Published:Updated:

`இறப்பதற்கு முன் அவள் கண்கள் என்னையே பார்த்தன'- பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கிய காதலன்

சயனைடு கலந்த குளிர்பானத்தைக் குடித்த காதலி இறந்துவிட்டார். ஆனால், காதலன் உயிர்பிழைத்துக் கொண்டார். இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 விஷம் குடித்த காதலி காஜல்
விஷம் குடித்த காதலி காஜல்

சென்னை சேப்பாக்கம், மியான்சாகிப் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் கடந்த மாதம் 10-ம் தேதி வாலிபரும் இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கினர். அவர்கள், தங்களை கணவன் மனைவி எனக் கூறினர். 11-ம் தேதி அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் மேலாளர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாற்றுச்சாவி மூலம் அறையைத் திறந்தனர். அப்போது, இளம்பெண் இறந்த நிலையிலும், வாலிபர் மயங்கிய நிலையிலும் பெட்டில் கிடந்தனர்.

காஜல்
காஜல்

பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே மருத்துவமனையில் மயங்கிக் கிடந்த வாலிபர் , சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``விடுதியில் இறந்து கிடந்தவர் சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி காஜல் (21) என்றும் அவருடன் தங்கியிருந்த வாலிபர் பெயர் சுமர்சிங் (23) என்றும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தோம்.

சுமர்சிங்கிற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் விஷம் குடிக்கவில்லை என்று தெரிவித்தனர். ஆனால், சுமர்சிங்கிடம் விசாரித்தபோது விஷம் குடித்ததாகத் தெரிவித்தார். முன்னுக்குப்பின் முரணான தகவலையடுத்து சுமர்சிங் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்துவந்தோம்.

சுமர்சிங்
சுமர்சிங்

இந்தச் சமயத்தில் காஜலின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்தது. அதில் அவரின் ரத்தத்தில் சயனைடு கலந்திருந்ததும் கழுத்து நெரிக்கப்பட்டதும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதொடர்பாக சுமர்சிங்கிடம் விசாரித்தபோது அவர் காஜலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஒரு மாதத்துக்குப்பிறகு சுமர்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.

சுமர்சிங், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘காஜலும், நானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தோம். காஜலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டார்கள். இந்தத் திருமணத்தில் காஜலுக்கு விருப்பம் இல்லை. இந்த உலகில் நாம் சேர்ந்துதான் வாழ வழியில்லை. அதனால் சேர்ந்து சாவோம் என்று காஜல் என்னிடம் கூறினார். ஆனால், தற்கொலை செய்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. காஜலுக்காக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

காஜலின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்தது. அதில் அவரின் ரத்தத்தில் சயனைடு கலந்திருந்ததும் கழுத்து நெரிக்கப்பட்டதும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணை அதிகாரி

எப்படி தற்கொலை செய்யலாம் என இணையதளத்தில் தேடினேன். அப்போது சயனைடு குடித்து தற்கொலை செய்வது குறித்த விவரங்களைச் சேகரித்தேன். சயனைடை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். அப்போது சயனைடை என்ன தேவைக்காக ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று சம்பந்தப்பட்ட கம்பெனியிலிருந்து என்னிடம் விளக்கம் கேட்டனர். தங்க நகை வியாபாரம் செய்துவருவதாகவும் தங்கத்தை கரைக்க சயனைடு தேவைப்படுவதாகவும் கூறினேன். அதன்பிறகுதான் சயனைடு எனக்கு கிடைத்தது.

லாட்ஜில் அறை எடுத்து தங்கியதும் காஜலிடம் மனம்விட்டு பேசினேன். அப்போதுகூட அவர் தற்கொலை செய்யும் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. அதன்பிறகு குளிர்பானத்தில் சயனடை கலந்தேன். அதை நானும் காஜலும் குடிக்கத் தொடங்கினோம். முழுவதையும் காஜல் குடித்தார். ஆனால், நான் குடிக்காமல் குளிர்பானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைக் கவனித்த காஜல் ஏன் குடிக்கவில்லை என்று கேட்டார். அதற்கு நான் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிப்பதுபோல நடித்தேன்.

சயனைடை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். அப்போது சயனைடை என்ன தேவைக்காக ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று சம்பந்தப்பட்ட கம்பெனியிலிருந்து என்னிடம் விளக்கம் கேட்டனர். தங்க நகை வியாபாரம் செய்துவருவதாகவும் தங்கத்தைக் கரைக்க சயனைடு தேவைப்படுவதாகவும் கூறினேன். அதன்பிறகுதான் சயனைடு எனக்கு கிடைத்தது.
சுமர்சிங்

சயனைடு கலந்த குளிர்பானத்தை குடித்த காஜலின் உயிருக்காகப் போராடினார். அவளின் கண்கள் என்னையே பார்த்தன. நானும் பெட்டில் மயங்கி விழுவதைப் போல நடித்தேன். அதன்பிறகும் காஜலின் உயிர்பிரியவில்லை. இதனால் துப்பட்டாவை எடுத்து அவளின் கழுத்தை நெரித்தேன். அப்போது கட்டிலில் மோதி அவளின் தலையில் காயம் ஏற்பட்டது. காஜலின் உயிர் பிரிந்ததும் நான் போலீஸ் வரும் வரை மயங்கிக் கிடப்பதுபோல நடித்தேன். ஆனால், போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

காதலன் சுமர்சிங் ஆரம்பத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறிய தகவலும் தற்போது அளித்த தகவலும் முரண்பாடாகவே இருந்தது. சிகிச்சை பெறும்போது இருவரும் விஷம் குடித்தோம் என்று கூறினார். ஆனால் விஷமே குடிக்காமல் சுமர்சிங் குடிப்பதுபோல நடித்துள்ளார். சுமர்சிங் மீது ஆரம்பத்திலிருந்தே காஜலின் குடும்பத்தினர் சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் கூறிவந்தனர். ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் சுமர்சிங் மீது போலீஸாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காஜலின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட், சுமர்சிங்கின் மருத்துவ ரிப்போர்ட் மற்றும் சுமர்சிங் முதலில் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் சிக்கிக்கொண்டார் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

Representational image
Representational image

இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸார் சந்தேக மரணப் பிரிவில் பதிவு செய்திருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். ஒரு மாதத்துக்குப்பிறகு காதலன் சுமர்சிங்கை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.