Published:Updated:

``மன்னிப்பு கேட்டுட்டா விட்டுட முடியுமா?” - பரபரப்பாகும் மதகுபட்டி வழக்கு #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

``கலவரக்காரர்கள் மன்னிப்பு கேட்டால் போதும் என்றால் காவல் நிலையங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு கலவரம் ஏற்படும்" எனக் காவல்துறையினர் அச்சம் தெரிவிக்கிறார்கள். #TamilnaduCrimeDiary

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் 2016, மே 23-ம் தேதி குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சதயவிழா நடத்த அனுமதி மறுத்தது தொடர்பாக ஏற்பட்ட சிறிய பிரச்னை, மதகுபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைக் கலவர பூமியாக மாற்றியது. காவல்நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சுமார் 228 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு சிவகங்கை மாவட்டத்தில் மிகப்பெரும் வழக்காகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 228 பேரில் 110 பேர் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை விரைவில் முடியவுள்ளது. இச்சூழலில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் வசிக்கும் 6 கிராமங்களில் காவல்துறையினரிடம் மன்னிப்பு கோரியும் அரசுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்கு இழப்பீடு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை நீதிமன்றத்திலும் உறுதிமொழியாகக் கூறவுள்ளனர். இதைத் தொடர்ந்து வழங்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.

`பேய் நகரத்தைப் போல இருந்தது!’ -வுகானிலிருந்து இந்தியர்களை மீட்ட விமானிகளின் திகில் அனுபவங்கள்

காவல்துறையினரை கொலைவெறியோடு தாக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான வழக்கில், மன்னிப்பு கோரினார்கள் என்பதற்காக குற்றவாளிகளை எளிமையாக விடுவித்துவிட்டால் தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களையும் அரசு சொத்துகளையும் சூறையாடுவதும் தாக்குவதும் ஒருபொருட்டாகவே இருக்காது, மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என சிவகங்கை காவல்துறையினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

மதகுபட்டி சிவன் கோயில்
மதகுபட்டி சிவன் கோயில்

இதுகுறித்து தென்மண்டல காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``மதகுபட்டி கேஸ் தொடர்பாக நான் அறிந்துள்ளேன். அச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய வழக்கு. தங்களின் உறவினர்களுக்காகக் காவல் துறையினரையே சமூகவிரோதிகள் அடித்துள்ளனர். டி.எஸ்.பி உட்பட பல காவலர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. காவல்நிலையம் சூறையாடப்பட்டு சுடுகாடுபோல் காட்சியளித்தது. அரசு சொத்துகள் அதிகளவு சேதப்படுத்தப்பட்டன. இப்படிப்பட்ட முக்கியமான வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டு இழப்பீடு வழங்கினால் போதும் என்று வழக்கை முடித்துவிடலாம் எனப் பேச்சு எழுந்துள்ளது.

இப்படி குற்றவாளிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துவிட்டால் இது தொடர்கதையாகிவிடும். போலீஸாரை தாக்கிவிட்டு, மன்னிப்பு கோரிவிட்டால் விட்டுவிடுவார்கள் என்கிற தவறான முன்னுதாரணம் ஏற்பட்டுவிடும். காவல் நிலையங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலாக மாறிவிடும். எனவே, இந்த வழக்கை வெறும் பேச்சுவார்த்தையாக முடிக்காமல், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் போலீஸை குறிவைத்து கலவரங்கள் ஏற்படாமல் இருக்கும்" என்றார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, வாக்கு வங்கிக்காக இப்பிரச்னை தொடர்பாக மேல் இடங்களில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுவும் போலீஸார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மதகுபட்டி கிராம மக்கள் சார்பில் பேசியவர்கள், ``கலவரம் நடந்த இரவில் காவல்துறைக்கு மட்டுமல்ல, எங்கள் சமுதாய மக்களுக்கும்தான் பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறை நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே கூட்டத்தைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால், கூட்டத்தை கூடவிட்டு வேடிக்கை பார்த்த பின் தடியடி நடத்தினர். போலீஸ் அடி வலி தாங்க முடியாமல்தான் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், போலீஸ் கடுமையாக நடந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பைக்குகளை ஜே.சி.பி, இயந்திரம் வைத்து நொறுக்கியது. அது தவறு இல்லையா, நாங்கள் பாதிக்கப்படவில்லையா?

sivaganga palace
sivaganga palace

இருந்த போதிலும் நீதிமன்றம் கூறியதால் பல கிராமக்கள் ஒன்று கூடி மன்னிப்பு கோரி காவல்துறையை மதிக்கும் விதமாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அவர்கள் குறிப்பிட்ட இழப்பீடு தொகையையும் கட்ட உள்ளோம். மேலும், இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்கும்படி இனி செயல்படுவோம்" என்றனர்.

`பேரல்களில் மிதவைக் குடில்; நான்கு நாள்களாக தியானம்!'- கடலோர காவல்படைக்கு அதிர்ச்சிகொடுத்த மீனவர்

சிவகங்கை மாவட்டம் சமூக ஆர்வலர்களிடம் பேசினோம். ``மதகுபட்டி பிரச்னை மிகவும் பரபரப்பு ஏற்படுத்திய முக்கியமான வழக்கு. இதில் சரியான தீர்ப்பு கிடைத்திட வேண்டும். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு அடைந்துவிடக் கூடாது. இதில் அவர்கள் மீது வழக்கு சூழ்ந்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதே சமயம் தவறு செய்த நபர்களை எளிமையாக விட்டுவிட்டால் காவல்துறையின் மீதும், சட்டத்துறையின் மீதும் மரியாதை களைந்துவிடும். எனவே, இந்த வழக்கில் காவல்துறையினரும் பொதுமக்களும் பாதிக்காத வகையில் தீர்ப்பு அமைந்திட வேண்டும்” என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு