Published:Updated:

ஆறு ஆண்டுக்கால காதல்; திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... விபரீத முடிவெடுத்த காதலர்கள்!

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த பட்டதாரி காதலர்கள், திடீரென வீட்டில் ஒரே புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

ஆறு ஆண்டுக்கால காதல்; திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... விபரீத முடிவெடுத்த காதலர்கள்!

ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த பட்டதாரி காதலர்கள், திடீரென வீட்டில் ஒரே புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

சென்னையை அடுத்த பீர்க்கன்காரணை, கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பி.காம் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இவரின் சொந்த ஊர் உத்தரமேரூர். ஜெயராமனுக்கும் உத்தரமேரூரைச் சேர்ந்த யுவராணிக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. யுவராணி, எம்.டெக் படித்திருக்கிறார். இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். அதனால் காதல் ஜோடி, மனவருத்தத்தில் இருந்தது.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

இந்த நிலையில் யுவராணி, நேற்று (22.11.2022) ஜெயராமன் வீட்டுக்கு வந்தார். அதனால் ஜெயராமனும் வேலைக்குச் செல்லாமல் யுவராணியுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு ஜெயராமன் வீட்டின் கதவு நீண்ட நேரமாக பூட்டியே இருந்தது. மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார் ஜெயராமனின் அம்மா. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயராமனும், யுவராணியும் ஒரே புடவையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராமனின் அம்மா, கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

பின்னர், பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காதல் ஜோடியின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயராமனின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்துகொண்ட யுவராணிக்கு, அவரின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். அதற்கு யுவராணி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய காதலன் ஜெயராமனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி யுவராணி கூறியிருக்கிறார். அதனால்தான் வீட்டைவிட்டு வெளியேறிய யுவராணி, காதலன் ஜெயராமன் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, ஜெயராமன் வீட்டில் அவரின் அம்மா, சகோதரர் ஆகியோர் வேலைக்குச் சென்றுவிட்டதால் இருவரும் தனியாக இருந்திருக்கின்றனர். மதியம், ஆன் லைனில் உணவை ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டிருக்கின்றனர். பின்னர்தான் இருவரும் சேர்ந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதத்தையும் ஆய்வுக்குட்படுத்த முடிவு செய்திருக்கிறோம். இருவரின் செல்போன்களையும் கைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.