Published:Updated:

`பிணவறையில் அவளின் முகத்தைப் பார்த்தேன்!'- 4 பக்கத்துக்கு டைரி எழுதிவிட்டு உயிரைவிட்ட காதலன்

எஸ்.மகேஷ்

``எங்களுக்குள் இருந்த மனவருத்தம் அவளின் பிறந்தநாளில் சரியாகிவிடும் என நம்பினேன். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது'' என்று உதவி இயக்குநராக ஆசைப்பட்ட கவியரசு டைரியில் எழுதிவைத்துள்ளார்.

தற்கொலை செய்த கவியரசு
தற்கொலை செய்த கவியரசு

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கவியரசு (26). விசுவல் கம்யூனிகேசன் படித்தவர். சினிமாவில் உதவி இயக்குநராக வாய்ப்புகளைத் தேடிவந்தார். இந்தநிலையில் மதுரவாயலில் தங்கியிருக்கும் நண்பர்கள் வீட்டுக்கு கவியரசு சில நாள்களுக்கு முன் சென்றார். சம்பவத்தன்று நண்பர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்டனர். கவியரசு மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.

கவியரசு
கவியரசு

அறையைப் பூட்டிய கவியரசு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவை நீண்ட நேரமாகியும் தட்டியும் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது கவியரசு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார் கவியரசுவின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கவியரசு தற்கொலை செய்து கொண்ட தகவலும் அவரின் பெற்றோருக்கு போலீஸார் தெரிவித்தனர்.

தற்கொலை
தற்கொலை

அவர்கள் கவியரசுவின் சடலத்தைப் பார்த்து கதறினர். தொடர்ந்து போலீஸார் கவியரசு தற்கொலை குறித்து விசாரித்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்ட அறையிலிருந்து டைரி ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அதில் கவியரசுவின் தற்கொலைக்கான காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது.

கவியரசு தற்கொலை செய்வதற்கு முன், அந்த டைரியில் 4 பக்கத்துக்கு எழுதியுள்ளார். அதில், ``ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண்ணை அவர் உயிருக்கு உயிராக காதலித்துள்ளார்.

எங்களைப் போன்ற காதலர்கள் இந்த உலகில் யாரும் இருக்கமாட்டார்கள். அவளுக்கும் எனக்கும் மனவருத்தம் ஏற்பட்டது. எப்படியும் அவளின் பிறந்தநாளில் ஒன்று சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்
கவியரசு டைரியில் எழுதிய வரிகள்

ஆனால், என் காதலியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல செல்போனை எடுத்தேன். அதில், பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி அவள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மெசேஜ் வந்திருந்தது. அதைப்பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

அவளைப் பார்க்க வீட்டுக்குச் சென்றேன். ஆனால் அங்குள்ளவர்கள் என்னை அவளின் முகத்தைக்கூட பார்க்கவிடாமல் தடுத்துவிட்டனர். அவளை எப்படியாவது பார்க்கவேண்டும் எனத் துடித்தேன். ஒருவழியாக பிணவறையில் அவளின் முகத்தைப் பார்த்தேன். அவள் இல்லாத வாழ்க்கை எனக்கும் வேண்டாம். அவள் இல்லாத இந்த உலகில் வாழ எனக்குப் பிடிக்கவில்லை. அவள் சென்ற இடத்துக்கே நானும் செல்கிறேன்" என்று எழுதி வைத்துள்ளார்

கவியரசு
கவியரசு

அந்த டைரியில் கவியரசு, தன்னுடைய காதல் கதையை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காதலியின் பெயரை பலதடவை எழுதி வைத்துள்ளார். அதோடு கவியரசுவின் சொந்த ஊர் கரூர். இதனால் அவர், ``என்னை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டாம். என் காதலி இறந்த சென்னையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். என்னுடைய இந்தக் கடைசி ஆசையாவது நிறைவேற்றுங்கள்" என்று எழுதியுள்ளார்.

இதையடுத்து காதலி இறந்த துக்கத்தில் இருந்த கவியரசு, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கவியரசு நண்பர்கள் மற்றும் அவரின் உறவினர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அவர்கள், ``கடந்த ஒரு மாதமாக கவியரசு யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். பிரபலமான சினிமா இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பெரிய இயக்குநராக கோலிவுட்டில் வலம் வர வேண்டும் என்பதுதான் கவியரசுவின் லட்சியம். அதற்காகத்தான் விசுவல் கம்யூனிகேசன் படித்தார்.

டைரி
டைரி

கடந்த சில மாதங்களாக வேலை தேடி வந்தார். இதற்காக அம்பத்தூர் கள்ளிக்குப்பம் வீட்டில் தங்கியிருக்காமல் நண்பர்கள் தங்கியிருந்த மதுரவாயலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தார் கவியரசு. எங்களிடம் கூட (நண்பர்கள்) அவர் மனம்விட்டு பேசுவதில்லை. செல்போனில், பெற்றோரிடம் பேசுவார். கவியரசு, இப்படியொரு முடிவை எடுப்பார் என்று கனவில்கூட நாங்கள் நினைக்கவில்லை. கடந்த ஒருவாரமாக அவரின் நடவடிக்கைகள் எல்லாம் வேறுவிதமாக இருந்தது" என்று கூறியுள்ளனர்.

கவியரசுவின் பெற்றோரிடம் போலீஸார் விசாரித்தபோது, ``எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். கவியரசு, சினிமா இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் ஒரு பெண்ணை காதலித்த தகவல் எங்களுக்குத் தெரியாது. அந்தத் தகவல் தெரிந்திருந்தால் கவியரசுவின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்திருப்போம்" என்று கண்ணீர்மல்க கூறியுள்ளனர்.

 தொப்பி அணிந்தப்படி தற்கொலை செய்த கவியரசு
தொப்பி அணிந்தப்படி தற்கொலை செய்த கவியரசு

கவியரசுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற உள்ளதாக அவரின் பெற்றோர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இன்று கவியரசுவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதன்பிறகு சென்னையில் அவருக்கு இறுதி அஞ்சலி நடத்தப்படவுள்ளதாக போலீஸாரிடம் கவியரசுவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கவியரசு தற்கொலை செய்யும்போது தலையில் தொப்பி அணிந்துள்ளார். அவரின் முகநூல் பக்கத்தில் தொப்பி அணிந்தப்படி புகைப்படத்தைக் கவியரசு பதிவு செய்துள்ளார். அதில் `புரட்சி' என்பது அன்பினால் கட்டப்படுகிறது என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது.