவருகிறேன்" என்றார்.

"ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையில் அந்தந்தப் பகுதிகளில் அரசியல்கட்சியினரே ஈடுபட்டுவருகின்றனர். ஒரு பேனா, துண்டுச் சீட்டு மட்டுமே இந்தத் தொழிலுக்கு மூலதனம். இதன்மூலம் பரிசு விழும் நபர்களை, அடுத்தடுத்து சீட்டு வாங்கவைத்து அவர்களின் வலையில் விழவைக்கிறார்கள், லாட்டரி விற்பனையாளர்கள். இதனால் அவர்கள் கொள்ளை லாபம் அடிப்பதுடன், அதை நம்பிச் செல்பவர்கள்தான் ஏமாந்துவிடுகின்றனர். அதேநேரத்தில், 'கேரளாவிலிருந்துதான் முடிவுகள் வெளியிடப்படும்' என்று கூறும் லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்களுக்கும், கேரள லாட்டரி விற்பனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பதுதான் நிஜம்.

லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களுக்கு மாதந்தோறும் பங்கு செல்வதாகச் செல்லப்படுகிறது. அந்தத் தரப்பினர்தான் காவல் துறை டீலிங்கைப் பேசி முடிக்கின்றனர். லாட்டரிச் சீட்டு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறையினர் கணக்குக் காட்டிவருகின்றனர். ஆனால், அவர்கள்மீது காவல் துறையினர் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடர்பாக வழக்குகளைப் பதியாமல், பெயரளவில் எளிதில் ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குகளை மட்டுமே பதிவுசெய்து தங்களின் விசுவாசத்தைக் காட்டிவருகின்றனர்.

சமீபத்தில் லாட்டரிச் சீட்டு விற்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்ததும் மீண்டும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் லாட்டரிச் சீட்டு விற்பனை குறித்து காவல் துறை உயரதிகாரிகளுக்குத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. லாட்டரி விற்பனையால் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன" என்கின்றனர், இதனால் பாதிக்கப்பட்டவர்கள்.

Representational image
Representational image

இதுகுறித்து நம்மிடம் போலீஸார் ஒருவர் ரகசியமாக பேசியதில், "லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தடுப்பது சுலபமான காரியமல்ல. லாட்டரிச் சீட்டு விற்பனைமூலம் சென்னையில் உள்ள சில காவல் நிலையங்களுக்குச் சட்டவிரோதமாக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மாமூலாக கிடைத்துவருகிறது. மேலும், சிலர் நியாயமாக லாட்டரிச் சீட்டு விற்பவர்களைப் பிடித்தாலும்கூட அவர்களை விடுவிக்க மேலிடத்திலிருந்து பிரஷர் வருகிறது. இதனால், லாட்டரிச் சீட்டு விற்பவர்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடிவதில்லை. சில காவல் நிலையங்களில் பெயரளவுக்கு மட்டுமே அவர்கள்மீது வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. லாட்டரிச் சீட்டு விற்பனைமூலம் அதிகாரிகளுக்கு தினமும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துவருகிறது. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு செல்கிறது.

லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தமிழகத்தில் தடை உள்ளது. இதனால், லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தடுத்துவருகிறோம். எங்களுக்குக் கிடைக்கும் ரகசியத் தகவலின் அடிப்படையில் லாட்டரிச் சீட்டு விற்பனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 'ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு' என்று அழைக்கப்படும் இந்த நூதன லாட்டரிச் சீட்டு விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. நிரந்தரமாக ஓரிடத்திலிருந்து அவர்கள் லாட்டரிச் சீட்டுகளை விற்பதில்லை. லாட்டரிச் சீட்டு விற்பவர்களும் அதை வாங்குபவர்களும் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றனர். மூன்று நம்பர்கள் கொண்ட வெள்ளைக் காகிதம்தான் லாட்டரிச் சீட்டு என்று சொல்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்தாலும் குற்றங்களை நிரூபிக்க முடிவதில்லை" என்றார்.

லாட்டரிச் சீட்டு விற்பனை செய்பவர்களின் பின்னணி குறித்து விசாரித்தபோது, தினமும் காலையில் துண்டுச் சீட்டில் நம்பர்கள் எழுதிக் கொடுக்கப்படுகின்றன. ஒரு நம்பர் என்றால் அதற்கு ஒரு தொகை, இரண்டு நம்பர் என்றால் அதற்கொரு தொகை என நம்பர்களுக்கு ஏற்ப பணம் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொழில் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர்.

இதுதவிர, ஒவ்வொரு பகுதியில் உள்ள அரசியல் கட்சியினரும் உள்ளனர். இவர்களுக்குத் தினமும் லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்துவருகிறது. லாட்டரிச் சீட்டுகளை விற்பவர்களுக்குத் தினமும் சம்பளமும், கமிஷனும் வழங்கப்படுகிறது. லாட்டரிச் சீட்டு விற்பவர்கள் குறித்து செய்திகளை வெளியிட்டால் காவல் நிலையங்களில் மாமூல் தொகை அதிகரிக்கப்படுவதுதான் அதிர்ச்சித் தகவல்.