Published:Updated:

அ.தி.மு.க பெண் பிரமுகர், மகனைக் கொல்ல ஸ்கெட்ச்!- அண்ணாசாலையைப் பதறவைத்த வெடிகுண்டு வீச்சு

சென்னை அண்ணாசாலை, ரிச்சி தெரு அருகே திடீரென நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. நடுரோட்டில் விழுந்த வெடிகுண்டு வெடித்து சிதறியபோது அ.தி.மு.க பெண் பிரமுகரை சுற்றி வளைத்த கும்பல் அரிவாளால் வெட்டியது.

வெடிகுண்டு வீசப்பட்ட இடம்
வெடிகுண்டு வீசப்பட்ட இடம் ( ஸ்ரீனிவாசலு )

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் மலர். வழக்கறிஞரான இவர் அ.தி.மு.க பிரமுகர். இவரும் மகன் அழகுராஜும் சென்னை திருவல்லிக்கேணி அண்ணாசாலை, ரிச்சி தெரு அருகே உள்ள டேம் சாலையில் இன்று முற்பகல் ஆட்டோவில் வந்தனர். அப்போது, மர்மக் கும்பல் ஆட்டோவின் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியது. குறி தவறிய குண்டு நடுரோட்டில் விழுந்து வெடித்துச் சிதறியது.

அதிமுக பிரமுகர்
அதிமுக பிரமுகர்

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அண்ணா சாலை ரிச்சி தெருவின் அருகில் இந்தச் சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். வெடிகுண்டு வீச்சிலிருந்து தப்பிய மலரையும் அழகுராஜையும் சுற்றிவளைத்த கும்பல் அரிவாளால் வெட்டினர். அந்தக் கும்பலிடமிருந்து அழகுராஜ் தப்பி ஓடி அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குள் புகுந்தார். ஆனால், மலர் மட்டும் கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பியது.

வெடிகுண்டு வீசியதில் அழகுராஜின் உடலிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மலர், அழகுராஜ் ஆகியோரை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் வெடிகுண்டு மாதிரிகளை போலீஸார் சேகரித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கம் போல அந்தப்பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஆட்டோ
ஆட்டோ
ஸ்ரீனிவாசலு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த 2014-ம் ஆண்டு தோட்டம் சேகர் என்ற பிரபல ரவுடி அயோத்திக் குப்பம் வீரமணி கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தோட்டம் சேகருக்கும் ஜாம்பஜாரில் உள்ள ரவுடிக் கும்பலுக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துவந்தது. சேகர் கொலை செய்யப்பட்ட பிறகு அவருக்கு வேண்டப்பட்டவரான அழகுராஜிக்கும் அந்த ரவுடிக் கும்பலுக்கும் பகை இருந்துவந்தது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸ்காரர் ஒருவரைத் தாக்கியதாக ரவுடி ஆனந்தன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த என்கவுன்டருக்குப் பின்னணியில் அழகுராஜ் டீம் இருப்பதாக ஆனந்தனின் கூட்டாளிகள் கருதினர். அதுபோல காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கொலைக்கும் அழகுராஜ் காரணம் என்று அந்தத் தரப்பினர் கருதினர். இதனால் அவரைக் கொலை செய்ய அந்த இண்டு டீம்களும் ஸ்கெட்ச் போட்டுவந்தது. இந்த நிலையில் அழகுராஜ், அவரின் அம்மா மலர் ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய தகவல் காங்கிரஸ் பிரமுகர், ஆனந்தன் கூட்டாளிகளுக்குக் கிடைத்தது.

காவல் நிலையத்தில் ஆட்டோ
காவல் நிலையத்தில் ஆட்டோ

உடனே அவர்கள், முதலில் ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். ஆனால், குறி தவறியதால் நாட்டு வெடிகுண்டு ரோட்டில் விழுந்து வெடித்தது. இதனால் ஆட்டோலிருந்து இறங்கிய அழகுராஜ், மலர் மற்றும் சிலர் தப்பி ஓடினர். அப்போது மலர் மட்டும் அந்தக் கும்பலிடம் சிக்கியுள்ளார். அவரை வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பிஓடிவிட்டது. நடுரோட்டில் தன்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறிய வழக்கறிஞர் மலரை அங்குள்ளவர்கள் மீட்டனர். அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விவரங்கள் சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர். வெடிக்காத நிலையில் நாட்டு வெடிகுண்டு ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது.

சீன அதிபரும் பிரதமர் மோடியும் நாளை மாமல்லபுரத்துக்கு வருகின்றனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு வளைத்துக்குள் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் இருந்தசமயத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.